திணை : குறிஞ்சி.

     துறை : இது, தலைமகன் பாங்கற்குச் சொல்லியது.

     (து - ம்,) என்பது, பாங்கற் கூட்டத்துப் பாங்கன் தலைவனை நெருங்கி நீ கூறுகின்ற மங்கை எவ்விடத்து எவ்வடிவின ளென்றானுக்கு அவள் தந்தையினது இல்வயின் இராநின்றனள்; அன்னை உணவூட்ட வந்துழி அவளை அலையப்படுத்தித் தான் ஓடியுலாவும் இளம் பருவத்தினளென இயலிடங் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்" (தொல். கள. 11) என்னும் விதிகொள்க.

     திணை : (2) பாலை.

     துறை : இடைச்சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉமாம்.

     (து - ம்,) என்பது, கொண்டுதலைக்கழிய இடைச்சுரத்துக் கண்டோர் காலினாற் பந்து உருட்டுபவள்போல வெயிலிலே நடந்துசெல்ல மாட்டாது ஓடாநிற்கும்; இவளையீன்ற தாய் என்னென்று வருந்துங் கொலோவென்று இரங்கிக்கூறா நிற்பதுமாம். (உரை இரண்டற்கு மொக்கும்.)

     (இ - ம்.) இதற்கு, "பொழுது மாறும் . . . . சேய்நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும் கண்டோர் மொழிதல் கண்டது என்ப" (தொல். அகத். 40) என்னும் விதி கொள்க.

    
அந்தோ தானே அளியள் தாயே 
    
நொந்தழி அவலமொடு என்னா குவள்கொல் 
    
பொன்போல் மேனித் தன்மகள் நயந்தோள் 
    
கோடுமுற்று யானை காடுடன் நிறைதர 
5
நெய்பட் டன்ன நோன்காழ் எஃகின் 
    
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின் 
    
ஆடுபந்து உருட்டுநள் போல ஓடி 
    
அஞ்சில் ஓதி இவளுறும் 
    
பஞ்சி மெல்லடி நடைபயிற் றும்மே. 

     (சொ - ள்.) பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள் - பொன் போலுகின்ற மேனியையுடைய தன் புதல்வியாகிய இவளுடைய விருப்பத்தின்படி நடத்துபவள் ஆதலால்; தாய் அளியள் - இவளை ஈன்ற தாய் யாவராலும் இரங்கத்தக்காள்; தான் நொந்து அழி அவலமொடு என் ஆகுவள் கொல் - அவள் தான் நொந்து அழிகின்ற அவலமுடனே இனி எவ்வண்ணம் ஆகுவளோ?; அந்தோ கோடு முற்று யானை காடு உடன் நிறைதர நெய் பட்டு அன்ன நோன் காழ் எஃகின் செல்வத் தந்தை - ஐயோ! தந்தங்கள் முற்றிய யானை தனது காட்டில் நிறையப் பெருகியதால் அத்தகைய செல்வமுடைய நெய் பூசினாலொத்த வலிய காம்பு பெருகிய வேற்படை ஏந்திய தந்தையினது; இடன் உடை. வரைப்பின் - அகற்சியையுடைய இடத்தில்; ஆடு பந்து உருட்டுநள் போல - விளையாடுகின்ற பந்தைக் காலால் உருட்டுபவள் போல; ஓடி அம் சில் ஓதி இவள் உறும் பஞ்சி மெல் அடி நடை பயிற்றும் - ஓடியோடி அழகிய சிலவாகிய கூந்தலையுடைய இவளுடைய மிக்க பஞ்சு போன்ற மெல்லிய அடிகள் நடைபயிற்றா நிற்குமே! எ - று.

     (வி - ம்.) சாணையாலாகிய மெருகு நெய்பூசினாலொத்தலின் நெய் பட்டன்ன எஃகு என்றார். இனி நெய்பூசிய அத்தகைய வேலெனவுமாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - பாங்கற்குணர்த்தல்.

     இரண்டாந்துறைக்குப் பொன்போன்ற மேனி வாடுமென்று வருந்துவள் ஆதலின் என்னாகுவளோவென்றார். செல்வத் தந்தையின் புதல்வி இங்ஙனம் ஓடுமேயென்றிரங்கி அந்தோவென்றார். பரலில் நடை பயிற்றுமே பஞ்சிமெல்லடியன்றேயென் றிரங்கினாரென்பது. மெய்ப்பாடு - அழுகை. பயன் - ஆற்றாதுரைத்தல்.

     (பெரு - ரை.) வேற்படையின் காம்பு முதிர்ந்த கன் மூங்கிற் கோலாகலின் அஃது இயல்பாகவே நெய்பூசப்பட்டது போன்று பளபளப்புடையதாகலின் நெய்பட்டன்ன நோன்காழ் எஃகின் என்றார் என்க.

(324)