திணை : குறிஞ்சி.

     துறை : இது, வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுக்க மறுத்தது.

     (து - ம்) என்பது, மணஞ்செய்து கொள்ளாது நெடுங்காலம் தலைமகன் களவின்வழி வந்தொழுகுதலினாலே, அது பொறாது வருந்திய தலைமகளை நீ வருந்தாது பொறையோடிருவென்று தோழி வலியுறுத்திக் கூறலும், அது கேட்ட தலைவி என்னுடம்பின் கண்ணதாகிய நலமானது தலைவன்பாலேகி மீண்டுவந்த பரிசிலர் கூறுஞ் சிறந்த மொழிகளைக் கண்டு கேட்டு மகிழுமளவும் என்னை உயிரோடு விடுமோவென அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதனை, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" என்பதன்கண் "தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்" (தொல். கள. 21) என்னும் தந்திரவுத்தியினால் அமைத்துக் கொள்க.

    
முழங்குகடல் முகந்த கமஞ்சூல் மாமழை 
    
மாதிரம் நனந்தலை புதையப் பாஅய் 
    
ஓங்குவரை மிளிர வாட்டிப் பாம்பெறிபு 
    
வான்புகு தலைய குன்றம் முற்றி 
5
அழிதுளி தலைஇய பொழுதின் புலையன்
    
பேழ்வாய்த் தண்ணுமை இடந்தொட்டு அன்ன 
    
அருவி இழிதரும் பெருவரை நாடன் 
    
இன்ன நிலையன் பேரன் பினன்எனப் 
    
பன்மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி 
10
வேனில் தேரையின் அளிய 
    
காண விடுமோ தோழியென் நலனே. 

     (சொ - ள்) தோழி வேனில் தேரையின் என் நலன் - தோழீ! வேனிற் காலத்து நுணலை மணலுள் முழுகி மறைந்து கிடப்பதுபோல என் உடம்பினுள்ளே பொதிந்து கரந்துறையும் என் நலனானது என்னை ஒறுத்துக் கொன்றொழிவதல்லது; முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை - முழங்குகின்ற கடலில் விழுந்து நீர் பருகியதனாலாகிய நிறைந்த சூலையுடைய கரிய மேகம்; மாதிரம் நனந்தலை புதையப் பாஅய் - திசைகளின் அகன்ற இடமெல்லாம் மறையும்படி பரவி; ஓங்கு வரைமிளிர ஆட்டிப் பாம்பு எறிபு - உயர்ந்த கொடுமுடிகள் புரண்டு விழுமாறு செய்து முழங்கிய இடியினாலே பாம்புகளை மோதி; வான் புகுதலைய குன்றம் முற்றி - விசும்பிலுயர்ந்த முடியையுடைய குன்றுகளை ஒருங்கே சூழ்ந்து; அழி துளி தலைஇய பொழுதில் - சிதைந்த மழையின் துளிகளை யாண்டும் பெய்தொழிந்த பொழுது; புலையன் பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டு அன்ன அருவி இழிதரும் பெரு வரை நாடன் - புலையனது அகன்ற வாயையுடைய தண்ணுமையின் கண்ணில் மோதுதலானெழுகின்ற ஒலிபோன்ற ஓசையுடனே அருவி நீர் கீழிறங்கி யோடும் பெரிய மலை நாடனாவான்; இன்ன நிலையன் பேர் அன்பினன் என - இன்னதொரு நிலைமையுடையன் பெரிய அன்புடையவன் என்று; பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி - பலவாய அவனுடைய மாண்புகளெல்லாங் கூறும் பரிசிலருடைய நெடிய சிறந்த மொழிகளை; யான் காண விடுமோ - யான் காணவும் கேட்கவும் அங்ஙனம் கண்டு கேட்டுக் களிக்குமளவும் என்னை உயிரோடு விடுமோ?; அளிய - அவை இரங்கத்தக்கன; எ - று.

     (வி - ம்) மிளிர்தல் - புரளுதல். நெடுமொழி - மீக்கூற்று. நலன் -நிறத்துக்குப் பெயராகவுங் கொள்ளப்படுதலின் இங்கு வேறு நிறமுற்ற பசலையெனவுமாம். இது, பசலைபாய்தல்.

     இறைச்சி :- மலையிலே மழைபெய்தவுடன் தண்ணுமை அடிக்கின்ற ஒலிபோல அருவி இழியுமென்றது, தலைமகன் வந்துபோனவுடன் பறை அறைந்ததுபோல எங்கும் அலரெழாநின்றது என்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை) கமம் - நிறைவு. மாதிரம் - திசை. அழிதுளி - மிக்க துளியுமாம். இடக்கண்ணில் புடைத்தலாலே எழும் ஒலிபோன்று என்க.

(347)