திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்பத் தலைவி கூறியது.

     (து - ம்,) என்பது, களவின் வந்தொழுகுந் தலைமகனது பிரிவினால் மெலிந்த தலைமகளைத் தோழி நெருங்கி, நின்னை நாள்தோறும் தலைமகன் வந்து முயங்கி முயங்கி ஏகுங்காலையும் நீ மெலிகின்ற தென்கொலோவென்றாட்கு, இறைமகள் இயற்கைப்புணர்ச்சி வந்ததுபோன்று காதலன் கொடிய நெறியை அஞ்சானாய் நாளும் வருதலால் யான் எவ்வாறு துயரின்றி வைகுவேன் என மெலிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பொழுதும் ஆறும் புரைவதன்மையின் அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும்" (தொல். கள. 20) என்னும் விதி கொள்க.

     துறை : (2) வன்பொறை எதிர்மறுத்ததூஉமாம்.

     (து - ம்,) என்பது, வெளிப்படை. (உரை இரண்டற்கும் ஒக்கும்.)

     (இ - ம்.) இதுவுமது.

    
இகுளைத் தோழியிஃது என்னெனப் படுமோ 
    
குவளை குறுநர் நீர்வேட் டாங்கு 
    
நாளும் நாளுடன் கவவவுந் தோளே 
    
தொன்னிலை வழீஇயநின் தொடி யெனப் பன்மாண் 
5
உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர்முகை 
    
ஈன்பிணவு ஒடுக்கிய 1 இருங்கோள் வயப்புலி  
    
இரைநசைஇப் பரிக்கு மலைமுதற் சிறு நெறி 
    
தலைநாள் அன்ன பேணலன் பலநாள் 
    
ஆரிருள் வருதல் காண்பேற்கு 
10
யாங்கா கும்மே இலங்கிழை செறிப்பே. 

     (சொ - ள்.) இகுளைத் தோழி குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு - இகுளையாகிய தோழீ! நீரிலிறங்கி நின்று குவளைமலர் கொய்பவர் தாம் நீர் வேட்கையால் வெய்துற்றாற் போல; தோள் நாளும் நாள் (தோள்) உடன் கவவவும் - நின்னுடைய தோள்கள் நாள்தோறும் காதலனுடைய தோள்களை முயங்கி வைகிய வழியும்; நின் தொடி தொல் நிலை வழீஇய என - நின் கைவளைகள் முன்பு நிலைத்திருந்த இடத்தினின்றும் கழலா நிற்பன என; பல் மாண் நீ உரைத்தல் ஆன்றிசின் - பலகாலும் மாட்சிமைப்பட நீதான் உரையா நின்றனை; முகை விடர் ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கோள் வய புலி - துறுகல்லை அடுத்த மலைப் பிளப்பிடத்தே குட்டிகளை யீன்ற கரிய பெண் புலியுற்ற பசியைப் போக்க வேண்டிப் பெரிய கொலைத் தொழிலை மேற்கொண்ட வலிமையுடைய ஆண்புலி; இரை நசைஇப் பரிக்கும் மலை முதல் சிறுநெறி - இரை வேட்கையாலே பதுங்கியிருக்கின்ற தாழ்வரையில் உள்ள சிறிய வழியிலே; தலை நாள் அன்ன பேணலன் பலநாள் ஆர் இருள் வருதல் காண்பேற்கு - இயற்கைப் புணர்ச்சிக் காலத்து இருந்தாற்போன்ற விருப்ப மிகுதியுடையனாய்ப் பல நாளும் இயங்குதற்கரிய இருளில் வருதலைக் காண்கின்ற எனக்கு; இலங்கு இழை செறிப்பு யாங்கு ஆகும் - என் வளை முதலாய கலன்கள் கழலாதவாறு செறிப்பது எவ்வண்ணம் ஆகும்; இஃது என் எனப்படும் - இங்ஙனம் என் உடம்பு இளைத்தலின் இனி எப்படியாய் முடியுமோ? எ - று.

     (வி - ம்.) இகுளைத் தோழி : இருபெயரொட்டு. பேணலன் - பேணுதலையுடையன்.

     தலைமகன் வந்து முயங்குந்தோறும் தலைநாளிலே கலந்தாலொத்த புதிய புதிய இன்பம் தானும் நுகர்தலானே இயற்கைப்புணர்ச்சியைக் குறிப்பித்தாள்.

     இறைச்சி:- பெண்புலியின் பசியைப் போக்கவேண்டி ஆண்புலி இரைதேடிப் பதுங்கியிருக்கும் நெறியைக் கண்டுவைத்தும் என் கவற்சி நீங்குமாறு காதலன் பொருளீட்டிவந்து மணமுடிக்கக் கருதுகின்றிலனே என்று இரங்கியதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) என் எனப்படுமோ? என்னும் வினாவைத் தோழி கூற்றாக்கினுமாம். இகுளை தோழி என்றும் பாடம். இதற்கு இகுளை என்று தலைவி தோழியை விளித்துப் பின்னர் "தோழி . . . . . தொடி" என்னுந் துணையும் தோழி கூற்றைக்கொண்டு கூறுகின்றாள் எனக்கொள்க. விடரின்கண் பிணவை மறைத்துவைத்த வயப்புலி அதற்கு ஊட்டும் இரையை நசைஇ என்க. பேணலன் - பேணலையுடையவன்.

(332)
  
 (பாடம்) 1. 
கேழ்வயப்புலி. .