(து - ம்.) என்பது, பொருள்வயிற் பிரிந்து இடைச்சுரத்துற்ற தலைமகன் தலைமகளை நினைந்து, காதல் மிகுதலாலே, அது தணியானாய் நெஞ்சமே! நம் காதலியின் தோள்களை இப்பொழுது இங்கு நினைந்து மகிழ்கின்றனை போலும்; அவை இங்கு அடைதலரிய அல்லவோ வென்று இகழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்) இதற்கு, “மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்” (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.
| குணகடல் முகந்து குடக்கேர்பு இருளித் |
| தண்கார் தலைஇய நிலந்தணி காலை |
| அரசுபகை நுவலும் அருமுனை இயவின் |
| அழிந்த வேலி அம்குடிச் சீறூர் |
5 | ஆளில் மன்றத்து அல்குவளி ஆட்டத் |
| தாள்வலி யாகிய வன்கண் இருக்கை |
| இன்றுநக் கனைமன் போலா என்றும் |
| நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் |
| பெருந்தண் கொல்லிச் சிறுபசுங் குளவிக் |
10 | கடிபதங் கமழுங் கூந்தல் |
| மடமா அரிவை தடமென் தோளே. |
(சொ - ள்) குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளித்தண் கார் தலைஇய நிலம் தணி காலை - நெஞ்சமே! கீழைக்கடலிலே சென்று நீரை முகந்து மேலைத்திசைக்கண் எழுந்து சென்று இருண்டு தண்ணிதாகிய மேகம் மழைபெய்து விடப்பட்ட நிலத்தின் வெப்பந் தணிந்த காலத்து; அரசு பகை நுவலும் அரு முனை இயவின் - அரசரது பகையால் அழிந்ததென்று சொல்லப்படும் அரிய ஊர்முனையடுத்த நெறியில்; வேலி அம் குடி அழிந்த சீறூர் - வேலியையுடைய அழகிய குடிகள் அழிந்த சிறிய ஊரின்கண்ணுள்ள; ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்டத்தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை - மக்கள் இல்லாதொழிந்த பொது அம்பலத்தில் நெருங்கிய காற்று வீச முயற்சிகருதி யுறைகின்ற வீரத் தன்மையுடைய இருக்கையின் கண்ணே; இன்று என்றும் நிறை உறு மதியின் இலங்கும் பொறையன் - இப்பொழுது எக் காலத்தும் நிறைவுற்ற திங்கள் போல விளங்குகின்ற பொறையனது; பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக் கடி பதம் கமழும் கூந்தல் - பெரிய தண்ணிய கொல்லி மலையிடத்துள்ள சிறிய பசிய மலைப்பச்சை சூடுதலால் அதன் மணஞ் செவ்விதிற் கமழ்கின்ற கூந்தலையுடைய; மட மா அரிவை தட மெல் தோள் நக்கனைபோல் ஆ - இளைய அழகிய மடந்தையினுடைய வளைந்த மெல்லிய தோள்களை நீ கருதிமகிழா நின்றனை போலும்; அத் தோள்கள் இங்கு நீ எய்துதற்கரிய அல்லவோ?எ - று.
(வி - ம்) வெப்பம் : அவாய்நிலை. அழிந்தகுடி யெனவும், இலங்கும் அரிவையெனவுங் கூட்டுக. மன் : கழிவு. நக்கனைபோல் ஆகாவெனக் கொள்க. இன்று நக்கனையென்றது, நீ புறம்போதருமுன்னே கருதியுளையேல் ஆண்டே தங்கிவிடலாமன்றோ? அங்ஙனமின்றி இன்று கருதி மகிழ்ந்ததில் யாது பயனென் றிகழ்ந்தானென்பது. மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - இடைச்சுரத்தழுங்கல்.
(346)