(து - ம்,) என்பது, பரத்தையிற் பிரிந்த தலைமகன் மீண்டு தலைமகள்பால் வருதலும் அவள் சினமிகுதலாலே அதனை நீக்கும் வழியின்றி நின்றபொழுது அவனது இளமை முதிர்ந்த காமக் கிழத்தி தலைவியை வெகுளாதபடி கூறி உடன்படுத்துகின்றாள், 'துறைவனே! பருவஞ் சென்ற பின்னன்றோ என் போல இவளும் நின்னாலே கைவிடத்தக்கா'ளென உள்ளுறையாலும், 'நீ ஒழுங்காக ஆராய்ந்து குற்றம் வாராது நடவாயெனின் நின்னை விரும்பியோர் தீயிடைப்பட்ட மலர்போல்வ'ரென, வெளிப்படையாலுங் கடிந்து கூறி ஊடலைத் தீர்த்துக் கூட்டா நிற்பது.
(இ - ம்.) இதற்கு, "காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையின், தாய்போற் றழீஇக் கழறியம் மனைவியைக், காய்வின் றவன்வயின் பொருத்தற் கண்ணும்" (தொல். கற். 10) என்னும் விதிகொள்க.
| ஈண்டுபெருந் தெய்வத்து யாண்டுபல கழிந்தெனப் |
| 1 பார்த்துறைப் புணரி அலைத்தலிற் புடைகொண்டு |
| மூத்துவினை போகிய முரிவாய் அம்பி |
| நல்லெருது நடை 2 வளம் வைத்தென உழவர் |
5 | புல்லுடைக் காவின் தொழில்விட் டாங்கு |
| நறுவிரை நன்புகை கொடாஅர் சிறுவீ |
| ஞாழலொடு கெழீஇய புன்னையங் கொழுநிழல் |
| முழவு முதற் பிணிக்குந் துறைவ நன்றும் |
| விழுமிதிற் கொண்ட கேண்மை நொவ்விதின் |
10 | தவறுநன்கு அறியா யாயின் எம்போல் |
| ஞெகிழ்தோட் கலுழ்ந்த கண்ணர் |
| மலர்தீய்ந்து அனையர் நின்நயந் தோரே. |
(சொ - ள்.) ஈண்டு பெருந் தெய்வத்து யாண்டு பல கழிந்தென - நெருங்கிய பெரிய தெய்வமெனப் பெயர்கொண்ட யாண்டுகள் பல சென்றதனாலே; பார்த் துறைப்புணரி அலைத்தலின் புடைகொண்டு மூத்து வினை போகிய முரி வாய் அம்பி - கரையையடுத்த துறையிலே கடனீர் அலைத்தலால் மோதப்பட்டு முதிர்ந்து தொழில் செய்ய வுதவாது ஒழிந்த முரிந்த வாயையுடைய தோணியை; நல் எருது நடை வளம் வைத்தென உழவர் புல் உடைக் காவின் தொழில் விட்டு ஆங்கு - நல்ல எருது முன்புள்ள நடையின் சிறப்பு நீங்கியதேயென்று அதனை உழவர் புல்லையுடைய தோட்டத்திலே தொழில் செய்யாதபடி விட்டொழிந்தாற்போல; நறு விரை நல் புகை கொடாஅர் - நறிய வாசனையுடைய நல்ல தூமங் கொடாராய்; சிறு வீ ஞாழலொடு கெழீஇய புன்னைக் கொழுநிழல் முழவு முதல் பிணிக்கும் துறைவ - சிறிய மலரையுடைய ஞாழலொடு சேர்ந்தோங்கிய புன்னையின் கொழுவிய நிழலிலே குடமுழாப்போன்ற அந்த மரத்தின் வேரடியிலே பிணித்துப் போகடுந் துறையையுடைய தலைவனே!; நன்றும் விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் தவறு நன்கு அறியாயாயின் - பெரிதும் சிறப்பினதாகக் கொண்ட நட்பின்கண்ணே நுட்பமாகிய தவறும் வாராதபடி நன்றாக அறிந்து நடக்க வேண்டும். அதனை நீ அறியாயாயின்; நின் நயந்தோர் எம்போல் ஞெகிழ்தோள் கலுழ்ந்த கண்ணர் மலர் தீய்ந்து அனையர் - நின்னால் விரும்பப்படுவோர் எம்மைப் போல நெகிழ்ந்த தோளும் கலுழ்ந்த கண்ணும் உடையராய் மலர்ந்து முறையே உதிர்ந்து கழியாது மலர்ந்தவுடன் தீய்ந்தாற் போல்வர்காண்; எ - று.
