(து - ம்.) என்பது, பாங்கியிற்கூட்டத்துத் தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைவியை மெலிதாகச் சொல்லிக் குறையறிவுறுத்தலும் அவள் அறியாள் போலுதலின் வலிதாகக் கூறிக் குறைநயப்பிக்கத் தொடங்கி அத்தோன்றல் படுந்துயரை யான் கூற நீ தெளிந்திலை; வேறு தோழியரோடேனும் ஆராய்ந்து தக்கது செய்யெனப் புலந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "மறைந்தவளருகத் தன்னொடு மவளொடு முதன்மூன் றளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" (தொல்-கள்- 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| அண்ணாந் தேந்திய வனமுலை |
| மாயோ னன்ன மால்வரைக் கவாஅன் |
| வாலியோ னன்ன வயங்குவெள் ளருவி |
| அம்மலை கிழவோன் நந்நயந் தென்றும் |
| வருந்தின னென்பதோர் வாய்ச்சொல் தேறாய் |
5 | நீயுங் கண்டு நுமரொடும் எண்ணி |
| அறிவறிந் தளவல் வேண்டு மறுதரற்கு |
| அரிய வாழி தோழி பெரியோர் |
| நாடி நட்பி னல்லது |
| நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே |
(சொ - ள்.) தோழி வாழி மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன் வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி - தோழீ ! வாழி ! மாயோனைப் போன்ற பெரிய மலைப்பக்கத்து அவன் கண்ணனாயவதரித்த பொழுது அவனுக்கு முன்னவனாகத் தோன்றிய வெளிய நிறத்தையுடைய பலதேவனைப் போன்ற விளங்கிய வெண்மையான அருவிகளையுடைய; அம்மலை கிழவோன் என்றும் நம் நயந்து வருந்தினன் என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய் - அழகிய மலைக்குரிய தலைவன் நாள்தோறும் நம் புனத்து அயல் வந்து நம்மை விரும்பி வருந்தாநின்றான் என்று கூறுகின்ற எனது ஒப்பற்ற வாய்மொழியைத் தெளிந்தாயல்லை; நீயும் கண்டு நுமரொடும் எண்ணி அறிவு அறிந்து அளவல் வேண்டும் - என்னோடு உசாவுவதை யொழித்து நீயும் அவனை நோக்கி நின்மாட்டு அன்புடைய தோழியரோடும் ஆராய்ந்து அறிவினால் இது தக்கது இது தகாததென்பதையும் அறிந்து பின்னர் அளவளாவுதல் வேண்டும்; மறுதரற்கு அரிய - அவன் கூற்று மறுத்தற்கரியன காண் !; பெரியோர் தம் ஒட்டியோர் திறத்து - அறிவுடைய சான்றோர் தம்பாலடைந்து நட்புக் கொள்ள விரும்பினார் திறத்து; நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் - முன்னர் அவருடைய குணம் செயல்களின் நன்மையை ஆராய்ந்து நட்புக்கொள்ளுவதல்லது நட்புச் செய்து பின்பு ஆராய்ந்து பாரார்; நீ அங்ஙன் ஆராய்ந்து மலைகிழவோனை நட்புக்கொண்டாயல்லை; முன்பு நட்டு இப்பொழுது வெறுத்தல் தகாது கண்டாய் ! எ - று.
(வி - ம்.)கவான் - மலைப்பக்கம். நீ அங்ஙன் என்பது முதற் குறிப்பெச்சம். வாய்ச்சொல். வாய் - வேண்டா கூறல். நெடுமை நோக்கி மாயோனை யுவமித்தது.
அவனுந் தகுதிப்பாடுடையனென்பாள் மழைகிழவோ னென்றாள். ஈண்டியான் கூறியதனை ஆராய்கின்றனைபோலும் இவ்வாராய்ச்சி ! இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னரே வேண்டும். இவ்வயிற் பயனுடைத் தன்றென்பாள் பிறிது மொழியாற் கூறினாள். "நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின், வீடில்லை நட்பாள் பவர்க்கு" (குறள்- 79) என்றதனானறிக. மெய்ப்பாடு - இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன் - வலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல்.
(பெரு - ரை.) மாயோன் என்ற சொல்லே கண்ணனைக் குறிக்குமாதலின் இவ்வுரையின்கண் "அவன் கண்ணனாயவதிரித்த பொழுது" என வரும் உரை மிகைபடக் கூறலாம். இவ்வுரையாசிரியர் பெரியோர் தம் ஒட்டியோர் திறத்தே என இயைத்தனர். இதற்கு இச்சொல் இறந்த காலச்சொல்லாதலை அவர் நோக்கிற்றிலர். நட்டுத் தம் ஒட்டியோர் திறத்தே நாடார் என இயைத்துக் கோடலே சிறப்பென்க, மறுத்தரற்கு என்றும் பாடம்.
(32)