திணை : குறிஞ்சி.

     துறை : இது, தோழி தலைமகனை வரைவுகடாயது.

     (து - ம்,) என்பது, பலகாலுங் களவுமேற்கொண்டு வந்தொழுகுந் தலைமகனைத் தோழி நெருங்கி, நாடனே! நீ எந்நாளும் வந்துமுயங்கியகன்றும் இன்னதனால் உண்டாயதென்று அறியவியலாதபடி இவள் கண்கள் பசப்பூரா நிற்கும்; அதனை நின்பால் உரை செய்யவும் வெள்குவேன்; இவள் இவ்வாறு துன்புறாதபடி மணந்து ஓம்புவாயாக என்று சூழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    
கொழுஞ்சுளைப் பலவின் பயங்கெழு கவாஅன் 
    
செழுங்கோள் வாங்கிய மாச்சினைக் கொக்கின் 
    
மீன்குடை நாற்றந் தாங்கல்செல் லாது 
    
துய்த்தலை மந்தி தும்மும் நாட 
5
நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே 
    
நுண்கொடிப் பீரத்தின் ஊழுறு பூவெனப் 
    
பசலை ஊரும் மன்னோ பன்னாள் 
    
அறிஅமர் வனப்பினெங் கானம் நண்ண 
    
உண்டெனும் உணரா வாகி 
10
மலரென மரீஇ வரூஉம் இவள் கண்ணே. 

     (சொ - ள்.) கொழுஞ் சுளைப் பலவின் பயங்கெழு கவா அன் செழுங் கோள் வாங்கிய மாச் சினை - கொழுத்த சுளையையுடைய பலாவின் பயன் மிக்க மலைப் பக்கத்தில் செழுமையாகிய காய் காய்த்துப் பருத்தலாலே தாங்கமாட்டாது வளைந்த கரிய கிளையிலே வந்து தங்கிய; கொக்கின் மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது - கொக்கானது மீனைக் கொணர்ந்து குடைந்து தின்னுதலால் உண்டாகிய புலவு நாற்றம் பொறுக்கவியலாது; துய்த்தலை மந்தி தும்மும் நாட - ஆங்குள்ள பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி தும்மா நிற்கும் மலை நாடனே!; பல் நாள் அறி அமர் வனப்பின் எம் கானம் நண்ண உண்டு எனும் - பலநாளும் அறியப்படுகின்ற அமர்ந்த அழகுடைய எமது தினைப்புனத்தை நீ அடைதலுண்டெனினும்; உணரா ஆகி - இன்ன காரணத்தாலே தோன்றினவென்று நம்மால் உணரப்படாதனவாகி; மலர் என மரீஇ வரூஉம் இவள் கண் - நீல மலர் போலப் பொருந்திவரும் இவளுடைய கண்ணில்; நுண் கொடிப் பீரத்தின் ஊழ் உறு பூ எனப் பசலை ஊரும் மன்னோ - நுண்ணிய கொடிப் பீர்க்கின் மலர்ந்த பிற்றை நாள் உதிரும் பழம் பூவின் நிறம்போலப் பசலை உண்டாகாநிற்கும்; நினக்கும் உரைத்தல் நாணுவல் - அதனை நினக்குச் சொல்லவும் யான் வெட்கமுடையவளாயிராநின்றேன்; இவட்கு - இவட்கு இத்தகைய துன்பம் வாராதபடி காப்பாயாக; எ - று.

     (வி - ம்.) ஊழுறுபூ - மலர்ந்து கழியும் பழம்பூ. உண்டெனும்: உண்டெனினும் என்பதன் இடைக்குறை.

     காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப் படுவதோர் உள்ளவொடுக்கத்தாற் கூற நாணுவலென்றாள்.

     உள்ளுறை:- பலாமரம் தினைப்புனமாகவும், கொக்குத் தலைவனாகவும், மீன்தலைவியாகவும், குடைதல் இன்பந்துய்த்தலாகவும், நாற்றம் அலராகவும், மந்தி அன்னையாகவுங்கொண்டு பலாமரத்தின்மீது கொக்கிருந்து மீனைத் தின்னுதலானாகிய நாற்றத்தைத் தாங்கமாட்டாது மந்தி தும்முதல்போலத் தினைப்புனத்து நீ வந்து இவளைக் கலந்து செல்லுதலால் உண்டாகிய அலரைத்தாங்கமாட்டாது அன்னை சினந்து பலகாலும் நோக்காநிற்கும் என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை.) "அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண வண்டெனும் உணரா வாகி மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்" என்றும் பாடம்; இதுவே பொருத்தமான பாடம். இதனை அரி அமர் என மரீஇ வரூஉம் இவள்கண் - எனக் கண்ணழித்து வண்டுகள் விரும்புகின்ற அழகுடைய எமது பூம்பொழிலின்கண் ஆடற்கு யாங்கள் நண்ணாநிற்ப ஆண்டுறையும் வண்டுகள் சிறிதும் உண்மை உணரமாட்டாவாய் இவையும் மலர்களே என்று கருதித் தேனுகர்தற்கு அணுகி வருதற்குக் காரணமான இவளுடைய கண்களில் என்று பொருள் கூறுக. (சொ - ள்.) உரையில் இவட்கே என்னும் சொல் இயைபின்றி விடப்பட்டது. அதனை இவள்கண்ணில் இவட்குப் பசலையூரும் என இயைத்துக்கொள்க.

(326)