(து - ம்,) என்பது, பொருளீட்டுமாறு பிரிபவர் பிரியவேண்டுபவரே; ஆயினும், அடைந்தாரைக் காப்பது மேலான அறமன்றோ? அதனை "மறந்தனரல்லர் சான்றோ'ரெனக் கூறாநிற்பதுமாகும்.
(உரை இரண்டற்கு மொக்கும்.) (இ - ம்.) இதுவுமது.
| உலகம் படைத்த காலைத் தலைவ |
| மறந்தனர் கொல்லோ சிறந்திசி னோரே |
| முதிரா வேனில் எதிரிய அதிரல் |
| பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர் |
5 | நறுமோ ரோடமொடு உடனெறிந்து அடைச்சிய |
| செப்பிடந்து அன்ன நாற்றந் தொக்குடன் |
| அணிநிறங் கொண்ட மணிமருள் ஐம்பால் |
| தளர்நறுங் கதுப்பின் பையென முழங்கும் |
| அரும்பெறற் பெரும்பயங் கொள்ளாது |
10 | பிரிந்துறை மரபின் பொருள்படைத் தோரே. |
(சொ - ள்.) தலைவ முதிரா வேனில் எதிரிய அதிரல் பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர் - தலைவனே! முற்றாத இளவேனிற் காலத்தை எதிர்நோக்கிய காட்டுமல்லிகை மலரையும் பருத்த அடியையுடைய பாதிரியின் குறுகிய நுண்ணிய மயிரையுடைய சிறந்த மலரையும்; நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய - நறிய செங்கருங்காலி மலரையுங் கொய்து ஒருசேர உள்ளே செறித்திருந்த; செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு உடன் அணி நிறம் கொண்ட - பூஞ்செப்பைத் திறந்து வைத்தாற் போன்ற நறுமணம் ஒருங்கே அமையப்பெற்று அழகிய நல்ல நிறம் பொருந்திய; மணி மருள் ஐம்பால் தளர் - நீலமணி போன்ற ஐந்துபகுதியாக முடித்தற்குரிய சரிந்து விழுகின்ற; பை என முழங்கும் நறுங் கதுப்பின் - வண்டுகள் மெல்ல ஒலித்தலையுடைய நறிய கூந்தலினுடைய; அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது - அருமையாகப் பெறுகின்ற பெரிய பயனைக் கொள்ளாது; பிரிந்து உறை மரபின் பொருள் படைத்தோர் - பிரிந்து உறைகின்ற பகுதியையுடைய பெரிய பொருளீட்டி வாழ்வோர்; உலகம் படைத்த காலை மறந்தனர் கொல் - இவ்வுலகத்தைப் படைத்தகாலம் முதற்கொண்டு அடைந்தாரைப் பாதுகாக்க வேண்டுமென்று அவ்வண்ணமே நிகழ்ந்து வரும் அறநெறியை மறந்துவிட்டனரோ?; சிறந்திசினோர் - அங்ஙனம் மறந்த தகுதிப்பாட்டினையுடையோர் சிறந்தோரேயாவார்; எ - று.
(வி - ம்.) நறுமோரோடம் - செங்கருங்காலி. அதிரல் - காட்டுமல்லிகை. வண்டு: அவாய்நிலை. சிறந்திசினோர்: இகழ்ச்சிக் குறிப்பு. முழங்கும் கதுப்பென மாறிக் கூட்டுக; இனிக் கதுப்பின் வண்டு முழங்கும் பெரும் பயனெனக் கூறிற் பொருள் சிறவாமை யறிக.
அணையிலே தயங்கிக் கூந்தலிற்கிடந்து துயிலும் பயன் பெரிதாதலானே கதுப்பிற் பெரும் பயனென்றாள்.
மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல்.
(பெரு - ரை.) உலகம் படைத்த காலைச் சிறந்தோர் ஐம்பால் தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும் அரும்பெறற் பயன் கொள்ளாது மறந்தனர் கொல்லோ? என்றியைத்தல் நேரிது. மறவாராயின் பொருள் படைத்தற்குப் பிரிந்துறையத் துணியார் என்பது கருத்து.பைஎன முள்கும் என்றும் பாடம்; இப் பாடமே சாலச் சிறந்ததூஉமாம். கதுப்பில் முள்குதலாவது : கதுப்பில் முகம் புதைத்து அதனை நுகர்ந்து மகிழ்தல்.
(337)