(து - ம்,) என்பது, வெளிப்படை.
(உரை இரண்டற்குமொக்கும்.) (இ - ம்.) இதற்கு, "வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.
| ஆங்ஙனந் தணிகுவது ஆயின் யாங்கும் |
| இதனிற் கொடியது பிறிதொன் றில்லை |
| வாய்கொல் வாழி தோழி வேயுயர்ந்து |
| எறிந்துசெறித் தன்ன பிணங்கரில் விடர்முகை |
5 | ஊன்தின் பிணவின் உட்குபசி களைஇயர் |
| ஆளியங்கு அரும்புழை ஒற்றி வாள்வரிக் |
| கடுங்கண் வயப்புலி ஒடுங்கும் நாடன் |
| தண்கமழ் வியன்மார்பு உரிதினிற் பெறாது |
| நன்னுதற் பசந்த படர்மலி அருநோய் |
10 | அணங்கென உணரக் கூறி வேலன் |
| இன்னியங் கறங்கப் பாடிப் |
| பன்மலர் சிதறியர் பரவுறு பலிக்கே. |
(சொ - ள்.) தோழி வாழி - தோழீ! வாழ்வாயாக!; வேய் உயர்ந்து எறிந்து செறித்துஅன்ன பிணங்கு அரில் விடர் முகை - மூங்கில் உயர்ந்து வளரப்பெற்று இடையே வெட்டி நெருக்கி வைத்தாற்போன்ற பின்னிய புதர்களையுடைய மலைப் பிளப்பை அடுத்த துறுகல்லிடத்து; ஊன் தின் பிணவின் உட்கு பசி களைஇயர் - ஊனைத் தின்னுகின்ற பெண்புலிக்கு உளதாகிய அஞ்சத்தக்க பசிையைப் போக்க வேண்டி; ஆள் இயங்கு அரும்புழை ஒற்றி வாள் வரிக் கடுங் கண் வயப்புலி ஒடுங்கும் நாடன் - மக்கள் இயங்குகின்ற நுழைதற்கரிய சிறுவழியை யடுத்து வாள் போன்ற கோடுகளையும் கொடிய கண்ணையுமுடைய வலிய ஆண்புலி பதுங்கியிருக்கும் மலைநாடனது; தண் கமழ் வியன் மார்பு உரிதினில் பெறாது நல் நுதல் பசந்த படர்மலி அருநோய் - தண்ணிதாய்க் கமழ்கின்ற அகன்ற மார்பை உரிமையாகப் பெறாமையால் உண்டாகிய நல்ல நுதலிலே பசப்பெய்திய நினைத்தல் மிக்க நீங்குதற்கரிய இந் நோய்; அணங்கு என உணரக் கூறி - முருகவேள் அணங்கியதால் உளதாயிற்றென்று அன்னை அறியும்படி சொல்லி; வேலன் இன் இயம் கறங்கப் பாடி - படிமத்தான் (பூசாரி) தனது துடி முதலாய வாச்சியம் ஒலிக்கப் பாடி; பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கு - பலவாய பூக்களைத் தூவித் துதித்து 'இவ் யாட்டினை ஏற்றுக்கொள்' ளென்று, அதனை அறுத்துக் கொடுக்கும் பலிக்காக; ஆங்ஙனம் தணிகுவது ஆயின் - அவ்வண்ணம் இந் நோய் தணிவதாயினோ; யாங்கும் இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை - எவ்விடத்தும் இதனினுங் காட்டில் கொடியது பிறிதொன்று இல்லை கண்டாய்; வாய்கொல் - அவ்வண்ணம் தணியு மென்பது மெய்ம்மைதானோ? ஆமாயிற் கூறுவாய்; எ-று.
(வி - ம்.) வாய் - உண்மை. புழை - நுழைவழி. ஒற்றுதல் - அடுத்தல்.
உரிமையிற் பெறாததனாலே பசலைநோய் தோன்றியதென்பாள் வரைந்து உரிமையிற் பெறுமாறு அறிவுறுத்தினாள். நீடிப்பின் அன்னை வெறியெடுப்ப அதனால் இறந்துபாடெய்துமெனவும் அறிவுறுத்தினாளாயிற்று. இது, பசலை பாய்தல்.
உள்ளுறை:- பெண்புலியின் பசியைப் போக்க ஆண்புலி இரைதேடிப் பதிவிருக்குமென்றது, தலைவியின் படர்மலியருநோய் போக்கி வரைந்தெய்துமாறு தலைமகன் விரைவிலே பொருளீட்டச்சென்று பெற்றுவருவானாகவென்றதாம். மெய்ப்பாடு - மருட்கையைச் சார்ந்த பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) உயங்குபசி களைஇயர் என்றும், சிதறிப் பரவுறு என்றும் பாடமுண்டு.
(322)