திணை : நெய்தல்.

    துறை : இது, தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவி வன்புறை எதிரழிந்தது.

    (து - ம்.) என்பது, வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டும் ஒரு சிறைப்புறமாக வருதலையறிந்த தோழி அவன்கேட்டு விரைய வரையுமாற்றானே தலைவியை நோக்கி அவர் இன்னே வருகுவராதலின் நீ வருந்தாதேயென்று வற்புறுத்திக் கூறினாட்குத் தலைவி யான் எங்ஙனமாற்றுவேன், அவன் முயங்குமுன் இனியதாயிருந்த கடற்றுறையும் இப்பொழுது வெறுப்புடைத்தாயிற்றேயென வருந்திக் கூறா நிற்பது.

    (இ - ம்.) "கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்" (தொல்-கள- 22) என்னும் விதிகொள்க.

    
அண்ணாந் தேந்திய வனமுலை  
    
மாயிரும் பரப்பகந் துணிய நோக்கிச்  
    
சேயிறா வெறிந்த சிறுவெண் காக்கை 
    
பாயிரும் பனிக்கழி துழைஇப் பைங்கால் 
    
தான்வீழ் பெடைக்குப் பயிரிடூஉச் சுரக்குஞ்  
5
சிறுவீ ஞாழல் துறையுமா ரினிதே 
    
பெரும்புலம் புற்ற நெஞ்சமொடு பலநினைந்து 
    
யானும் இனையே னாயினென் ஆனாது 
    
வேறுபன் னாட்டிற் கால்தர வந்த 
    
பலவுறு பண்ணியம் இழிதரு நிலவுமணல் 
10
நெடுஞ்சினைப் புன்னைக் கடுஞ்சூல் வெண்குருகு 
    
உலவுத்திரை யோதம் வெரூஉம் 
    
உரவுநீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே. 

    (சொ - ள்.) ஆனாது வேறு பல் நாட்டில் கால்தர வந்த பலவுறு பண்ணியம் இழி தரு நிலவு மணல் - தோழீ ! அமையாமல் வேறுவேறாகிய நாடுகளினின்றும் கலங்களைச் காற்றுச் செலுத்துதலாலே வந்திறுத்த பலவகைப் பண்டங்கள் இறக்கியிட்ட நிலாவை ஒத்த மணற் பரப்பின் கண்ணுள்ள, நெடுஞ்சினைப் புன்னைக் கடுஞ்சூல் வெண் குருகு - நெடிய புன்னைக்கிளையிலிருக்கின்ற முதிர்ந்த சூலையுடைய வெளிய குருகு; உலவுத் திரை ஓதம் வெரூஉம் உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கு - உலாவுதலையுடைய அலையோசைக்கு வெருவா நிற்கும் வலிய நீர்ப்பரப்பினையுடைய கடற்சேர்ப்பனொடு மணவாத முன்பு; மா இரும் பரப்பு அகம் துணிய நோக்கி - கரிய பெரிய நீர்பரந்த கழியிடந் தெளிதலானே அதனை நோக்கி: சேஇறா எறிந்த சிறு வெள் காக்கை - அதிலுள்ள செய்ய இறாமீனைப் பற்றுதற்குப் பாய்ந்த கழுத்தளவு சிறிது வெண்மையுடைய நீர்க்காக்கை; பாய் இரும் பனிக்கழி துழைஇ தான் வீழ்பைங்கால் பெடைக்குப் பயிரிடூஉச் சுரக்கும் - பரவிய பெரிய குளிர்ச்சியையுடைய கழியிடத்தைத் துழாவியெடுத்துத் தான் விரும்பிய பசிய காலையுடைய பெடையை அழைத்து அதற்குக் கொடா நிற்கும்; சிறு வீ ஞாழல் துறையும் இனிதே - சிறிய பூவையுடைய ஞாழலந்துறையும் இனிதேயாயிருந்தது; பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பலநினைந்து யானும் இனையேன் ஆயினென் - அவன் என்னைக் கலந்து கைவிட்ட பின்பு அத்துறையும் வெறுப்புடைத்தாயிற்று; ஆதலால் பெரிய வருத்தமுற்ற உள்ளத்தில் அவன் பிரிந்ததனால் ஆகிய துன்பம் பலவற்றையும் நினைந்து யானும் இத்தன்மையே னாயினென்காண்; எ-று.

    (வி - ம்.) வெண்காக்கை - கருங்காக்கையுமாம். வெண்மை -கருமைமேற்று. காராட்டை வெள்ளாடென்பதுபோல மங்கலமொழியாகக் கொள்க. துணிவு - தெளிவு. பயிரிடுதல் - அழைத்தல். ஆர் : அசை. புலம்பு - வருத்தம். பண்ணியம் - பண்டம்.

    உள்ளுறை :- புன்னையஞ்சினைக்கணுள்ள சூல் முதிர்ந்த குருகு கடலோசைக்கு வெருவுமென்றது பிறந்தகத்திருந்து காதலை மேற்கொண்ட யான் அன்னையின் கடுஞ்சொல் கேட்குந்தொறும் வெருவா நின்றேனென்றதாம்.

    இறைச்சி :- இறாமீனைப் பிடித்து வந்த காக்கை தன் பெடையை விளித்து அதன் வாயில் இரையைக்கொடுக்குந் துறையையுடையவனாயிருந்தும் தலைவன் என்னையழைத்து முயங்கி இன்பமுய்த்தானிலன்; இஃதிருந்தபடி யென்னையென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) அவன் என்னைக் கலந்து கைவிட்ட பின்பு முன்னர் இனிதாயிருந்த அத்துறையும் வெறுப்புடைத்தாயிற்று; என்பதும், ஆதலால் அவன் பிரிந்ததனாலாகிய துன்பம் என்பதும் குறிப்பெச்சப் பொருள்கள்.

(31)