திணை : மருதம்.

     துறை : இது, பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப நெருங்கிச் சொல்லியது.

     (து - ம்,) என்பது, பரத்தையிற் பிரிந்த தலைமகன் அவளை நீங்கிப் புதிய ஒரு பரத்தையிடம் புகுந்ததனாலே, அதனை யறிந்த முதற்பரத்தை சினந்து தனக்குப் பாங்காயினார்க்குச் சொல்லுவாள் போல, இறைமகன் கேட்கும் வண்ணம் நெருங்கி நின்று 'திருவிழாவு மில்லாத இக் காலத்தில் இவனாலே காதலிக்கப்பட்ட இவள் தன்னைப் புனைந்து கொண்டு தெருவிலே சென்றதற்கு ஊரொருங்கு நகை செய்ததன்றிக் குலமடமாதரும் தம்தம் கொழுநரைக் காத்துக்கொண்டனர; அங்ஙனமாக இவனை இவள் பற்றிக்கொண்டது அரிதொன்று அன்'றென இகழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணும்" (தொல். கற். 10) என்னும் விதிகொள்க.

    
விழவும் உழந்தன்று முழவுந் தூங்கின்று 
    
எவன்குறித் தனள்கொல் என்றி யாயின் 
    
தழையணிந்து அலமரும் அல்குல் தெருவின் 
    
இளையோள் இறந்த அனைத்தற்குப் பழவிறல் 
5
ஓரிக் கொன்ற ஒருபெருந் தெருவிற் 
    
காரி புக்க நேரார் புலம்போல் 
    
கல்லென் றன்றால் ஊரே அதற்கொண்டு 
    
காவல் செறிய மாட்டி ஆய்தொடி 
    
எழின்மா மேனி மகளிர் 
10
விழுமாந் தனர்தங் கொழுநரைக் காத்தே. 

     (சொ - ள்.) விழவும் உழந்தன்று - ஊரிலே செய்யப்படுந் திருவிழாவுஞ் செய்து முடிந்தது; முழவும் தூங்கின்று - மத்தளமும் ஓசை யொழிந்தது; எவன் குறித்தனள் என்றி ஆயின் - இக் காலத்து இவள் யாது கருதினாளோ? என்று கேட்பாயாயின் கருதியது கூறாநிற்பேன்; தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவில் இளையோள் இறந்த அனைத்தற்கு- ஒருநாள் உடுக்குந் தழையை அணிந்து அத் தழையசையும் அல்குலையுடையாளாய்த் தெருவின்கண்ணே இவ்விளையோள் சென்ற அவ்வொரு காரணத்திற்காக; பழ விறல் ஓரிக் கொன்ற ஒரு பெருந்தெருவில் - பழைமையாகிய வெற்றியையுடைய கொல்லிமலைத் தலைவனாகிய வல்வில் ஓரியைக் கொன்ற மலையமான் திருமுடிக்காரி என்பான் உடனே அவ்வோரியினது ஒப்பற்ற பெரிய தெருவிலே; புக்க காரி நேரார் புலம்போல் - புகுந்ததைக் கண்ட அக் காரியின் பகைவராகிய ஓரியைச் சார்ந்த யாவரும் ஒருசேர நின்று பேரிரைச்சலிட்டாற்போல; ஊர் கல்லென்றன்று - இவ்வூரிலே கல்லென்னும் நகையொலி உண்டாயிற்று; அதன் கொண்டு ஆய்தொடி எழில் மா மேனி மகளிர் காவல் செறிய மாட்டி - அந் நகையொலியைக் கேட்டலும் இவள் நங்களுடைய கேள்வரைக் கைப்பற்றிக்கொண்டு செல்லாநிற்கும் என்றெண்ணி ஆராய்ந்தணிந்த வளையையுடைய அழகிய மாந்தளிர் போன்ற மேனியையுடைய மாதர்கள் காவல் செறியச் செய்து; கொழுநரைக் காத்து விழுமாந்தனர் - தம்தம் கொழுநரைப் பாதுகாத்துக்கொண்டு நன்மையடைந்தார்கள்; அங்ஙனம் அவரவர் பாதுகாத்ததனால் இவள் செயல் பயன்படாமையின் இவனைக் கைக்கொண்டகன்றனள் காண்; இவட்கு இஃதோர் அரியசெயலன்று; எ - று.

     (வி - ம்.) உழந்தன்று - ஒடுங்கிற்றுமாம். தூங்குதல் - அடங்குதல். விழுமாத்தல் - சிறப்படைதல்.

    விழவு முதலாயின இல்லாத காலத்து இவள் வெளிவந்தமையின் ஆண்பாலாரை வயமாக்கவேண்டி என்றாள். மாதர் பலரும் தம்தம் கொழுநரைக் காத்துக்கொண்டன ரென்றதனால், காவாத இவனைக் கைப்பற்றிக்கொண்டன ளென்று குறிப்பாற் கொள்ளுமாறு கூறினாள் ஆயிற்று. மெய்ப்பாடு - வெகுளி. பயன் - விருந்தின் பரத்தையைப் பழித்தல்.

     (பெரு - ரை.) இனி இச் செய்யுட்கு: பரத்தை தன் தோழியை நோக்கித் தோழீ! இப்பொழுது விழவும் இல்லை முழவும் ஒலித்திலது தழை யணிந்து அலமரும் அல்குலையுடையாள் ஈண்டு யாது குறித்து வருகின்றனள்! என்று வினவுகின்றனை. கூறுவன்கேள்! இவள் ஒருநாள் தெருவிற் சென்றமைக்கே மகளிர் தங் கொழுநரைக் காத்துக் கொண்டனர். ஆதலால் இவள் இப்பொழுது தனக்கு வேண்டிய காமுகக் கயவர் கிடைக்கப் பெறாமையால் அவரைத் தேடித் திரிகின்றாள் காண்!' எனப் பொருள் கோடல் கூடும். இவள் காமுகரைத் தேடித் திரிகின்றாள் என்பது குறிப்பெச்சம் என்க. இதனால் தலைவனையும் அவன் புதிய பரத்தையையும் ஒரு சேரக் குறிப்பாக இகழ்ந்தாளாதல் காண்க. 'விழவும் மூழ்த்தன்று' பாடம்.

(320)