திணை : நெய்தல்.

    துறை : இஃது, ஒருவழித் தணந்தகாலை ஆற்றாத தலைமகள் வன்பொறை எதிர்மொழிந்தது.

    (து - ம்,) என்பது, களவுக் காலத்துத் தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகா நிற்கையில் அலரெழுந்தது கண்டு அவ் வலர் அடங்குங்காறும் அகன்று வைகுவமெனப் பிரிந்து ஒருசார் சென்றுறையுங்காலைப் பிரிவால் ஆற்றாத தலைமகள் தோழியை நெருங்கி நீ என்னை வருந்தாது பொறையோடிரு வென்று புகலா நின்றனை; மாலைவந்தது; அவர் தேர் வந்திலது கண்டாய்; காம நோய் என்னை நலியா நின்றது; நாரை பெடையை முயங்கும்படி அழையா நிற்கும்; இன்னதொரு பொழுதில் யான் எங்ஙனம் துயரம் நீங்கி உறைவேன் என்று நொந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதிகொள்க.

    
கடுங்கதிர் ஞாயிறு மலைமறைந் தன்றே 
    
அடும்புகொடி துமிய ஆழி போழ்ந்தவர் 
    
நெடுந்தேர் இன்னொலி இரவுந் தோன்றா 
    
இறப்ப எவ்வம் நலியும் நின்நிலை 
5
நிறுத்தல் வேண்டும் என்றி நிலைப்ப 
    
யாங்ஙனம் விடுமோ மற்றே மால்கொள 
    
வியலிரும் பரப்பின் இரையெழுந் தருந்துபு 
    
புலவுநாறு சிறுகுடி மன்றத் தோங்கிய 
    
ஆடரைப் பெண்ணைத் தோடுமடல் ஏறிக் 
10
கொடுவாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய 
    
உயிர்செலக் கடைஇப் புணர்துணைப் 
    
பயிர்தல் ஆனா பைதலங் குருகே. 

    (சொ - ள்.) கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்று - கடிய கதிரையுடைய ஞாயிறும் மேலைத் திசையிலுள்ள அத்தமனக் குன்றின் கண்ணே மறைந்தொழிந்தது; அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர் நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா - அடும்பின் கொடிகள் துண்டித்து விழும்படி தேருருள் ஊர்ந்து வருமாறு அவருடைய நெடிய தேரின் இனிய ஒலி இரவு இத்துணைப் பொழுதாகியும் தோன்றினபாடில்லை; எவ்வம் இறப்ப நலியும் - காமநோய் தன் எல்லையளவையுங் கடந்து தோன்றி என்னை நலியாநின்றது; மால்கொள பைதல் குருகு - இவை போதாமல் இன்னும் காமமயக்கம் மீதூருமாறு துன்பத்தைச் செய்யும் நாரையானது; வியல் இரும் பரப்பின் எழுந்து இரை அருந்துபு - அகன்ற கரிய கழிப்பரப்பின் கண்ணே எழுந்து சென்று இரைதேடி யருந்தி; புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி - அதன்பின் புலவு நாறும் நமது சிறிய குடியிலுள்ள ஊர்ப்பொதுவாகிய அம்பலத்தின்கண் உயர்ந்த காற்றால் அசைகின்ற பருத்த அடியையுடைய பனையின் தோடாகிய மடலில் ஏறியிருந்து; கொடுவாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய - வளைந்த வாயையுடைய பேடை தன் குடம்பையில் வந்து தன்னோடு புணருமாறு; உயிர் செலக் கடைஇ - யான் கேட்டு உடனே என்னுயிரை விடுக்கும் வண்ணம் கடிந்து; புணர் துணைப் பயிர்தல் ஆனா - தான் தன் பெடையொடு புணர்ச்சி துணியுமளவும் அதனைக் கூவுதலை நிறுத்தவில்லை; நின் நிலை நிறுத்தல் வேண்டும் என்றி - இத்தகைய பொழுதிலே என்னை நெருங்கி, 'நீ படுந்துயர் ஏதிலார் அறியாதபடி கரந்தொழுகவேண்டும்' என்று கூறாநின்றனை; நிலைப்ப யாங்ஙனம் விடும் - இந்நோய் இனி யான் உயிர்நிலைத்திருக்கும் வண்ணம் எப்படி என்னைவிட்டு ஒழியுமோ? எ - று.

    (வி - ம்.) குருகு அருந்துபு ஏறிக் கடைஇப் பயிர்தலை அமையாவென்க.

    அஃறிணையாகிய குருகும் இரையருந்திக் குடம்பையிலே சென்று இருந்து தான்பெடையை யணையுமளவும் அதனை விளியா நிற்கும், எல்லாம் அறிந்த நம் காதலர் அங்ஙனஞ் செய்வாரல்லர்; யான் எவ்வாறுய்வேன் எனவுமாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) பகற்பொழுதில் ஒருவாறு ஆற்றியிருப்பேன்மன்; அப் பகற்பொழுதும் கழிந்து பொல்லாத மாலைப் பொழுதும் புக்கதே என்று இரங்குவாள் 'ஞாயிறு மலை மறைந்தன்றே' என்றாள்.

(338)