திணை : நெய்தல்.

     துறை : இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய தலைமகள் வன்பொறை எதிரழிந்தது.

     (து - ம்,) என்பது, தலைவன் மணந்துகொள்ளாது களவிலே நெடுங்காலம் வந்து ஒழுகுதலால் வருந்திய தலைமகளைத் தோழி ஆற்றவும், அது பொறாது தோழியை நோக்கி நம் காதலரை நாம் விரும்புவது பழியெனில் அதனினுஞ் சாதலினியதேயாகும்; அது கூடாதாயின் அவர் மார்பை உரிமை உடையோமாதல் இனிதேயாகும்; இவ்விரண்டனுள் ஒன்றனை அடைவது நன்மையாமென அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதிகொள்க.

    
நாடல் சான்றோர் நம்புதல் பழியெனின் 
    
பாடில கலுழுங் கண்ணொடு சாஅய்ச் 
    
சாதலும் இனிதே காதலந் தோழி 
    
அந்நிலை அல்ல ஆயினுஞ் சான்றோர் 
5
கடன்நிலை குன்றலும் இலரென்று உடனமர்ந்து 
    
உலகங் கூறுவது உண்டென நிலைஇய 
    
தாயம் ஆகலும் உரித்தே போதவிழ் 
    
புன்னை ஓங்கிய கானல் 
    
தண்ணந் துறைவன் சாயல் மார்பே. 

     (சொ - ள்.) காதலந் தோழி - என்பால் அன்பு மிக்க தோழீ!; நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் - நம்மை விரும்பிக் களவொழுக்கத்தில் வந்து முயங்கும் சான்றோராகிய தலைவரை நாம் விரும்பி ஒழுகுதல் பழியுடையதாமெனில்; பாடுஇல கலுழுங் கண்ணோடு சாஅய்ச் சாதலும் இனிது - தூங்காதனவாய் அழுகின்ற கண்ணோடு ஏக்கத்தால் இளைத்து இறந்து போதலும் இனியதாகும்; அந்நிலை அல்ல ஆயினும் - அவ்வாறு இறப்பது இயல்புடையதன்றாயினும்; 'சான்றோர் கடன் நிலை குன்றலும் இலர்' என்று - சால்புடையவர் தாஞ்செய்யும் கடமையிலே குறைபடார் என்று; உடன் அமர்ந்து உலகம் கூறுவது உண்டு என - சேரப்பொருந்தி உலகம் கூறுவது உண்டெனக்கொண்டு; போது அவிழ் புன்னை ஓங்கிய கானல் தண்ணந் துறைவன் சாயல் மார்பு - அரும்புகள் மலர்கின்ற புன்னைமர மோங்கிய சோலையையுடைய தண்ணிய துறைவரது மெத்தென்ற மார்பை; நிலைஇய தாயம் ஆகலும் உரித்து - நிலையாகப் பெறத்தக்க தன்மையுடையே மானாலும் அஃது உரியதேயாகும்; இவ்விரண்டனுள் ஒன்றை அடைவது நலமாகுமன்றோ? எ - று.

     (வி - ம்.) சான்றோர்: இரண்டனுருபு விரிக்க. தாயம் - பாகம்; உரிமை. துறைவன் : பன்மையொருமை மயக்கம்.

     உலகங்கூறுதலால் உண்டெனக்கொள்வதன்றி இயல்பாகிய உறுதி அவனிடத்தே தனக்கில்லையாதலின் முதலில் இறப்பதே நலமென்றாள், இறந்துசெய்யக்கடவது யாதுமில்லையாதலின் ஒருகால் உண்டெனக்கொண்டு உரிமையாக்கினும் அமையுமென்று பின்னர்க் கூறினாள்.

     இறைச்சி:- அடைந்தாரைக் கைவிட்ட துறைவனது சோலையாய் இருந்தும் புன்னை, போது அவிழாநின்றதே இஃதென்ன வியப்போ எனப் பொருட்புலத்தே தோன்றியதறிக. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

(327)