திணை : குறிஞ்சி.

     துறை : இது, தோழி அருகடுத்தது.

     (து - ம்) என்பது, களவின் வழி வந்தொழுகுந் தலைமகன் இடையீடு முதலாய காரணங்களாலே சிலபொழுது வாராதொழிதலும், தலைமகளின்மேனி மெலிந்து வாடியதறிந்த அன்னை அது முருகணங்குபோலுமென்று வேறாக உணர்ந்து வெறி அயருமாறு தொடங்கினாளாக, அது கண்ட தோழி அருகு சென்று அன்னையை, நீ வெறியயர்ந்து வருந்தாதே கொள; என் தோழியை இன்னு மொருகால் நமது புனங்காவ லோம்புமாறு செல்ல மொழிவையேல், அவள் இழந்த நலனை யெய்துவள் காணென ஆய்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதற்கு,

  
"ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப் 
  
 பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்" (தொல். கள. 23) 

என்னும் விதிகொள்க.

    
இளமை தீர்ந்தனள் இவளென வளமனை 
    
அருங்கடிப் படுத்தனை யாயினுஞ் சிறந்திவள் 
    
பசந்தனள் என்பது உணராய் பல்நாள் 
    
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி 
5
வருந்தல் வாழிவேண்டு அன்னை கருந்தாள் 
    
வேங்கைஅம் குவட்டிடைச் சாந்தி் செய்த 
    
களிற்றுத்துப்பு அஞ்சாப் புலியதள் இதணத்துச் 
    
சிறுதினை வியன்புனங் காப்பின் 
    
பெறுகுவள் மன்னோஎன் தோழிதன் நலனே. 

     (சொ - ள்) அன்னை வாழி வேண்டு - அன்னாய்! வாழ்வாயாக! யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக!; இவள் இளமை தீர்ந்தனள் என - இவள் பெதும்பைப் பருவம் நீங்கப் பெற்றவளென்று; வள மனை அருங்கடிப் படுத்தனை ஆயினும் - வளம் பொருந்திய மாளிகையிலே பெயர்ந்து போதற்கரிய காவலுட்படுத்தினையாயினும்; சிறந்த இவள் பசந்தனள் என்பது உணராய் - சிறந்த இவள் பசப்படைந்தனள் என்பதனை உணர்ந்தனை யல்லையாய்; பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் - பல நாளும் துன்பம் பொருந்திய நெஞ்சத்துடனே முருகவேளை விரும்பி இல்லகத் தழைத்து வெறிக்களந் திருத்தி வெறியெடுத்து வருந்தாதே கொள்; கருந்தாள் வேங்கை அம்குவட்டிடை - கரிய அடியையுடைய வேங்கை மரங்கள் நிரம்பிய சிறிய குன்றினிடத்திலே; சாந்தின் செய்த களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்து - சந்தனமரத்தாற் செய்த களிற்றியானையின் வலிமைக்கு அஞ்சாத புலித் தோலால் வேய்ந்த கட்டுப் பரணிடத்திலே தங்கியிருந்து; சிறுதினை வியன் புனங்காப்பின் - சிறிய தினைகளையுடைய அகன்ற புனத்தை மறுபடியுஞ் சென்று பாதுகாத்திருப்பாளாயின்; என் தோழி தன் நலன் பெறுகுவள் மன்னே - என் தோழி தன் அழகை மீண்டும் பெறாநிற்பள், அது வீணே கழிகின்றது!; எ - று.

     (வி - ம்) புலித்தோலால் வேய்ந்த இதணாதலின், யானை கறுவு கொண்டு மோதினும் சிதைவுபடாத பரணென்பது; அனைய பரணிலிருப்பேமாதலின் யாங்களும் இவ் வேலன் எடுக்கும் வெறியாட்டினுக்கு அஞ்சேமென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வெறிவிலக்கல்.

     (பெரு - ரை) சாந்திற் செய்த இதணம், புலியதள் இதணம் எனத் தனித்தனி கூட்டுக. இளமை - பேதைப்பருவம் என்க. 'வேங்கையங் கவட்டிடை' என்றும் பாடம். தினையையுடைய அகன்ற புனம் என்க.

(351)