திணை : நெய்தல்.

     துறை : இது, தலைமகன் தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.

     (து - ம்) என்பது, களவொழுக்கத்துப் பாங்கி மதியுடன்பாட்டின்கண் முன்னுறன் முதலாகிய மூவகையானும் தோழி மதியுடன்படுக்கின்றாள்; இவன் ஒரு குறையுடையான்போலும். அக் குறையும் இவள்கண்ணதேயென ஆராயுங்காலை அதுகாறும் பொறானாய் அவள் அறிந்து தன் குறையை விரைவிலே முடிக்குமாறு யாம் கொய்தும் தூக்கியும் குற்றும் நாள்தோறும் இவ்வண்ணம் குற்றேவன்மாக்கள் போலா யிருப்பவும் பின்நிற்றலை வெறாத நம்பால் பரதவர்மகள் எவ்வாறு கருதியிருக்குமோ என்று நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதனை, "ஊரும் பெயரும் . . . . தோழியைக் குறையுறும் பகுதியும்" (தொல். கள. 11) என்பதனால் அமைத்துக் கொள்க.

    
கடுந்தேர் ஏறியுங் காலின் சென்றும் 
    
கொடுங்கழி மருங்கின் அடும்புமலர் கொய்தும் 
    
கைதை தூக்கியும் நெய்தல் குற்றும் 
    
புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு 
5
வைகலும் இனையம் ஆகவுஞ் செய்தார்ப் 
    
பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை 
    
ஒளிறுவேல் அழுவத்துக் களிறுபடப் பொருத  
    
பெரும்புண் உறுநர்க்குப் பேஎய் போலப் 
    
பின்நிலை முனியா நம்வயின் 
10
என்னென நினையுங்கொல் பரதவர் மகளே. 

     (சொ - ள்) கடுந் தேர் ஏறியும் காலின் சென்றும் - விரைந்த செலவினையுடைய தேரிலேறிச் சென்றும் பின்பு காலால் நடந்து சென்றும் இவளுக்கு ஏவல் செய்து ஒழுகுபவனாகி; கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும் - வளைந்த கழியருகினுள்ள அடும்பின் மலரைப் பறித்தும்; கைதை தூக்கியும் - தாழம் பூவைப் பறிக்குமாறு இவளைத் தூக்கிநின்றும்; நெய்தல் குற்றும் - தழையுடை புனையவேண்டி நெய்தலந்தளிரையும், சூட அதன் மலரையுங் கொய்து கொடுத்தும்; புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு வைகலும் இனையம் ஆகவும் - நாம் காதலியை முயங்கினாம் போலக் கருதிய உள்ளத்துடனே நாள்தோறும் இத்தன்மையேமாய் இராநிற்கவும்; செய் தார்ப் பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை - புனைந்த மாலையணிந்த பசிய பூணையுடைய அரசர்கள் போரிலே மடிந்த பாசறையின் கண்ணே; ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத பெரும்புண் உறுநர்க்கு - விளங்குகின்ற படைக்கடலிலே களிற்று யானை படுமாறு போர் செய்தலானாகிய பெரிய புண்ணுற்றுக் கிடந்தாரை; பேஎய் போல - வேறு காப்போர் இன்மையால் அவருடைய உயிர் போமளவும் ஓரியும் பாறும் நரியும் கடித்து அவர் தசையைக் கொள்ளுமேயென்று இரக்கமுற்றுப் பேய் தானே காத்து நின்றாற்போல; பின் நிலை முனியா நம்வயின் - இத்தோழியின் பின்னின்று இவள் ஆராயுமளவும் வெறுப்படையாது திரிகின்ற நம்மிடத்து; பரதவர் மகள் என் என நினையும் - நம்காதலியாகிய பரதவர் மகள் எவ்வண்ணம் மாறுபாடாகக் கருதி யிருக்கின்றனளோ?; எ - று.

     (வி - ம்) புண்பட்டாரைக் காப்போரின்மையின் அவருயிர் போமளவும் பேய் அருகிருந்து காப்பதுபோல இவள் ஆராய்ந்து கூறுங்காறும் பின்னே திரிந்து காத்து நின்றேனென்க. இது பேய்க்காஞ்சித் துறை. "ஏமச் சுற்ற மின்றிப் புண்ணோன், பேஎய் ஓம்பிய பேஎய்ப்பக்கமும்" (தொல். பொ. சூ. 79) என்பதனானறிக.

     தன் செல்வமிகுதி அறிவுறுத்துவான் தேரிலேறிப் போந்தமை கூறினான். தான் வந்தது ஆங்குப் புறத்தார்க்குப் புலனாகாதென்பதை அறிவுறுத்துவான் காலினால் நடந்து போந்தமையாற் கூறினான். தனது தேரை நிலவுமணற் கான்யாற்றின் நிற்கப்பணித்து வந்தனனென்றவாறு. மலர்கொய்தன் முதலாயினவற்றால் தன் பெருமைக்கு ஏலாச் சிறுதொழிலாகிய தன் பணிவுடைமை கூறினான். தலைவி தன்நிமித்தம் இவள்பால் எம்பெருமான் இனி வந்தொழுகுவன் போலுமென்று கருதுவள் கொலென்பான் என் என நினையுங்கொல் என்றான். மெய்ப்பாடு - தன்கண் தோன்றிய பிணிபற்றிய இளிவரல். பயன் - தோழி கேட்டுக் குறைமுடிப்பாளாவது.

     (பெரு - ரை) பெரும்புண்ணுறுநர் உயிர்போகாமையின் பேஎய் அணுக அஞ்சியும் அகல மனமின்றியும் நிற்றல்போல எனினுமாம். செய்தார் : வினைத்தொகை.

(349)