(து - ம்,) என்பது, களவொழுக்கம் புலப்படக் கண்டு தலைவியை இல்வயிற் செறித்துக் காவலோம்பலும் ஆங்குவந்த தலைமகன் அதனையறிந்து ஆற்றானாகித் தலைவியை நினைந்து 'இத்தகைய நடுயாமத்து இவளுடைய முயக்கத்தைக் கருதி யான் துயிலுகின்றிலேன்; இனி என்நிலை யாதாய் முடியுமோ' என நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, 'பரிவுற்று மெலியினும்' (தொல். கள. 12) என்னும் விதிகொள்க.
| ஓதமும் ஒலிஓ வின்றே ஊதையுந் |
| தாதுளர் கானல் தௌவென் றன்றே |
| மணல்மலி மூதூர் அகல்நெடுந் தெருவின் |
| கூகைச் சேவல் குராலோடு ஏறி |
5 | ஆரிருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும் |
| அணங்குகால் கிளரும் மயங்கிருள் நடுநாள் |
| பாவை அன்ன பலராய் வனப்பின் |
| தடமென் பணைத்தோள் மடமிகு குறுமகள் |
| சுணங்கணி வனமுலை முயங்கல் உள்ளி |
10 | மீன்கண் துஞ்சும் பொழுதும் |
| 1 யான்கண் துஞ்சிலேன் யாதுகொல் நிலையே. |
(சொ - ள்.) ஓதமும் ஒலி ஓவின்று - கடலும் ஒலியடங்கி விட்டதே! ஊதை தாது உளர் கானலும் 'தௌ' என்றன்று - ஊதைக்காற்று மகரந்தத்தைக் கிண்டுகின்ற கழிக்கரைச் சோலையும் பொலிவு அழிந்ததே!; மணல் மலி மூதூர் அகல் நெடுந்தெருவின் கூகைச் சேவல் குராலோடு ஏறி ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும் - மணல் மிக்க இம் மூதூரின்கண் உள்ள அகன்ற நெடிய தெருவிலே கூகையின் சேவல் அதன் பெண் பறவையொடு சென்று மக்கள் இயங்காத பெரிய நாற்சந்தி கூடுமிடத்தில் யாவர்க்கும் அச்சமுண்டாகும்படி குழறா நிற்கும்; அணங்கு கால் கிளரும் - பேய்களும் வெளிப்பட்டு உலவாநிற்கும்; மயங்கு இருள் நடுநாள் - ஒருவரையொருவர் அறிதற்கியலாது மயங்கிய அத்தகைய இரவு நடுயாமத்தில்; பாவை அன்ன பலர் ஆய் வனப்பின் தட மெல்பணைத் தோள் மடம் மிகு குறுமகள் - கொல்லிப் பாவைபோன்ற பலரும் ஆராயும் அழகையும் அகன்ற மெல்லிய பருத்த தோளையுமுடைய மடப்பமிக்க இளமடந்தையினது; சுணங்கு அணி வனமுலை முயங்கல் உள்ளி - தேமல் படர்ந்த அழகிய கொங்கையை முயங்குதல் கருதி; மீன் கண்துஞ்சும் பொழுதும் யான் கண்துஞ்சிலேன் - மீன்கள் உறங்கும் இராப்பொழுதெல்லாம் யான் கண் உறங்கிலன்; நிலை யாது - ஆதலின் இனி என் நிலை எத்தன்மையதாய் முடியுமோ? அறிந்திலேன்; எ - று.
(வி - ம்.) ஓவின்று - ஓவிற்று; நீங்கிற்று. இரவு நடுயாமத்துக் கடலோசை அடங்குதல் வழக்கு. தௌவெனல் - பொலிவு அழிதல். ஊதையும் என்றதன் உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) உரையாசிரியர் கருத்திற்கு ஊதையும் என்புழி உம்மையைப் பிரித்துக் கானலும் என இயைத்துக் கொள்க. தௌவெனல் - ஓசைக் குறிப்பாகக்கொண்டு ஊதையும் கானலின்கண் 'தௌ தௌ' என்று ஒலியா நின்றது என்று பொருள் கோடலே அழகாம். இது 'தவ் என்று' எனவும் வரும்; இங்ஙனமே பாடவேற்றுமையும் உண்டு. "தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப" என்றார் நெடுநல்வாடையினும் (185). இனி மீன்கள் நொடிப்பொழுது உறங்கி ஞெரேலென விழிக்கும் இயல்புடையன என்னுங் கருத்தால் நொடிப் பொழுதேனும் கண்ணுறங்கிலேன் என்பான் மீன்கண் துஞ்சும் பொழுதும் யான் கண்துஞ்சிலேன் என்றான் என்று கோடலே நன்று. உம்மை இழிவு சிறப்பு.
(319)
(பாடம்) 1. | யான் கண்துஞ்சேன். |