(து - ம்,) என்பது, பகற்குறி இடையீடுபட்ட தலைமகன் இரவுக்குறி வந்து கூடுவது கருதினான் தோழியை வினாவ, அவள் அவனை நோக்கிச் சேர்ப்பனே! எம்மூர் இனிமையுடையதே; நீ வருதலால் யாதொரு தவறுமில்லை; தம்தம் உறவினர் ஒருவரை ஒருவர் இன்னாரின்னாரென்றறியாத சேரியையுடையதாதலின் அயலாராய் வருவாரை யறிவதெவ்வண்ணமாகுமென்று அவன் வருதற் குடன்படுவாளாய்க் கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "புணர்ச்சி வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| உவர்விளை உப்பின் உழாஅ உழவர் |
| ஓகை உமணர் வருபத நோக்கிக் |
| கான லிட்ட காவற் குப்பைப் |
| புலவுமீன் உணங்கல் படுபுள் ஓப்பி |
5 | மடநோக்கு ஆயமொடு உடனுப்பு ஏறி |
| எந்தை திமிலிது நுந்தை திமிலென |
| வளைநீர் வேட்டம் போகிய கிளைஞர் |
| திண்திமில் எண்ணும் தண்கடற் சேர்ப்ப |
| இனிதே தெய்யஎம் முனிவில் நல்லூர் |
10 | இனிவரின் தவறும் இல்லை எனையதூஉம் |
| பிறர்பிறர் அறிதல் யாவது |
| தமர்தம் அறியாச் சேரியும் உடைத்தே. |
(சொ - ள்.) புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி - ஆங்குப் புலவு நாற்றத்தையுடைய மீனை உப்புப் படுத்துப் புலர்த்தும்பொழுது அவற்றைக் கொண்டுபோகவந்து விழுங் காக்கை முதலாய புள்ளினங்களை யோப்பி; மட நோக்கு ஆயமொடு உடன் - மடப்பம் பொருந்திய நோக்கத்தையுடைய தோழியர் உடனே; உழாஅ உழவர் உவர் விளை உப்பின் - உழாது விளைவிக்கும் நெய்தனில மாக்களாகிய பரதவர் உவர் நிலத்து விளைகின்ற உப்பினை; ஓகை உமணர் வரு பதம் நோக்கிக் கானல் இட்ட காவல் குப்பை - செறிவுடைய உப்பு வாணிகர் வருகின்ற காலம் நோக்கி்க் கழிக்கரைச் சோலையருகிலே குவடாகக் குவித்த காவலையுடைய குவியலாகிய; உப்பு ஏறி - அவ்வுப்புக் குவட்டில் பரதவர் மகளிர் ஏறி நின்று; இது எந்தை திமில் (அது) நுந்தை திமில் என - இங்கு வருகின்றது எந்தையின் மீன் படகாகும் அங்கு வருகின்றது நின் தந்தையினது மீன் படகாகும் என்று; வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப - வளைந்த கடனீரில் வேட்டைமேற் சென்ற சுற்றத்தாருடைய வலிய மீன் படகுகளை எண்ணுகின்ற தண்ணிய கடற் சேர்ப்பனே!; முனிவு இல் எம் நல்லூர் இனிது - வெறுத்தலைக் கருதாத எம்முடைய நல்லவூர் மிக இனிமையுடையதாய் இரா நின்றது; இனி வரின் தவறும் இல்லை - இப்பொழுது முதலாக என்று வந்தாலும் யாதோர் ஊறுபாடும் இல்லை; தமர்தம் அறியாச் சேரியும் உடைத்து - சுற்றத்தார் ஒருவரையொருவர் அறியாத சேரியை உடையதாதலால்; எனையதூஉம் பிறர் பிறர் அறிதல் யாவது - எவ்வளவேனும் அயலார் ஒருவரையொருவர் அறிவது எவ்வண்ணமியலும்?; ஆதலின் நீ அச்சமின்றி வருவாயாக! எ - று.
(வி - ம்.) வளைநீர் - சங்குகளையுடைய நீருமாம்.
நும்மூர் போன்றதென்பாள், எம்மூர் இனிதேயென்றாள். அன்னை முதலாயினோர் ஐயமின்றி யிருக்கின்றனராதலிற் குறிவயின் தவிராது வருதும் என்பாள், தவறுமில்லையென்றாள். நீ பிற நிலத்தினர்போன்ற கோலத்தொடு வரினும் எமர் அறிபவரல்லரென்பாள், தமர் தம் அறியாச் சேரியது என்றாள்.
உள்ளுறை:- மகளிர் புள்ளோப்பி மாலையில் உப்புக் குவட்டின் மீது ஏறிக் கடலிலே வருகின்ற மீன் படகுகளை நோக்கி இஃது எந்தை திமில் இது நுந்தை திமிலென எண்ணுந்துறை யென்றது, யாங்கள் பகற்பொழுதில் மீனுணங்கலிற் புள்ளோப்பி இரவில் மனையகம் புகுந்திருந்து சோலையிலே நீ வந்து குறிசெய்வதனை நினைந்து இப் புள்ளோசை நீ குறிசெய்தது இவ் வோசை வேற்றுப்புள் வரவெழுந்த ஓசையென நின் வரவை எதிர்பார்த்திருப்போ மென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - இரவுக்குறி நேர்தல்.
(பெரு - ரை.) ஓகை யுமணர் - மகிழ்ச்சியையுடைய உப்பு வாணிகருமாம். உழா உழவர் - பரதவர், காவற்குப்பை உப்பு ஆயமொடு உடன் ஏறி என மாறிக் கூட்டுக. பரதவர் மகளிர் என்னும் எழுவாய் வருவித்தோதுக. இது எந்தை திமில் அது நுந்தை திமில் என ஒரு சுட்டுப்பெய்து கொள்க. தமர் தமரையே அறியாச் சேரி என்பது கருத்து. மிகப்பெரிய சேரி என்றவாறு "ஒழுமையு மணர்" என்றும், தமர் தமர் அறியாச் சேரி என்றும் பாட பேற்றுமையுள. இவைகளே சிறப்புடையனவாம்.
(331)