(து - ம்,) என்பது, இரவிலே கொடிய நெறியின்கண்ணே களவொழுக்கத்து வருந் தலைமகனை மறுத்து வரைவுடன்படுத்தக் கருதிய தோழி நெருங்கி நாடனே! இரவில் நெறியினது ஏதம் அஞ்சாது வாராநின்றனை; அதனை யான் நினையாமுன் அஞ்சுகிற்பேனாதலால் அவ் வரைநெறியில் வாராது ஒழிவாயாக என அந்நெறியினது ஏதங்கூறி உள்ளுறையால் இவளை வதுவையயர்ந்து மனையறம்படுத்து வாழ்கவென நுவன்று வரைவுகடவா நிற்பது.
(இ - ம்.) இதனை, "ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்" (தொல். கள. 23) என்னும் விதியாற் கொள்க; இனி, “களனும் பொழுதும் . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியுமாம்.
| பிணர்ச்சுவல் பன்றி தோன்முலைப் பிணவொடு |
| கணைக்கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின் |
| கல்லதர் அரும்புழை அல்கிக் கானவன் |
| வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றைப் |
5 | புனையிருங் கதுப்பின் மனையோள் கெண்டிக் |
| குடிமுறை பகுக்கும் நெடுமலை நாட |
| உரவுச்சின வேழம் உறுபுலி பார்க்கும் |
| இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின் |
| ஈரளைப் புற்றங் காரென முற்றி |
10 | இரைதேர் எண்கினம் அகழும் |
| வரைசேர் சிறுநெறி வாரா தீமே. |
(சொ - ள்.) பிணர்ச் சுவல் பன்றி - சிலிர்த்த மயிர் மிக்க பிடரினையுடைய ஆண்பன்றி; தோல் முலைப் பிணவொடு கணைக்கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின் - தோலாய் வற்றிய கொங்கையையுடைய பெண்பன்றியுடனே சென்று திரண்ட அடித்தண்டுடைய தினைக் கதிரை அளவின்றித் தின்றழித்ததனாலே; கானவன் கல் அதர் அரும்புழை அல்கி - கானவன் மலைவழியிலுள்ள செல்லுதற்கரிய சிறிய புழையருகிலே பதுங்கியிருந்து; வில்லின் தந்த வெள் கோட்டு ஏற்றை - வில்லினால் எய்து கொன்று தந்த வெளிய கோட்டினையுடைய அவ்வாண் பன்றியை; புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டிக் குடி முறை பகுக்கும் - அலங்கரித்த கரிய கூந்தலையுடைய அவன் மனைவி அறுத்துத் தன்சுற்றமாகிய குடிகள் இருக்குமிடந்தோறுஞ் சென்று பகுத்துக் கொடாநிற்கும்; நெடு மலை நாட - நெடிய மலை நாடனே!; உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும் இரவின் - மிக்க வலிய சினமுடைய களிற்றியானை அங்கு வருகின்ற புலியின் வருகையை எதிர்ப்பார்த்து நிற்கும் இரவின்கண்ணே; அஞ்சாய் - நீ இங்கு வருதலை அஞ்சுகின்றனையல்லை; அஞ்சுவல் - அதனை நினையாமுன் யான் அஞ்சாநிற்பேன்; அரவின் ஈர் அளைப் புற்றம் கார் என முற்றி இரைதேர் எண்கு இனம் அகழும் - ஆதலின் பாம்பு உறைகின்ற ஈரிய புழையையுடைய புற்றை மேகம் போலச் சூழ்ந்துகொண்டு இரையிருப்பதனை யாராய்கின்ற கரடியின் கூட்டம் பறித்து எடாநிற்கும்; வரை சேர் சிறு நெறி வாராதீம்-மலையையடுத்த சிறிய நெறியில் இனி வாராதொழிவாய்காண்!; எ-று.
(வி - ம்.) கெண்டுதல் - வெட்டுதல்.
நின்பாற் கழிபேரன்பினே னென்பாள், நீ வருநெறிக்கு அஞ்சுவல் என்றாள். நம்பால் இவ்வளவு அன்புடைமையின் இனி இரவுவரின் இறைமகள் இறந்துபடுவதும் ஆமெனக்கொண்டு இந் நெறியில் வாராதீம் என்றதனாலே பிறிதொன்று செய்யக் கடவதின்மையாற் பிற்றை ஞான்று வரைவொடு புகுவானாவது. அரும்புழை ஒல்கி என்றும் பாடம்.
உள்ளுறை:- தினையைத் தின்ற பன்றியைக் கானவன் கொணர்ந்து கொடுப்ப அவன் மனைவி அதனை வாங்கிப் பகுத்துச் சுற்றத்தார்கள் பலர்க்கும் முறைப்படி கொடுக்கு மென்றது, "நீ இவளை மணஞ்செய்து கொண்டு இல்லறம் நிகழ்த்தத் தொடங்கி வேற்று நாட்டுச் சென்று அடங்காத பகைவரை வென்று பொருளீட்டி இவளிடம் அளித்து இவளும், "தெய்வம், விருந்து, ஒக்கல்" முதலாயினார்க்குக் கொடுக்குமாறு செய்வாயாக" வென்றதாம்.
மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.
(336)