(து - ம்,) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றானைத் தோழி நெருங்கி, எம் பெருமானே! பிரிகின்றனை என்பதறிந்த இவள் கண் நீர்வடியக் கண்டும் கொடிய காட்டில் நீ செல்லுதல் தகுதியாமோ? நும் செலவு தவிர்க என அவன் செலவழுங்கும் வண்ணங் கூறாநிற்பது.
(இ - ம்.) "இதற்கு, பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்" (தொல். கற். 9) என்னும் விதி கொள்க.
| கவிதலை எண்கின் பரூஉமயிர் ஏற்றை |
| இரைதேர் வேட்கையின் இரவிற் போகி |
| நீடுசெயற் சிதலைத் தோடுபுனைந்து எடுத்த |
| அரவாழ் புற்றம் ஒழிய ஒய்யென |
5 | முரவாய் வள்ளுகிர் இடப்ப வாங்கும் |
| ஊக்கருங் கவலை நீந்தி மற்றிவள் |
| பூப்போல் உண்கண் புதுநலஞ் சிதைய |
| வீங்குநீர் வாரக் கண்டும் |
| தகுமோ பெரும தவிர்கநும் செலவே. |
(சொ - ள்.) பெரும இவள் பூப் போல் உண்கண் புதுநலம் சிதைய வீங்கு நீர் வாரக் கண்டும் - பெரும! இவளுடைய நீலமலர் போன்ற மையுண்ட கண்களின் புதிய அழகு சிதையும்படி மிக்க நீர் வடிதலைக் கண்டு வைத்தும்; கவிதலை எண்கின் பரூஉமயிர் ஏற்றை - கவிந்த தலையையும் பருத்த மயிரையுமுடைய ஆண்கரடி; இரை தேர் வேட்கையின் இரவில் போகி - தான் இரை தேடி உண்ணும் விருப்பத்தினால் இரவிலே சென்று; நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த அர வாழ் புற்றம் ஒழிய - நீடிய செய்கையையுடைய கறையான் கூட்டம் செய்து உயர்த்திய பாம்புகள் வாழ்கின்ற புற்றில் உள்ள இச் சிதலை ஒருங்கே ஒழியும்படி ; 'ஓய்' என முரவாய் வள் உகிர் இடப்ப வாங்கும் ஊக்கு அரும் கவலை - விரைவாக ஒடிந்த வாயையுடைய பெரிய நகங்களாலே பறித்து உள்ளிருக்கும் குரும்பி முதலாயவற்றை உறிஞ்சி இழுக்காநின்ற உள்ளத்தால் நினைத்தற்குமரிய கவர்த்த சுர நெறியிலே; நீந்தி நும் செலவு தகுமோ - கடந்து நீயிர் செல்லத்தகுமோ?; தவிர்க - (தகாது) ஆதலால் நீயிர் செல்லுவதைத் தவிர்ப்பீராக!; எ - று.
(வி - ம்.) சிதலைத்தோடு - கறையான் கூட்டம். முரவு - ஒடிதல்; முரவாய் - ஒடிந்த வாய். நீந்தி என்பதை நீந்தவெனத் திரிக்க. குழாத்தொடுஞ் செல்லுதலால் நும் செலவெனப் பன்மையாற் கூறினாள்.
இறைச்சி:- கரடி இரைதேர் வேட்கையாலே புற்றைப் பெயர்த்து இரவிலுண்ணுமென்றது, இவளது காமம் நின்னைக் கூடும் வேட்கை மீதூர்தலானே இவளுயிரை உண்டொழிக்கும் என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல்.
(பெரு - ரை.) சிதலை இடையறாது தொழில் செய்து புற்றெடுத்தல் பற்றி நீடு செயற்சிதலை எனப்பட்டது. அர - அரா. இயற்கை நலத்தோடமையாது தலைவனோடு கூடியிருத்தலால் உண்டாகும் பேரழகினைப் புதுநலம் என்றாள்.
(325)