(இ - ம்) இதுவுமது,
| மாவென மதித்து மடலூர்ந்து ஆங்கு |
| மதிலென மதித்து வெண்தேர் ஏறி |
| என்வாய் நின்மொழி மாட்டேன் நின்வயின் |
| சேரி சேரா வருவோர்க் கென்றும் |
5 | அருளல் வேண்டும் அன்புடை யோயெனக் |
| கண்ணினி தாகக் கோட்டியுந் தேரலள் |
| யானே எல்வளை யாத்த கானல் |
| வண்டுண் நறுவீ நுண்ணிதின் வரித்த |
| சென்னி சேவடி சேர்த்தின் |
10 | என்னெனப் படுமோ என்றலும் உண்டே. |
(சொ - ள்) அன்புடையோய் என்வாய் நின்மொழிமாட்டேன் மா என மதித்து மடல் ஊர்ந்து மதில் என மதித்து வெள்தேர் ஏறி - அன்புடைய தோழீ! கானலின்கண் ஒருவர் என்பால் வந்து இரந்து கூறலும் அதனைப் பொறேனாகி 'என்வாயினால் நீ கூறும் மொழியைச் சென்று தலைவியிடம் கூறுகின்றிலேன், நின் குறை நீயே சென்றுரை' யென்றதனாலே மயங்கி நின்று, குதிரை எனக் கருதிப் பனைமடல் ஏறிவந்தும், இது காவலையுடைய மதில் என மதித்து வெளிய பேய்த்தேரைச் சென்று நோக்கியும்; நின் வயின் சேரி சேரா வருவோர்க்கு என்றும் அருளல் வேண்டும் என - நீ இருக்கின்ற சேரியைச் சார வருபவர்க்கு எக்காலத்தும் அருள் செய்ய வேண்டும் என்று; யான் கண்இனிது ஆகக் கோட்டியும் எல்வளை தேரலள் - யான் கண்ணினால் இனியகுறிப்புத் தோன்றத் தலைசாய்த்துக் காட்டியும் ஒளிபொருந்திய வளையையுடைய தலைவி அவற்றை அறிந்துகொண்டனளல்லள்; யாத்த கானல் வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த ஆங்கு - ஆதலால் யானே வேலி சூழ்ந்த கடற்கரைச் சோலையில் வண்டுகள் உண்ணுகின்ற நறிய மலருதிர்ந்து நுண்ணியதாகக் கோலஞ் செய்த அவ்விடத்து; சென்னி சேவடி சேர்த்தின் - எனது தலை அவ்விறைமகளின் சிவந்த அடிகளிலே சேர்த்து வணங்கினால்; என் எனப்படும் என்றலும் உண்டு - அத் தலைவர் செயல் இப்பொழுது எப்படியாயிருக்கின்றதோ? என்று என்னை வினாவலும் உண்டாகும்; அப்பொழுது நிகழ்ந்தவற்றைக் கூறுவேன்; எ - று.
(வி - ம்) மதிலென மதித்தல் - மடன்மாமீதேறி மதிலைச் சூழ்போதற்குக் கருதுதல். ஊர்ந்து ஏறிச் சேரா வருவோரென்க. எல்வளை : அன்மொழித் தொகை.
காமங்காழ்கொண்டு அறிவு மயங்கினமையின், மாப்போலு மென மடலைக்கொண்டன ரென்றும் மதில்போலுமென வெண்தேரேறினரென்றுங் கூறினாள். மயக்க மிகுதலானே வரையும் பாய்வர்கொலாமென்று குறிப்பித்தாளுமாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தன்னுளாராய்தல்.
(பெரு - ரை) ஆங்கு என்பதனைப் பிரித்து வரித்த ஆங்கு எனக் கூட்டிக் கொள்க. "வெண்தேர் ஏறி" என்றது, தன் தகுதிக் கேற்ற தேரின்கண் ஏறாது பேய்த் தேர் தோன்றும் நண்பகல் வெயிலினூடே நின்று என்னும் கருத்துடைய தென்க. மதில் என மதித்து என்றது தனக்குரிய படைமுதலிய அரண் ஏதுமின்றித் தன்னைச் சூழ்ந்து தோன்றுகின்ற பேய்த் தேரையே அரணாகக்கொண்டு என்றவாறு. எனவே அவனை ஏற்றுக்கொள்ளா தொழியின் இனி அவன் வரைபாய்தலும் செய்வன் என்று குறிப்பாலுணர்த்தியபடியாம். இது முன்னிலைப் புறமொழி.
(342)