(வி - ம்.) தெய்வம் - வருடம்; தெய்வத்துயாண்டு: இருபெயரொட்டு; அத்து: அல்வழிச் சாரியை. அம்பி - மரக்கலமுமாம். புகைகொடுத்தல் கழுது அணங்கிக் கடலிலே கெடுக்காதிருத்தற்பொருட்டு. விழுமிது - சிறப்புடையது. நொவ்விது - நுண்ணியது.
தன்னையும் அவன் கைவிட்டுச் சேரிப் பரத்தையர் நலநுகர்ந்துறைதலின் எம்போலென்றாள்.
உள்ளுறை:- அம்பி முதிர்தலும் புன்னையின் கீழ்க் கொண்டு போய்ப் பிணித்த தென்றது, முன்பு நின்னை யடைந்த மாதர் பலருஞ் சிறிது முதிர்தலும் அவரைப் பாதுகாவாது இவ்வயின் விடுத்தொழிந்தனை யென்றதாம்.
நின்னை நயந்தோர் மலர்தீய்ந்தனைய ரென்றது, இவளும் முதிர்ந்தால் அன்றோ ஏனையோரைப் போலக் கைவிடப்படுவாள், அங்ஙனமின்றி இவ் விளமையிலேயே நீ துறந்ததனால் எம்மைப்போல இவளும் மலர் முதிராது கருகிய தன்மையளாயினா ளென்பது.
மெய்ப்பாடு - பெருமிதம்.
பயன் - ஊடல் தீர்த்தல்.
(பெரு - ரை.) இச் செய்யுளை இத் துறைக்குக் காட்டிய ஆசிரியர் நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் வருமாறு:-
"இதனுள் மூத்து வினைபோகிய அம்பிபோலப் பருவஞ் சென்ற பிணிக்கப்பட்ட எம்மைப் போலாது இவள் இப்பருவத்தே இனையள் ஆகற்பாலளோ? மலர்ந்த செவ்வியான் முறைவீயாய்க் கழியாது இடையே எரிந்து கரிவுற்ற பூவினைப் போலவெனத் தலைவனுக்குக் காமக் கிழத்தி கூறியவாறு காண்க; எனவரும் இனி, காலம் தெய்வத்தன்மை யுடையதாகலின் தெய்வத் தன்மையுடைய யாண்டு எனினுமாம். பார் - பாறைக்கல். பாறைக் கல்லையுடைய துறை என்க. இங்ஙனம் கூறியது புடையுண்டற்கு ஓர் ஏதுக் காட்டியபடியாம். 'பாயிரும் பனிக்கடல் பார்துகள்பட' என வரும் பரிபாடலினும் 5) அஃதப் பொருட்டாதலறிக. விழுமிதிற்கொண்ட கேண்மையின் இயல்பினையும் அதற்காகாத தவறுகளையும் (நொவ்விதின்) நுண்ணிதின் அறிந்து கோடல் வேண்டும். அங்ஙனம் அறியாயாயின் எனப் பொருள் கோடல் சிறப்பு. 'தவறுநற்கு அறியாயாயின்' என்றும், 'நடைவளம் வாய்த்தென' என்றும், 'நன்புகைகொண்டார்' என்றும், 'மலர் தீர்ந்தனையர்' என்றும் பாடவேறுபாடுண்டு.
(315)
(பாடம்) 1. | பாரத்துப். 2. | வளம் வாய்த்தென. | |