திணை : நெய்தல்.

    துறை : இது, மணமனைப் பிற்றைஞான்று புக்க தோழி நன்காற்றுவித்தாயென்ற தலைமகற்குச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, வரைந்தபின் மணமனைபுக்க தோழியைப் பிரிவுக்காலத்து நன்காற்றுவித்தாயென்ற தலைமகற்குத் தலைவி பொருட்டு யாய்க்கஞ்சி யொழுகினேனை நீ விரைய வந்து காத்ததன்றியான் ஆற்றுவித்தது முளதோவெனக் கூறுவாள் சிறிது கைநெகிழிற்பண்டும் இத்தன்மையளே யெனப் பிரிவால் தலைவி வருந்துந் தன்மையுஞ் சேரக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்குக் "கற்புங் காமமும். . . . .கிழவோற்குரைத்தல் அகம்புகன் மரபின் வாயில்கட் குரிய" (தொல்-கற்- 11) என்னும் விதி கொள்க,

    
பொங்குதிரை பொருத வார்மண லடைகரைப்  
    
புன்கால் நாவற் பொதிப்புற இருங்கனி  
    
கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப்  
    
பல்கா லலவன் கொண்டகோட் கூர்ந்து 
5
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் 
    
இரைதேர் நாரை யெய்தி விடுக்குந் 
    
துறைகெழு மாந்தை யன்ன இவள்நலம் 
    
பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய 
    
உழையிற் போகா தளிப்பினுஞ் சிறிய 
10
ஞெகிழ்ந்த கவினலங் கொல்லோ மகிழ்ந்தோர் 
    
கட்கழி செருக்கத் தன்ன  
    
காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே. 

    (சொ - ள்.) பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரைப் புன் கால் நாவல் பொதிப்புற இருங்கனி - பொங்கி எழுகின்ற அலைமோதிய நேரிதாகிய மணல் அடுத்த கடற்கரையின் கண்ணே உதிர்ந்த புல்லிய காம்பையுடைய நாவலின் களி பொருந்திய புறத்தினையுடைய கரிய கனியை; கிளை செத்து மொய்த்த தும்பி - தம்மினமென்று கருதி மொய்த்த வண்டுகள்; பழம் செத்துப் பல் கால் அலவன் கொண்ட கோள் கொள்ளா நரம்பின் கூர்ந்து இமிரும் பூசல் - அதனைக் கனியென வோர்ந்து பலவாகிய கால்களையுடைய ஞெண்டு கைக்கொண்ட கோட்பாட்டினால் அஞ்ஞெண்டை விலக்கித் தாம் வலிந்து கொள்ளப்படாதனவாய் யாழோசைபோல மிக்கு ஒலிக்கும் பெரும் பூசலை; இரைதேர் நாரை எய்திய விடுக்கும் துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் - ஆண்டு இரையைத் தேடுகின்ற நாரை வரக்கண்ட ஞெண்டு கைவிட்டகலா நிற்கும் கடற்றுறை விளங்கிய மாந்தை போன்ற இவளுடைய நலமானது; பண்டும் இற்றே கண்டிசின் - பண்டும் இத்தன்மையதேயாகும் நீ காண்பாயாக !; உழையின் போகாது அளிப்பினும் - இவள்பானின்றும் களவுக் காலத்து விலகாமலிருந்து தலையளி செய்தாலும்; இவள் கண் பசந்தது சிறிய ஞெகிழ்ந்த கவின் நலம் கொல்லோ - இவள் பசப்புற்றதன் காரணம் சிறிதளவு முயக்கம் கை நெகிழ்ந்ததனாற் கெட்ட அழகின் மிகுதியோ?; மகிழ்ந்தோர் கள் கழி நெருக்கத்து அன்ன காமம் கொல் - கள்ளுண்டார்க்குக் கள் அறூஉங் காலத்துப் பிறந்த வேறுபாடு போன்ற காம வேறுபாடோ? அவ்விரண்டுமல்லவே; எ - று.

    (வி - ம்.)புன்கால் - மெல்லிய காம்பு. செத்து - கருதி. இசின் : முன்னிலையசை. தெய்ய : அசைநிலை யிடைச்சொல். அளிப்பினும் இவள் கண் பசந்தமை கவினலமோ? காமவேறுபாடோ? அவ்விரண்டுமல்ல. பிரிவினாலே பசந்தனகாணென இயைக்க.

    எனவே, இஃது ஓரமளிக்கண்ணே துயிலப்பெற்றும் வேதவிதி பற்றிக் கூட்டம் நிகழாமையாற் பிறந்த வேறுபாடன்றோ? இதனை நீயே முயங்கி ஆற்றுவிக்குமாறன்றி, யான் ஆற்றுவிக்குமாறென்னை யென்றாளென்பதாம். வேதவிதி - கரணத்தினமைந்து முடிந்தகாலை முதல் மூன்றுநாளும் முறையே தண்கதிர்ச் செல்வற்கும், கந்தருவற்கும், அங்கியங்கடவுட்கும் அளித்து நான்காநாள் அங்கியங்கடவுள் தலைமகனுக்களிப்ப அவன் துய்ப்பானாக வென்பது.

    உள்ளுறை :- கனி தலைவியாகவும், தும்பி தோழியாகவும், அலவன் தன்மேலே தவறிழைக்குந் தமராகவும், இரைதேர் நாரை தலைவனாகவுங் கொண்டு கனியைத் தும்பி மொய்த்தலும் அலவன் கைப்பற்றி்க் கொள்ள நாரை வரக்கண்டு விட்டது போலத் தலைவியைத் தோழி சார்ந்திருப்பவும், தமர் முதலாயினார் இற்செறிப்பத் தலைவன் வரலும் அவர் மகட் கொடை நேர்ந்து இற்செறிப்பொழித்தா ரென்றதாம். மெய்ப்பாடு - உவகையைக் சார்ந்த பெருமிதம். பயன் - பிரியற்கவெனக் கூறுதல்.

    (பெரு - ரை.) இனி, இந்தச் செய்யுளை ஆசிரியர் இளம்பூரண அடிகளார், தலைவன் இற்கிழமையைத் தலைவிமாட்டு வைத்தவிடத்து அவளை மறந்தொழுகினானாக அவளைத் திருத்துதற் பொருட்டுத் தோழி கூறிய கூற்றாகக்கொண்டு "சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும்" (தொல்-கற்- 9) என்னும் துறைக்கு எடுத்துக்காட்டினர்.

    இனி கொண்டகோட் கூர்ந்து என்பதற்குக் கொண்ட கோட்கு அசாந்து என்றும் பாடம் உளது. இதற்கு கொண்டகோட்பாட்டிற்குத் தளர்ந்து எனப் பொருள் கூறுக. அசாத்தல் - தளர்தல். "அருமை யுடைத்தென்று அசாவாமை வேண்டும்" 961 என்னும் திருக்குறளின் கண் இச் சொல்லின் எதிர்மறைச் சொல்லையும் காண்க.

(35)