திணை : குறிஞ்சி.

    துறை : இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாகிய தலைமகள் வன்பொறை எதிர்மொழிந்தது.

    (து - ம்.) என்பது, வரைந்துகொள்ளாது பலநாளும் களவில்வந்தொழுகுந் தலைமகனை நினைந்து வருநெறியின் ஏதங்கருதி வருந்திய தலைமகள், தன்னை வருந்தாதேயென்று தோழி பலகாலுங் கூறுதலானே தாங்காது எதிர்மொழிபவள் தலைவனை முயங்கினபோது எழிலும், பிரிந்தபோது பசலையுந் தோன்றுதலால், அவன்மார்பு இன்பமும் துன்பமும் உடையதென்று கூறுவதுடன் உள்ளுறையால் அவன் விரைய மணஞ்செய்து கொள்வானாக எனவும் பரிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதி கொள்க.

    
வாரல் மென்தினைப் புலவுக்குரல் மாந்திச் 
    
சாரல் வரைய கிளையுடன் குழீஇ 
    
வளியெறி வயிரின் கிளிவிளி பயிற்றும் 
    
நளியிருஞ் சிலம்பின் நன்மலை நாடன் 
5
புணரிற் புணருமார் எழிலே பிரியின் 
    
மணிமிடை பொன்னின் மாமை சாயஎன் 
    
அணிநலஞ் சிதைக்குமார் பசலை அதனால் 
    
அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும் 
    
இன்பமுந் துன்பமும் உடைத்தே 
10
தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே. 

    (சொ - ள்.) கிளி சாரல் வரைய கிளையுடன் குழீஇ - கிளிகள் சாரல் பொருந்திய மலையிலுள்ள சுற்றத்தொடு சேர்ந்து; வாரல் மெல் தினைப் புலவுக்குரல் மாந்தி - தாம் கொள்ளையிடுதற்குரிய மெல்லிய தினையின் மணம் நிரம்பிய கதிரைக் கொய்து தின்று; வளி எறி வயிரின் விளி பயிற்றும் நளி இருஞ் சிலம்பின் நல் மலைநாடன் - காற்றினால் ஒலியெழுப்பும் கொம்பு வாச்சியம் போல ஒன்றனையொன்று அழையா நிற்கும் நெருங்கிய பக்க மலைகளையுடைய நல்ல மலைநாடன் வந்து; புணரின் ஆர் எழில் புணரும் - என்னைப் புணர்ந்த காலமெல்லாம் எனக்கு நிரம்பிய நல்ல அழகு உண்டாகாநிற்கும்; பிரியின் - அவன் என்னைப் பிரிந்தாலோ; மணி மிடை பொன்னின் மாமை சாய - நீலமணியிடைப்பட்ட பொன்போல எனது மெய்யின் மாந்தளிரின் தன்மை கெட; அணி நலம் பசலை சிதைக்கும் - என் அழகையும் நலத்தையும் பசலை தோன்றிக் கெடுக்காநிற்கும்; அதனால் தண் கமழ் நறுந்தார் விறலோன் மார்பு - ஆதலினால் தண்ணிய தாய் மணங்கமழும் நறிய மாலையணிந்த வலிமையுடைய நம் காதலன் மார்பானது; அசுணங் கொல்பவர் கைபோல் நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்து - இசையறிவிலங்காகிய அசுணமானைக் கொல்பவருடைய கையைப் போலப் பெரிதும் இன்பமும் துன்பமும் உடையதா யிராநின்றது; எ - று.

    (வி - ம்.) வாரல் - நீளுதலுமாம். ஆர் இரண்டும் அசை நிலை. அசுணங்கொல்பவர் முதலில் யாழை வாசித்துப் பின்பு செவியில் ஏற்கவொண்ணாத பறையை முழக்கி அவற்றைக் கொல்வதனால் இன்பமுந்துன்பமும் உடைமையின் அதனை உவமித்தார்.

    உள்ளுறை :- கிளி கிளையொடு குழீஇ வந்து தினையைத் தின்று விளி பயிற்றும் நாடனென்றது, அப்படிப்போலத் தலைமகனும் அந்தணர் சான்றோர் உடன் குழீஇ வந்து என்னை மணந்து என்நலனைத் துய்த்து மகிழ்ந்து விளையாடப்பெறுவானாகவென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) வாரல் மென்தினைப் புலர்வுக்குரல் என்றும் பாடம். இதுவே பொருத்தமான பாடம். புலர்வுக்குரல் - முதிர்ந்துலர்ந்த கதிர். புலவு என்பது புலானாற்றத்தையே சிறப்பாகக் குறிக்குமொரு சொல்லாகலின் என்க.

(304)