திணை : பாலை.

    துறை : இது, தலைமகள் பிரிவிடையாற்றாளாய்ச் சொல்லியது.

    (து - ம்) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரிந்தான் குறித்த பருவத்து வாராமையால்்காலந்தோறும் காமம் மேலிடுதல் கண்டு வருந்துந் தலைவி தோழியை நெருங்கி நம்மை வருத்துகின்ற இம் மாலையம் பொழுது காதலர் சென்ற நாட்டிலே செல்லுவதில்லையோவென நொந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலை" (தொல். கற். 6) என்னும் விதி கொள்க.

    
முல்லை தாய கல்லதர்ச் சிறுநெறி 
    
அடையாது இருந்த அங்குடிச் சீறூர்த் 
    
தாதெரு மறுகின் ஆபுறந் தீண்டும் 
    
நெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து 
5
உகுபலி அருந்திய தொகுவிரற் காக்கை 
    
புன்கண் அந்திக் கிளைவயிற் செறியப் 
    
படையொடு வந்த பையுள் மாலை 
    
இல்லைகொல் வாழி தோழி நம்துறந்து 
    
அரும்பொருள் கூட்டம் வேண்டிப் 
10
பிரிந்துறை காதலர் சென்ற நாட்டே. 

    (சொ - ள்) தோழி வாழி - தோழீ! வாழ்வாயாக!; முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி அடையாது - முல்லைக் கொடி படர்ந்த மலைவழி ஆகிய சிறிய நெறியைச் சாராது; அம்குடி இருந்தச் சீறூர்த் தாது எரு மறுகின் - அழகிய குடிகள் அமைந்த சிறிய ஊரின்கண்ணே; மலரின் தாதுக்களே எருவாக உதிர்ந்துடைய தெருவின்கண்; ஆ புறம் தீண்டும் நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து - செல்லுகின்ற ஆனிரையின் முதுகிலே தீண்டுகின்ற நெடிய வீழிடப்பட்ட கடவுள் உறையும் ஆலமரத்திலிருந்து; உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை - அங்குக் கடவுளுக்குப் படைத்துப் போகட்ட பலிச் சோற்றைத் தின்ற தொக்க விரல்களையுடைய காக்கைகள் எல்லாம்; புன்கண் அந்திக் கிளைவயின் செறிய - துன்பத்தைத் தருகின்ற மாலையம் பொழுதிலே தம்தம் சுற்ற மிருக்குமிடத்தை அடையாநிற்ப; படையொடு வந்த பையுள் மாலை - பிரிந்தாரை யொறுக்கும் படையுடனே வந்த நோயைச் செய்யும் இம் மாலையானது; நம் துறந்து அரும் பொருள் கூட்டம் வேண்டி - நம்மைத் துறந்துபோய் ஈட்டுதற்கரிய பொருள் தேடுதலை விரும்பி; பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டு இல்லை கொல் - பிரிந்துறையும் நம் காதலர் சென்ற நாட்டின்கண்ணே செல்லுவதில்லையோ? சென்று வருத்தினால் அவர் இன்னே வந்திருப்பரே; எ - று.

    (வி - ம்) இறைச்சி :- (1) ஆலத்தின் கீழிடப்படும் பலியைத் தின்ற காக்கை சுற்றத்திடத்தே சென்று தங்குமென்றது, என் நலனெல்லாம் உண்ட பசலை நெற்றியிலே தங்கா நின்றதென்பதாம்.

     இறைச்சி :- (2) ஆலம்வீழ் ஆவின்புறத்தே வருடுமென்றது, நீ அருகிலிருந்து ஆற்றித் தைவரலால் இதுகாறும் யானுளேன் என்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

(343)