(து - ம்,) என்பது, தலைவன் பிரிதலால் வருந்திய தலைவியைத் தோழி 'நீ வருந்தாதே கொள்; முல்லை அரும்பும் பொழுது வருவேனென்று அகன்ற காதலர் மீண்டு வருமுன் அவை அரும்பும்படி வம்பமாரி பெய்யத் தொடங்கி இடி இடித்துவிட்டது; ஆதலால், இம் மேகம் அறியாமை யுடைய'தென வலி உறுத்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி' என்பதனாற் கொள்க.
| மடவது அம்ம மணிநிற எழிலி |
| மலரின் மௌவல் நலம்வரக் காட்டிக் |
| கயலேர் உண்கண் கனங்குழை இவைநின் |
| எயிறேர் பொழுதின் எய்தரு வேமெனக் |
5 | கண்ணகன் விசும்பின் மதியென உணர்ந்தநின் |
| நன்னுதல் நீவிச் சென்றோர் நம்நசை |
| வாய்த்துவரல் வாரா அளவை அத்தக் |
| கல்மிசை அடுக்கம் புதையக் கால்வீழ்த்துத் |
| தளிதரு தண்கார் தலைஇ |
10 | விளியிசைத் தன்றால் வியலிடத் தானே. |
(சொ - ள்.) அம்ம மலரின் மௌவல் நலம் வரக் காட்டிக் கயல் ஏர் உண்கண் கனங்குழை - தோழீ! கேட்பாயாக! முன்பு மலரையுடைய முல்லையைச் செவ்வையாகக் காட்டிக் கயல் போன்ற மையுண்ட கண்ணையும் கனவிய குழையையுமுடையாய்!; இவை நின் எயிறு ஏர் பொழுதின் எய்தருவேம் என - இம் முல்லை நின் பற்கள்போன்ற அரும்பை யீனும் பொழுதில் யாம் நின்னை யெய்துவேமென்று கூறி; கண் அகன் விசும்பின் மதியென உணர்ந்த நின் நல்நுதல் நீவிச் சென்றோர் - இடமகன்ற ஆகாயத்தில் எழுகின்ற திங்களோ என ஐயுற்றறியும்படியாகிய நினது நல்ல நெற்றியைத் தடவிக் கொடுத்துச் சென்ற நங் காதலர்; நம் நசை வாய்த்து வரல் வாரா அளவை - தாம் நம்மை விரும்பும் விருப்பமுடையராய் வருதலின்றி வாராது அங்கிருக்கும் இக்காலத்தில்; அத்தக் கல்மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து - சுரத்து நெறியையுடைய மலைமேலே அதன் பக்கமெல்லாம் மறையுமாறு காலிறங்கி; தளி தரு தண் கார் தலைஇ - நீர்த்துளியைப் பெய்யும் தண்ணிய மேகம் அம் முல்லைகள் அரும்பும்படி மழையைப் பெய்து; வியல் இடத்து விளி இசைத்தன்று - அகன்ற ஆகாயத்தினிடத்திலே இடியிடித்தலையுஞ் செய்யாநின்றது; மணி நிற எழிலி மடவது - ஆதலின் நீலமணிபோலும் நிறத்தையுடைய இம் மேகம் அறியாமை யுடையதுகாண்; இது மிக்க வியப்பு; எ - று.
(வி - ம்.) பருவமன்றென்றமையால் குறித்த பருவத்து வருவரெனவும், பொய் கூறாரெனவும், பொய்ச் சூளால் அவர் அணங்கப் பெறுவரே யென்று நீ வருந்தாதே யெனவும் வற்புறுத்தினாளாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.
(பெரு - ரை.) 'எயிறேர் பொழுதின் ஏய்தருவேம்' என்றும் 'தம்நசை' என்றும் பாடம். மலரின் மௌவல் காட்டி என்றதற்கு மலர் இல் மௌவல் காட்டி என்று கண்ணழித்துக்கொண்டு 'மலர் இல்லாத வறிய முல்லைக் கொடியைக் காட்டி' எனப் பொருள் கூறுதலே சிறப்பு. கனங்குழை : விளி.
(316)