(து - ம்.) என்பது, தலைமகன் ஒருசிறைவந்து உறைவதனை அறிந்த தோழி சொல்லியதுமாகும். (உரை இரண்டற்குமொக்கும்.)
(இ - ம்.) இதற்கு, "நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| ஒலியவிந்து அடங்கி யாமம் நள்ளெனக் |
| கலிகெழு பாக்கம் துயின்மடிந் தன்றே |
| தொன்றுஉறை கடவுள் சேர்ந்த பராரை |
| மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத் |
5 | துணைபுணர் அன்றில் உயவுக்குரல் கேட்டொறும் |
| துஞ்சாக் கண்ணள் துயரடச் சாஅய் |
| நம்வயின் வருந்தும் நன்னுதல் என்பது |
| உண்டுகொல் வாழி தோழி தெண்கடல் |
| வன்கைப் பரதவர் இட்ட செங்கோல் |
10 | கொடுமுடி அவ்வலை பரியப் போகிக் |
| கடுமுரண் எறிசுறா வழங்கும் |
| நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத் தானே. |
(சொ - ள்.) தோழி வாழி - தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக; ஒலி அவிந்து அடங்கி யாமம் நள் என - ஊர் ஓசையவிந்து அடங்கி இரவு நடுயாம மாகலும்; கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்று - கட்குடியின் செருக்கு அடங்கிப் பாக்கமும் துயிலா நின்றதே இப்பொழுது நம் காதலனை நினைந்து நாம் வருந்துதல் போல; தெள் கடல் வன்கைப் பரதவர் இட்ட செங்கோல் கொடுமுடி அவ் வலை - தெளிந்த கடலின்கண்ணே வலிய கையையுடைய பரதவ மாக்கள் மீன் பிடித்தற்கு நெடுக இட்ட சிவந்த நிறத்தையும் வலித்துக் கட்டிய முடியையும் உடைய அழகிய வலை; பரியப்போகிக் கடு முரண் எறி சுறா வழங்கும் - பீறுபடக் கிழித்துச் சென்று அச்சத்தைச் செய்யும் வலிமையுடைய தன் மருப்பினாற் கொல்ல வல்ல சுறாமீன் இயங்கா நிற்கும்; நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தான் - நீண்ட நீர்த்துறையுடைய தலைவனது உள்ளத்திலும்; தொன்று உறைகடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை வாங்குமடல் குடம்பைத் துணை புணர் அன்றில் - பண்டு தொட்டு உறைகின்ற கடவுள் தங்கப்பெற்ற பருத்த அடியையுடைய ஊர்ப்பொதுவிலுள்ள பனையின் வளைந்த மடலிடத்துச் செய்த குடம்பையின் கண் இருந்து தன் பெடையைப் புணர்கின்ற மகன்றிலின்; உயவுக்குரல் கேள் தொறும் - வருத்தந்தரும் குரலைக் கேட்குந்தோறும்; நல்நுதல் துஞ்சாக் கண்ணள் துயர் அட - நல்ல நுதலினையுடைய நம் காதலி கண் உறங்காது காமநோய் வருத்துதலானே; சாஅய் நம் வயின் வருந்தும் என்பது உண்டுகொல் - உடம்பு மெலிந்து நம்மீது வருத்தமடையாநிற்பள் என்பதும் உண்டாகுமோ? ஆராய்ந்து கூறாய், எ - று.
(வி - ம்.) மன்றப்பெண்ணை - ஊர்ப்பொதுப்பனை. தம் குலதெய்வத்தையும் ஊர்ப் பொதுத் தெய்வத்தையும் பனையிலேற்றுவித்து வணங்கிவருவது தொன்றுதொட்டு வரும் நெய்தல் நிலத்து வழக்கு.
உசாவுவாருண்டாயவிடத்துச் சிறிதாற்றலாமெனினும், அதுவும் இல்லாதபடி பாக்கந் துயில்மடிந்ததேயென்று இரங்கினாள்.
உள்ளுறை :- பரதவரிட்ட வலையைக் கிழித்துச்சென்று சுறா இயங்கும் என்றது, நாம் நமது அன்பினாலே பிணிக்கவும் தலைவன் அதனை இகந்து சென்று வைகாநின்றானென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) சேர்ப்பன் நெஞ்சத்தும் நன்னுதல் நம் வயின் வருந்தும் என்பது உண்டு கொல்? என இயைத்துக்கொள்க, 'பரியப்போகி' என்றும் பாடம்.
(303)