திணை : மருதம்.

     துறை : இது, தோழி தலைமகனை வாயின்மறுத்தது.

     (து - ம்,) என்பது பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்து தலைவியின் ஊடலைத் தணிக்கும்படி தோழியை வாயில்வேண்ட, அவள் தலைவனை நோக்கி ஊரனே! நீ பரத்தையரை எம் மனையின்கண்ணே கொண்டு வந்து வதுவை அயர்ந்து தழுவியிருந்தாலும் அவரது மனத்தின்கண் உண்மை அரிதாதலையும் அவர் கற்புடைமகளிராய் எம்மோடொத்தல் அரிதாதலையும் நீ அறிந்தாயல்லைபோலுமென்று கூறித் தலைவனியல்பையும் உள்ளுறையாலே கடிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.

    
தடமருப்பு எருமைப் பிறழ்சுவல் இரும்போத்து 
    
மடநடை நாரைப் பல்இனம் இரிய 
    
நெடுநீர்த் தண்கயந் துடுமெனப் பாய்ந்து 
    
நாள்தொழில் வருத்தம் வீடச் சேட்சினை 
5
இருள்புனை மருதின் இன்னிழல் வதியும் 
    
யாணர் ஊரநின் மாணிழை மகளிரை 
    
எம்மனைத் தந்துநீ தழீஇயினும் அவர்தம் 
    
புன்மனத்து உண்மையோ அரிதே அவரும் 
    
பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து 
10
நன்றி சான்ற கற்போடு 
    
எம்பா டாதல் அதனினும் அரிதே. 

     (சொ - ள்.) தட மருப்பு எருமைப் பிறழ் சுவல் இரும்போத்து - வளைந்த கொம்பையும் வலிமை பெற்று விளங்கிய பிடரியையும் உடைய கரிய எருமைக்கடா; மட நடை நாரைப்பல் இனம் இரிய - இள நடையையுடைய பலவாகிய நாரையின் கூட்டம் எல்லாம் இரிந்தோடும்படியாக; நெடு நீர்த் தண்கயம் துடும் எனப் பாய்ந்து நாள் தொழில் வருத்தம் வீட - நெடிய நீர் நிரம்பிய தண்ணென்ற பொய்கையிலே 'துடும்' என்னும் ஒலியுண்டாம்படி தான் காலையில் உழுத தொழிலின் வருத்தம் நீங்குமாறு பாய்ந்துகிடந்து; சேண் சினை இருள் புனை மருதின் இன்நிழல் வதியும் - தன்னுடம்பின் அயா நீங்கிய பின்னர் நீண்ட கிளைகளையுடைய இருள் நிரம்பிய மருதமரத்தின் இனிய நிழலின் கண்ணே தங்கியிருக்கும்; யாணர் ஊர - புது வருவாயினையுடைய ஊரனே!; நின் மாண் இழை மகளிரை எம்மனைத் தந்து - நின்னுடைய மாட்சிமை பொருந்திய கலன் அணிந்த பரத்தை மகளிரை எமது மனையின்கண் அழைத்துவந்து; நீ தழீஇயினும் - நீ குலமகளிரைப் போலக் கருதி மணந்து தழுவியிருந்தாலும்; அவர் தம் புன் மனத்து உண்மையோ அரிது - அவருடைய புல்லிய மனத்திலே கரவில்லாதபடி மெய்ம்மை தோன்றுதல் அரிதேயாகும்; அவரும் பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப்பயந்து - அவரும் பசிய வளையணிந்த புதல்வியரையும் புதல்வரையும் ஈன்று; நன்றி சான்ற கற்போடு எம்பாடு ஆதல் - நன்மையமைந்த கற்புடனே எம் பக்கத்து அமர்தலும்; அதனினும் அரிது - அதனினுங் காட்டில் அரிய தொன்றாகும்; அங்ஙனமாதலை நீ அறிந்தாய் அல்லை போலும்; எ - று.

     (வி - ம்.) பரத்தை மகளிரை இல்வயிற்கொணர்ந்து வதுவை அயர்ந்து துய்த்தல் வழக்கு. "பிறருமொருத்தியை யெம்மனைத் தந்து வதுவை அயர்ந்தன என்ப" என்றார் (46) அகத்தினும் பொருள் கவரவேண்டிப் பொய்ம்மையாகிய அன்பு காட்டுவராதலின் அவர்மனத்து உண்மையரிதென்றாள். அவர் பெறும் புதல்வியரும் புதல்வரும் நம் குலத்துக்குச் சிறிதளவும் பயனெய்தாரென்பாள், மகளிரொடு சிறுவரையீன்று எம்பாடாதலரிது என்றாள்.

     உள்ளுறை:- எருமைக்கடா தலைவனாகவும், நாரையினம் காமக் கிழத்தியராகவும், கயம் பரத்தையர் சேரியாகவும், மருதநிழல் அன்று பாணன் தூதுபோய்க் கூட்டுவித்த புதிய பரத்தையின் மனையாகவுங் கொண்டு எருமைக்கடா நாரையினம் இரியப் பொய்கையிலே பாய்ந்து வருத்தம் நீங்கியபின் தான் புகுந்துவைக வேண்டிய தொழுவம்புகுதாது மருதநிழலிலே வதிதல் போல நீ முதலிலே காமக்கிழத்தியர்பாற் கிடந்து பின்னர் அவர் அஞ்சியகல வெறுத்துப் பரத்தையர் சேரியின்கண்ணே தங்கி ஆங்கு முயங்கிக் கவற்சி இன்றிக் கிடந்து அதன் பின்னரேனும் மனையகம் புகுதாது பாணன் புணர்ப்பித்த புதிய பரத்தையின்பால் வைகியிருந்தனை; இங்கு நினக்கு வேண்டிக்கிடந்தது என்னையென்றாள் என்பதாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின்மறுத்தல்.

    (பெரு - ரை.) "பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின், மாண்ட அறிவி னவர்" என்றும், "நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிற நெஞ்சிற், பேணிப் புணர்பவர் தோள்" என்றும், "இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச், செப்பமும் நாணும் ஒருங்கு" என்றும் இடித்துரைப்பாள் பரத்தையரை மனைத்தந்து தழுவினும் அவர் மனத்து உண்மை அரிது என்றும், அவர் எம்பாடு ஆதல் அதனினும் அரிது அவர் புன்மையை நீ அறிந்திலை என்றாள். 'அவர் புன்மையை நீ அறிந்திலை" என்பது குறிப்பு. 'பிணர்ச்சுவல்' என்றும் பாடம்.

(330)