திணை : குறிஞ்சி.

     துறை : இது, தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது.

     (து - ம்) என்பது, களவின்வழிவந் தொழுகுந் தலைமகன் கரந்து ஒருபுறம் வந்துறைவதனை யறிந்த தோழி அவன் கேட்டுவிரைய வரைவொடு புகுமாறு தலைவியை நெருங்கி அன்னை தலைவியை இல்வயிற் செறித்து வெறியெடுக்கத் துணிந்தனளென உள்ளுறையா லுரைத்து அவன்பால் தாம் அன்புடையராய் அவன் இன்றியமையா திருத்தலை மீட்டும் நாம் தினைப்புனங் காவலைக் கருதினமாயின் அவன் அதனையறியாது தன்னூர் சென்று விடுவனோவென வெளிப்படக் கூறி வரைவுகடாவாநிற்பது.

     (இ - ம்) இதனை, "களனும் பொழுதும் . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனால் கொள்க.

 
    
அணிவரை மருங்கின் ஐதுவளர்ந் திட்ட 
    
மணியேர் தோட்ட மையார் ஏனல் 
    
இரும்பிடித் தடக்கையின் தடைஇய பெரும்புனம் 
    
காவல் கண்ணினம் ஆயின் ஆயிழை 
5
நம்நிலை இடைதெரிந்து உணரான் தன்மலை 
    
ஆரம் நீவிய அணிகிளர் ஆகம் 
    
சாரல் நீளிடைச் சாலவண்டு ஆர்ப்பச் 
    
செல்வன் செல்லுங்கொல் தானே உயர்வரைப் 
    
பெருங்கல் விடரகஞ் சிலம்ப இரும்புலி
10
களிறுதொலைத்து உரறுங் கடிஇடி மழைசெத்துச்
    
செந்தினை உணங்கல் தொகுக்கும் 
    
இன்கல் யாணர்த்தம் உறைவின் ஊர்க்கே. 

     (சொ - ள்) ஆய் இழை - ஆராய்ந்து அணிந்த இழையினையுடையாய்!; அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் - அழகிய மலைப்பக்கத்தில் வியப்புடையதாய் வளர்ந்த நீலமணி போன்ற தோட்டினையுடைய நிரம்பிய கருமையான தினைக்கதிர் எல்லாம்; இரும் பிடித் தடக்கையின் தடைஇய பெரும்புனம் - பெரிய பிடியானையின் நெடிய கைபோல வளைந்துடைய பெரிய கொல்லையை; காவல் கண்ணினம் ஆயின் - நாம் நாளை முதலாகக் காவல் செய்யக் கருதினேமாயின்; செல்வன் நம் நிலை இடை தெரிந்து உணரான் - நம் காதலன் நம்முடைய நிலைமையை இடையிலே தெரிந்தறியானாய்; தன் மலை ஆரம் நீவிய அணிகிளர் ஆகம் வண்டு சால ஆர்ப்ப - தன் மலையிலுள்ள சந்தனத்தைப் பூசிய அழகு விளங்கிய மார்பில் வண்டுகள் மொய்த்துப் பெரிதும் ஆரவாரிப்ப; உயர் வரைப் பெருங் கல்விடர் அகம் சிலம்ப - உயர்ந்த மூங்கிலையுடைய பெரிய மலையகத்துள்ள பிளப்பிடமெல்லாம் எதிரொலி எடுக்கும்படியாக; இரும்புலி களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து - கரிய புலி களிற்றியானையைத் தொலைத்து முழங்கும் பெரிய பூசலைக் கேட்டு இது முகிலின் இடிமுழக்கமாமென்று எண்ணி; செந்தினை உணங்கல் தொகுக்கும் - சிவந்த தினை புலருமாறு போகடப் பட்டவற்றைக் கூட்டிக் குவிக்கின்ற; இன் கல் யாணர் தான் - இனிய மலையிலுள்ள புது வருவாயினையுடைய தான்; சாரல் நீள் இடைத் தம் உறைவின் ஊர்க்குச் செல்லும் கொல் - சாரலின் நெடிய வழியிலே தமரோடு உறையும் தன் ஊர்க்குச் செல்லுவான் கொல்லோ? எ - று.

     (வி - ம்)தடைஇய - வளைந்த, காவல் கண்ணினம் ஆயினென்றது அவன்பால் அன்புடைமையையும் அவன் இன்றியமையாமையையுங் குறித்து நின்றது.

     உள்ளுறை :-யானையைப் புலி அடித்து முழங்கிய முழக்கத்தை மேகமுழக்கமெனத் திரியவுணர்ந்து புலர்த்திய தினையைக் குவிக்குமென்றது, தலைவனை ஊரார் வரவொட்டாதபடி அலரெடுத்ததை அன்னை கட்டினாலுங் கழங்கினாலுந் திரியவுணர்ந்து தினைகாத்திருந்த தலைவியைக் காவலொருவி இல்வயி னெடுத்த வெறிக்களத்துக் கொண்டுபோகா நிற்குமென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.

     (பெரு - ரை) ஐது - வியப்புடையது. கண்ணினம் - கருதினேம். சால - மிகுதியாக, செல்வன் சாரல் நீளிடைத் தன்னூர்க்குச் செல்லுங் கொல் என இயைக்க. தினையாகிய உணங்கல் என்க.

(344)