(து - ம்) என்பது, அங்ஙனம் சுரநெறி செல்கின்ற தலைமகன் தன் காதலியை நினைத்துக் கண்களை மூடியிருந்து விழித்தலும், தலைவியின் உருவம் தோன்றலால் வியந்து, இஃதென்னை நாம் செல்லவும் அரிய இந்நெறியில் இவ்விள மடந்தை எவ்வாறு வந்தனள் கொல்லோ; இவள் இரங்கத்தக்காளாயினாளே என்று மருண்டு கூறாநிற்பது.
(இ - ம்) இதனை, "மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்" (தொல் கற். 5) என்பதனாற் கொள்க.
| இலைமாண் பகழிச் சிலைமாண் இரீஇயபணீஇயர் |
| அன்பில் ஆடவர் அலைத்தலின் பலருடன்பணீஇயர் |
| வம்பலர் தொலைந்த அருஞ்சுரக் கவலைபணீஇயர் |
| அழல்போல் செவிய சேவல் ஆட்டிபணீஇயர் |
5 | நிழலொடு கதிக்கும் நிண்புரி முதுநரிபணீஇயர் |
| பச்சூன் கொள்ளை மாந்திவெய்து உற்றுத்பணீஇயர் |
| தேர்திகழ் வறும்புலந் துழைஇ நீர்நயந்துபணீஇயர் |
| பதுக்கை நீழல் ஒதுக்கிடம் பெறாஅபணீஇயர் |
| அஞ்சுவரு கவலை வருதலின் வருந்திய |
10 | நமக்கும் அரிய வாயின அமைத்தோள் |
| மாண்புடைக் குறுமகள் நீங்கி |
| யாங்குவந் தனள்கொல் அளியள் தானே. |
(சொ - ள்) இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய அன்பு இல் ஆடவர் - இலைவடிவாகிய மாட்சிமைப்பட்ட அம்பை வில்லிலே மாண்புபட இருத்திய உயிர்களிடத்து அன்பில்லாத மறவர்; அலைத்தலின் - கொன்று அலைத்தலாலே; வம்பலர் தொலைந்த அருஞ்சுரக் கவலை - அயல் நாட்டினர் பலரும் அவ்விடத்தில் இறந்து கிடந்த செல்லுதற்கரிய சுரத்திலுள்ள கவர்த்த நெறியில் அங்ஙனம் கிடந்த பிணங்களை; அழல் போல் செவிய சேவல் ஆட்டி - அழல் போலுகின்ற சிவந்த செவியையுடைய கழுகின் சேவல் தின்னாவாறு அதனை வெருட்டி அலைத்து; நிழலொடு கதிக்கும் நிணம் புரி முதுநரி - தன் நிழலைப் பார்த்து மகிழ்ந்து விளையாடுகின்ற ஊனைத் தின்னுதலில் விருப்ப மிக்க முதிய நரி; பச்சூன் கொள்ளை மாந்தி வெய்து உற்று நீர் நயந்து தேர் திகழ் வறும் புலம் துழைஇ - பசிய தசையை நிரம்பத் தின்று வாய் வறந்து நீர் பருக விரும்பிப் பேய்த்தேர் விளங்குகின்ற நீரற்ற வறும் புலத்தை நீர் உள்ள இடமென்று சென்று அலைந்து; பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ அஞ்சுவரு கவலை - நீர் ஆங்குக் கிடைக்காமையாலே வருந்திக் கற்குவியலின் நிழலிலேதான் வெயிலுக்கு ஒதுங்கியிருக்கவும் இடம்பெறாது வருந்துகின்ற அஞ்சத்தக்க பலவாய வழி; வருதலின் வருந்திய நமக்கும் அரிய ஆயின - வருதலானே வருந்திய நமக்கும் கடத்தற்கு அரிய வாயின; அமைத் தோள் மாண்பு உடைக்குறுமகள் நீங்கி யாங்கு வந்தனள் - இத்தன்மையவாகிய வழியில் மூங்கில் போன்ற தோளையுடைய மாட்சிமைப்பட்ட இளமடந்தையாகிய நம் காதலி தானிருக்கும் மாளிகையினின்று நீங்கி எவ்வாறு வந்தனளோ?: அளியள் - இவள் இரங்கத் தக்காள் காண்; எ - று.
(வி - ம்) போல்செவி : வினைத்தொகை. ஆட்டுதல் - அலைத்தல். கதித்தல் - விளையாடுதல். கொள்ளை - மிகுதி.
இறைச்சி :- ஆறலைப்போர் கொன்றொழித்த பிணங்களைக் கழுகு தின்னாதபடி அலைத்தோப்பிக் கதிக்கின்ற நரி, தானே தின்று உண்ண நீர் பெறாது, ஒதுங்க நிழலின்றி வருந்துங் கானமென்றது, ஊழ்வினையினாலே தரப்பட்ட என் காதலியைப் பசலை தோன்றாதபடி மகிழ்ச்சியுற்ற யான் நுகர்ந்து ஈதல் முதலாயவற்றுக்கு உரிய பொருள்பெறாது எய்தும் இடனுந் தெரிதலின்றி வருந்தாநின்றேன் என்றதாம். மெய்ப்பாடு - மருட்கை. பயன் - இடைச்சுரத்தழுங்கல்.
(பெரு - ரை) குறுமகள் என்றது தன் மனக்கண்ணிற் றோன்றும் உருவெளியை. 'அருஞ்சுரக் கவலை' என்றும் பாடம்.
(352)