திணை : நெய்தல்.

    துறை : இது, குறிநீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

    (து - ம்.) என்பது, தலைமகன் குறித்த குறியிடத்துவரப் பாணித்தமையால் அது பொறாது வருந்திய தலைவியைத் தோழி நோக்கி அங்கே தேரின் மணியொலி இசையாநிற்கும்; இளையரும் ஒலியாநிற்பர்; ஆதலின், நினது நலன் நுகரும்படி கொண்கன் இன்னே வருகுவன்காண்; வருகின்ற அவன்தான் நம்மைக் காணாது வருந்துவதை நாம் சிறிது பொழுது கண்டு மகிழும் வண்ணம் இங்குள்ள புன்னையடிமறைவில் மறைந்துகொள்வோம் வருவாயாகவென்று வலியுறுத்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    
கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும் 
    
பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர் 
    
கடலாடு வியலிடைப் பேரணிப் பொலிந்த 
    
திதலை அல்குல் நலம்பா ராட்டிய 
5
வருமே தோழி வார்மணற் சேர்ப்பன் 
    
இற்பட வாங்கிய முழவுமுதற் புன்னை 
    
மாவரை மறைகம் வம்மதி பானாள் 
    
பூவிரி கானல் புணர்குறி வந்துநம் 
    
மெல்லிணர் நறும்பொழிற் காணாதவன் 
10
அல்லல் அரும்படர் காண்கநாம் சிறிதே. 

    (சொ - ள்.) தோழி கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும் - தோழீ! செல்லுதலில் விருப்பமுடைய குதிரை பூட்டிய நெடிய தேரிலே கட்டிய மணியும் ஒலியாநிற்கும்; பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர் - பெயர்ந்துபட நடக்கின்ற வீரரும் ஆரவாரிப்பர்; வார் மணல் சேர்ப்பன் - ஆதலின் நெடிய மணற்குன்றினையுடைய சேர்ப்பன்; கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த திதலை அல்குல் நலம் பாராட்டிய வரும் - மகளிர் சென்று கடனீராடுகின்ற அகன்ற இடத்திலே மிக்க அழகுடன் பொலிந்து விளங்குகின்ற துத்தி படர்ந்த நினது அல்குலின் நலனைப் பாராட்டுமாறு இப்பொழுதே வருகிற்பன்காண்!; பால் நாள் பூ விரி கானல் புணர் குறி வந்து மெல்இணர் நறும் பொழில் நம் காணாதவன் - அவ்வண்ணம் வரினும் இதுகாறும் வாராது நம்மை நடுங்க வைத்துளன் ஆதலின், அவனும் இந் நடுயாமத்து மலர் விரிந்த சோலையில் நாம் புணர்கின்ற குறியிடத்து வந்து மெல்லிய பூங் கொத்தினையுடைய நறிய சோலையின்கண்ணே நம்மை எதிர் காணாதவனாகி; அல்லல் அரும்படர் நாம் சிறிது காண்கம் - படுகின்ற நீங்குதற்கரிய அல்லலாகிய துன்பத்தையும் நாம் சிறிது பார்ப்போம்; இல்பட வாங்கிய முழவு முதல் புன்னை மா அரை மறைகம் வம் - அதனால் நமது மனையருகில் வளைந்த குடமுழாப் போன்ற அடியையுடைய புன்னையின் கரிய அடிமரத்தின் பின்னே சென்று மறைந்து கொள்வோம்; நீ வருவாயாக! எ - று.

    (வி - ம்.) பெயர்படல் - பெயர்ந்துபோதல்.

    அணித்தாக வந்தமை அறிவுறுத்துவாள் தேர்மணியும் இளையரும் ஒலிப்பது கூறினாள். உவகை உள்ளத்தடக்க அடங்காமையின் அல்குல் நலம் பாராட்டி அமைவனெனத் தலைமகள்பால் இறைமகன் உழுவலன்புடையன் என அவள் ஆற்றும்படி கூறினாளாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

    (பெரு - ரை.) 'இறைபட வாங்கிய முழவுமுதல்' என்றும், 'நறும்பொழில் காணா அல்லல்என்றும் பாடம்; இதனோடு 'புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லனோய் காண்கஞ் சிறிது" எனவரும் திருக்குறளும் (1301) நினைக.

(307)