(து - ம்,) என்பது, தலைவன்பால் காமவேட்கை மிக்கதனாலாகிய மிகக் கருதிய சொல் மேம்பட்ட தலைமகள் 'திங்கள் விளங்குகின்றது; கடல் ஓசை யடங்கியது இல்லை; அன்றிலும் ஒலியா நிற்கும்; யாழும் யான் உய்யாதபடி இசையாநின்றது; அவற்றைக் கேட்டலானே எனக்குண்டாகிய காமமோ பெரியதாய் இராநின்றது; இதனை ஒழிக்க வல்ல காதலர் அருகிலில்லாது ஒழிந்தனர்; இனி யான் எவ்வாறு உய்வே'னென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "காமஞ் சிறப்பினும்" (தொல். கள. 20) என்னும் விதிகொள்க.
| திங்களுந் திகழ்வான் ஏர்தரும் இளநீர்ப் |
| பொங்குதிரைப் புணரியும் பாடோ வாதே |
| ஒலிசிறந்து ஓதமும் பெயரும் மலிபுனல் |
| பல்பூங் கானல் முள்ளிலைத் தாழை |
5 | சோறுசொரி குடவயின் கூம்புமுகை அவிழ |
| வளிபரந்து ஊட்டும் விளிவில் நாற்றமொடு |
| மையிரும் பனைமிசைப் பைதல உயவும் |
| அன்றிலும் என்புற நரலும் அன்றி |
| விரல்கவர்ந்து உழந்த கவர்வின் நல்யாழ் |
10 | யாமம் உய்யாமை நின்றது |
| காமம் பெரிதே களைஞரோ இலரே. |
(சொ - ள்.) திங்களும் திகழ் வான் ஏர் தரும் - திங்களும் விளங்கிய விசும்பின்கண்ணே எழுந்து தோன்றாநிற்கும்; இளநீர்ப் பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாது - மெல்லிய நீர்மையிற் பொங்கி எழுகின்ற அலையையுடைய கடலும் ஒலி அடங்கியதில்லை; ஒலி சிறந்து ஓதமும் பெயரும் - ஒலிமிகுந்து அக் கடனீரும் கரையை மோதிப் பெயர்ந்து செல்லாநிற்கும்; மலி புனல் பல் பூங் கானல் முள்இலைத் தாழை - நிறைந்த கழிநீர் சூழ்ந்த பலவாய அழகிய கடற்கரைச் சோலையின்கணுள்ள முள்ளையுடைய இலை மிக்க தாழை; சோறு சொரி குட வயின் கூம்பு முகை அவிழ - சோற்றைச் சொரிகின்ற குடம்போலப் பருத்த உள்ளீட்டினையுடைய கூம்பிய அரும்பு மலராநிற்ப; வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு - காற்றானது அப் பூ மடலினுள்ளே புகுந்து பரவி வந்து வீசுகின்ற கெடாத நறுமணத்தடனே; மை இரும் பனைமிசைப் பைதல உயவும் அன்றிலும் என்புறம் நரலும் - கரிய பெரிய பனைமேலிருந்து துன்பத்தைத் தருவனவாய் வருத்துகின்ற அன்றிற் பறவையும் என் பக்கத்தே வந்து ஒலியாநிற்கும்; அன்றி விரல் கவர்ந்து உழந்த கவர்வு இன் நல் யாழ் யாமம் உய்யாமை நின்றது - இவையேயன்றி, விரலாலே தடவி வருந்தி இசை கூட்டிய விருப்பத்தைச் செய்யும் நல்ல யாழும் இரவு நடுயாமத்து யான் உயிர் வைத்து உய்யாவாறு இசையாநின்றது; காமம் பெரிது - அவை அனைத்தினுங் காட்டில் யான் கொண்ட காமமோ பெரிதாயிராநின்றது; களைஞர் இலர் - இதனைப் போக்க வல்ல காதலரோ அருகில் இல்லாது ஒழிந்தகன்று போயினார், இனி யான் எவ்வாறு உய்குவேன்? எ - று.
(வி - ம்.) முற்கூறிய அவையனைத்துங் காமத்தை மிகுதிப்படச் செய்தலானே காமம் பெரியதே யென்றாள். களைஞர் இன்மையால் உய்வேனலேன் இறந்து படுவது திண்ணமெனக் கருதினாளாயிற்று. மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) இளநீர் - மென்மைத் தன்மை. பாடு - ஓசை. கவர்வு - விருப்பம்; கவர்ச்சி. "இமிழ்நீர்ப் பொங்கு திரை" என்றும் "சோறு சொரி குடையின்" என்றும் பாடம்.
(335)