(து - ம்,) என்பது, பிரிந்து சென்ற தலைமகன் முன்புகூறிய பருவ வரவின்கண் வாராமையால் மெலிந்த தலைமகள் நெஞ்சம் நொந்து, 'ஒன்றாத் தமரினும்' என்ற
(தொல். பொ. 40) சூத்திரத்தில் கூறிய நாளது சின்மையும், இளமைய தருமையும், அன்பின் தகலமும்' பிறவும் “நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே”
(தொல். பொ. 44) என்ற விதிப்படிதானே கூறுவாளாகி முன்பு சுரத்தின்கண்ணே சென்ற காதலர்' முதிர்ந்தோர் இளமை யெய்தார், வாழ்நாளளவறிந்தாரில்லை ஆதலின் நின் கொங்கையைப் புல்லிக் கங்குல் கழியக்கடவது' என்று கூறி எம்மளவிலே பொய்த்தனர்; அதனால் அணங்கப்பெறாது வாழ்வாராக'வென்று அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே" (தொல். அகத். 44) என்னும் விதியாலமைத்துக் கொள்க.
| முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தார் |
| வாழ்நாள் வகையளவு அறிஞரும் இல்லை |
| மாரிப் பித்திகத்து ஈரிதழ் அலரி |
| நறுங்காழ் ஆரமொடு மிடைந்த மார்பிற் |
5 | குறும்பொறிக் கொண்ட கொம்மையம் புகர்ப்பிற் |
| கருங்கண் வெம்முலை ஞெமுங்கப் புல்லிக் |
| கழிவ தாக கங்குல் என்றுதாம் |
| மொழிவன் மையிற் பொய்த்தனர் வாழிய |
| நொடிவிடு வன்ன காய்விடு கள்ளி |
10 | அலங்கலம் பாவை ஏறிப் புலம்புகொள் |
| புன்புறா வீழ்பெடைப் பயிரும் |
| என்றூழ் நீளிடைச் சென்றிசி னோரே. |
(சொ - ள்.) நொடி விடுவு அன்ன காய்விடு கள்ளி அலங்கல் பாவை ஏறி - நொடித்து விட்டாற் போன்ற காய்கள் ஒலியெழும்பத் தெறிக்கின்ற கள்ளியின் அசைகின்ற பாவைபோன்ற கிளைகளிலேறி; புலம்பு கொள் புன் புறா வீழ் பெடைப் பயிரும் - தனியே இருத்தலைக்கொண்ட புல்லிய புறாவானது தான் விரும்பிய பெடையைப் புணர்ச்சிக் குறிப்பால் அழையா நிற்கும்; என்றூழ் நீள் இடைச் சென்றிசினோர் - வெயிலின் வெப்ப மாறாத நீண்டிருக்கின்ற சுரத்தின்கண்ணே சென்ற தலைவர்தாம்; முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தார் - ஆயுள் முதிர்ந்து யாக்கை மூத்துத் தளர்ந்தவர் மீண்டொருகாலத்து இளமைப் பருவத்தை விரும்பினாலும் தவறியேனும் அடைபவர் அல்லர்; வாழ்நாள் வகையளவு அறிஞரும் இல்லை - தாம் வாழ்நாளின் வகையினளவை அறிபவருமில்லை; மாரி்ப் பித்திகத்து ஈர் இதழ் அலர் நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பின் -ஆதலால் மாரிக்காலத்து மலர்கின்ற சிறு சண்பகத்தின் ஈரிய இதழ்களையுடைய மலரை நறிய வயிரம் முற்றிய சந்தனத்தை அரைத்துப் பூசிய மேல் மாலையாக அணிந்த மார்பிலே; குறும் பொறிக்கொண்ட கொம்மை. அம் புகர்ப்பின் கருங்கண் வெம்முலை ஞெமுங்கப் புல்லி - குறுகிய புள்ளி அமைந்த இளைய அழகிய நிறத்தையுடைய கரிய கண்கள் அமைந்த விருப்பமிகு முலைகள் நெருங்க அணைத்திருந்தபடியே; கங்குல் கழிவது ஆக என்றுதாம் மொழிவன்மையின் பொய்த்தனர் - 'கங்குல் கழியக்கடவதாக' என்று முன்பு கூறிய தம் மொழியளவில் வன்னெஞ்சு உடைமையாற் பொய்த்தனர்; வாழிய - அங்ஙனம் பொய்த்ததனால் ஒரேதமுமின்றி நீடு வாழ்வாராக; எ - று.
(வி - ம்.) பித்திகம் - சிறுசண்பகம். ஞெமுங்கல் - நெருங்கல். நொடி விடல் - நெறித்துவிடல். கள்ளியின் தலை, பாவை போன்றிருத்தலிற் பாவை யென்றார். கொம்மை - இளமை.
பிரியேனென்ற சூள் வருந்துமாதலின் அச் சூள் வருத்தாவாறு வாழிய என்றாள். செல்லுநெறி புறவு பெடையை யழைத்துப் புணருவதனை உடையதாயிருப்ப அதனை நோக்கியும் மீண்டாரில்லையே யென்றிரங்கியவாறு; இதனுள் முதிர்ந்தோர் இளமை யெய்தாரென்றது, இளமையது அருமை. வாழ்நாள் அறிஞரு மில்லை யென்றது நாளது சின்மை. ஞெமுங்கப் புல்லிக் கழிவதாக வென்றது, அன்பினதகலம். ஏனையவும் உய்த்துணர்க. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) இது பண்டொரு காலத்தே தலைவன் கூறிய கூற்றைக் கொண்டு கூறி இவ்வாறு கூறியவர் அக் கூற்றிற் கேற்ப ஒழுகாது பொய்ப்படுத்தினர் என்று இரங்கியபடியாம். "முதிர்ந்தோர்," என்பது தொடங்கி "கழிவதாக கங்குல்," என்னுந் துணையும் தலைவன் பண்டு கூறியது. 'இளமை அழிந்தும்' என்றும் பாடம். இதற்கு முதிர்ந்தோர் பின்னர்ப் பெரிதும் தவமுதலியன செய்து வருந்தியும் கழிந்த இளமையை எய்துவார் அல்லர் என்று பொருள் கூறுக. இக் கருத்தே சிறப்புடையது மாகும்.
(314)