சொகுத்தனார்
     திணை : பாலை.

     துறை : இது, பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவங்காட்டி வற்புறுத்தது.

     (து - ம்,) என்பது, தலைமகன் வினைவயிற் பிரிதலால் மெலிவடைந்த தலைமகள் வருந்தலும் அதுகண்ட தோழி நெருங்கிக் காதலர் நம்மையகன்று சென்றாராயினும் சென்றவிடத்தே தங்கியுறைபவரல்லர்; வருவேமென்று அவர் கூறிய கார்காலம் இன்றுதான் தொடங்குகின்றதாதலின் இன்னே வருகுவர்காண்; அதுகாறும் நீ வருந்தாதேகொள்ளென்று வலியுறுத்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, “பெறற்கரும் பெரும்பொருள்” (தொல். கள. 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதனாற் கொள்க.

    
வரையா நயவினர் நிரையம் பேணார் 
    
கொன்றாற்றுத் துறந்த மாக்களின் அடுபிணன் 
    
இடுமுடை மருங்கில் தொடுமிடம் பெறாஅது 
    
புனிற்று நிரை கதித்த பொறிய முதுபாறு 
5
இறகு 1 புடைத்து இற்ற பறைப்புன் தூவி 
    
செங்கணைச் செறித்த வன்கண் ஆடவர் 
    
ஆடுகொள் நெஞ்சமொடு அதர்பார்த்து அல்கும் 
    
அத்தம் இறந்தன ராயினும் நம்துறந்து 
    
அல்கலர் வாழி தோழி உதுக்காண் 
10
இருவிசும்பு அதிர மின்னிக் 
    
கருவி மாமழை கடன்முகந் தனவே. 

     (சொ - ள்.) தோழி வாழி - தோழீ! வாழ்வாயாக!; வரையா நயவினர் நிரையம் பேணார் - அளவு படாத நயமுடையராய் நிரையம் போன்ற தீய நெறியைக் கைக் கொள்ளா தொழுகும் நங்காதலர்; ஆற்றுக்கொன்றுத் துறந்த மாக்களின் அடுபிணன் இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாது - சுரத்திலே கொன்று போகடப்பட்ட மக்களினுடைய கொலையுண்ட பிணங்களில் உள்ள நிறைந்த தீ நாற்றத்தையுடைய அவற்றின் அருகிலே சென்று பறித்துத் தின்ன இயலாது; புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி - ஈன்ற அணிமையால் நெருங்காது வெறுத்துக் கடந்து போயிருந்த புள்ளிகளையுடைய முதிய பருந்து தன் சிறகை அடித்துக் கொள்ளுதலால் உதிர்ந்த பறத்தலையுடைய புல்லிய இறகை; செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர் - சிவந்த அம்பிலே கட்டிய வீரத்தன்மையுடைய மறவர்; ஆடு கொள் நெஞ்சமொடு அதர் பார்த்து அல்கும் அத்தம் இறந்தனர் ஆயினும் - தாம் வெற்றி கொள்ளும் கருத்துடனே நெறியைப் பார்த்து உறைகின்ற மலைவழியிலே சென்றனராயினும்; நம் துறந்து அல்கலர் - நம்மைக் கைவிட்டு அங்கே தங்குபவரல்லர்; உதுக் காண் இரு விசும்பு அதிர மின்னிக் கருவி மா மழை கடல் முகந்தன - அவர் கார்காலத்து வருவே மென்றார் ஆதலின் உவ்விடத்தே பாராய்! கரிய ஆகாயம் அதிரும்படி இடித்து மின்னி இடி மின்னல் முதலாய தொகுதியையுடைய கரிய மேகம் கடனீரை முகந்து வந்தன; அவர் இன்னே வருகுவர் போலும்; எ - று.

     (வி - ம்.) நம்பால் அளவுபடாத அன்புடையராதலின் நினக்கு வருவேமென்று பொய்ச்சூளுரைத்து அதுகாரணமாகப் பின்னரெய்தும் நிரையங்கொள்பவர் அல்லரென்றாள்.

     இறைச்சி:- (1) ஈன்ற பருந்து மக்களிறந்த பிணத்தின் முடை நாற்றம் மிகுதியால் அருகிலே நெருங்கித் தின்னமாட்டாது அகன்று போய் இருக்கும் என்றது, நினது நெற்றியிலே தோன்றும் பசலை அவர் நின்பால் வைத்திருக்கும் காதல் மிகுதியால் குறித்தநாளிலே வருதல் மெய்ம்மை ஆதலின் அதுகண்டு தானே யகன்றொழியும் என்றதாம்.

     இறைச்சி:- (2) கணை செறித்த ஆடவர் வெல்லும் நெஞ்சத்துடன் நெறிநோக்கித் தாங்காநிற்பரென்றது, கொடுமையுடைய அயல்மாதர் பலரும் நின்னை அலர்தூற்றுங் கருத்தோடு அற்றம் நோக்கி இருப்பவர் ஆதலின் நின்மெய்யின் வேறுபாடு அறிந்தால் இகழ்ந்து அலர்தூற்றா நிற்பர் என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) நயவு - நன்மை, நிரையம்; ஆகுபெயர். பிணன் - பிணம். பாறு - கழுகு. பறை - பறத்தல். ஆடு - வெற்றி.

(329)
 (பாடம்) 1. 
புடைத்திட்ட.