திணை : பாலை.

    துறை : (1) இது, நற்றாய் தோழிக்குச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைமகன் தலைமகளை இரவில் உடன்கொண்டு சென்றனன் என்று செவிலியாலறிந்த ஈன்ற தாய் அஃது, அறநெறியென்று கொண்டும் பிரிதல் பொறாது தோழியை நெருங்கி, 'மகளே, நின் தோழி ஆடிய பந்தும் அவள் ஓம்பி வந்த வயலையுங் கொடியும், விளையாடிய நொச்சியும், அவளில்லாது தனியே கண்ட சோலையும்என்னை வருத்தாநிற்ப. அதனொடு நில்லாமே காட்டின்கண்ணே நண்பகலிற் புறவின் குரலைக் கேட்டு, அமர்த்த நோக்கத்தால் அவ் விடலை வருந்தவுஞ் செய்யுமோவென என்னுள்ளம் துயரம் எய்துவதேயென்றழிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "தன்னும் அவனும் அவளும் சுட்டி . . . . போகிய திறத்து நற்றாய் புலம்பலும்" (தொல். அகத். 36) என்னும் விதிகொள்க.

    துறை : (2) மனைமருட்சியுமாம்.

    (து - ம்.) என்பது, ஈன்ற தாய் மனையின்கண்ணே இருந்து மருண்டு சொல்லியதுமாம். (உரை இரண்டற்கு மொக்கும்.)

    (இ - ம்.) இதுவுமது.

    
வரியணி பந்தும் வாடிய வயலையும்  
    
மயிலடி அன்ன மாக்குரல் நொச்சியும் 
    
கடியுடை வியன்நகர் காண்வரத் தோன்றத் 
    
தமியே கண்டதண் தலையுந் தெறுவர 
5
நோயா கின்றேம் மகளைநின் தோழி  
    
எரிசினந் தணிந்த இலையில் அம்சினை  
    
வரிப்புறப் புறவின் புலம்புகொள் தெள்விளி 
    
உருப்பவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி 
    
இலங்கிலை வென்வேல் விடலையை 
10
விலங்குமலை ஆர்இடை நலியுங்கொ லெனவே. 

    (சொ - ள்.) மகள் வரி அணி பந்தும் வாடிய வயலையும் - மகளே! நின் தோழி விளையாடிய வரிந்து அணிந்த பந்தும் நீர்விடுவார் இன்மையாலே வாடிய அவளோம்பி வந்த வயலைக் கொடியும்; மயில் அடியன்ன மாக் குரல் நொச்சியும் - சிற்றில் கோலி விளையாடிய மயில் போன்ற இலையையும் கரிய பூங்கொத்தையும் உடைய நொச்சியும்; கடி உடை வியன் நகர்காண்வரத் தோன்ற - காவலையுடைய அகன்ற மாளிகையிடத்து எதிரே காணும்படி தோன்றாநிற்ப; தமியே கண்ட தண்டலையும் தெறுவர - அவளின்றித் தனியே கண்ட சோலையும் என்னை வருத்தாநிற்ப; நின் தோழி எரி சினம் தணிந்த இலை இல் அம்சினை வரிப்புறப் புறவின் புலம்புகொன் தெள்விளி - அவற்றொடு, நின் தோழி ஆதித்த மண்டிலம் கொதிப்புச் சிறிது அடங்கிய மாலையின் முற்படு பொழுதில் இலையுதிர்ந்த அழகிய மரக்கிளையில் இருந்து வரி பொருந்திய முதுகினையுடைய புறாவினது அச்சங்கொள்ளத்தக்க தெளிந்த கூவுதலானாகிய ஓசையைக் கேட்டு; உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி - வெப்பமிக்க பொழுதின்கண் வருந்திப் போர் செய்யப் புகுந்தாற்போன்ற கண்ணையுடையாளாய் நோக்கி; இலங்கு இலை வென் வேல் விடலையை மலை விலங்கு ஆர்இடை நலியும் கொல் என - இலங்கிய இலைவடிவாகிய வெற்றி பொருந்திய வேற்படையை யேந்திய காதலனை மலை குறுக்கிட்ட அரிய நெறியிடத்தே துன்புறுத்துங்கொல்லோ? என்றே; நோய் ஆகின்றேம் - எனக்கு வருத்தம் உண்டாகா நின்றது; எ - று.

    (வி - ம்.) மகளை, ஐ : சாரியை. நலியுமோவென நோயாகின்று எனக் கூட்டுக.

    தன் புதல்வி காதலனொடு கலந்து இனிய வாழ்வெய்தக் கண்டால் இப்பொழுது அவளின்றிக் காணப்படும் பந்து முதலாயவற்றானெய்துந் துயரம் எல்லா மொருங்கே யகலும்; அவ்வண்ணமின்றி அவனை வெறுக்கச்செய்யின் இல்லறநிகழ்த்தற்கியலாது வருந்துமே என்பது கொண்டு பந்து முதலாய கண்டவழி எய்துந் துன்பமேயன்றி விடலையை நலியுங்கொலென்றும் இரங்கினாள். மெய்ப்பாடு - உவகைக் கலுழ்ச்சி. பயன் - ஆற்றாமை நீங்குதல்.

    (பெரு - ரை.) பாலைநிலத்தின்கண் பேதையாகலான் என்மகள் அஞ்சவேண்டாதனவற்றிற்கும் அஞ்சுமாற்றால் அவள் காதலனுக்குத் துன்பந் தருகுவளோ? என்று வருந்துகின்றேன் என்று கூறியபடியாம். எனவே தன் மகள் பாலை நிலத்தே உண்டாகும் பறவை விலங்கு முதலியவற்றின் ஒலி கேட்டே நடுங்குவளே! என்று இரங்கினாளாயிற்று. அங்ஙனம் அஞ்சினும் அவள் காதலன் அவட்கு ஏதம் உறாவண்ணம் ஓம்புவன் என்று ஒருவாறு நெஞ்சத்தே ஆறுதலும் கொள்வாள் அவனை 'இலங்கிலை வென் வேல் விடலை' என விதந்து கூறினாள்.

(305)