(து - ம்) என்பது, களவின் வழிவந் தொழுகுந் தலைமகன் இரவின்கண் வருதலையறிந்த தோழி நெருங்கி 'மலைநாடனே! இரவின் கண்ணே கொடிய நெறியில் வருதலால் நீ சால்புடையை அல்லை'யென வெகுண்டு கூறி உள்ளுறையால் மணஞ் செய்துகொள்ள வருவாயாகவெனவும், 'அங்ஙனம் வருவையேல் எமர் எதிர்கொண்டு மகட்கொடை நேர்வ' ரெனவுந் தெளியக் கூறாநிற்பது.
(இ - ம்) இதற்கு, "ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| ஆளில் பெண்டிர் தாளின் செய்த |
| நுணங்குநுண் பனுவல் போலக் கணங்கொள |
| ஆடுமழை தவழுங் கோடுயர் நெடுவரை |
| முடமுதிர் பலவின் குடமருள் பெரும்பழங் |
5 | கல்லுழு குறவர் காதல் மடமகள் |
| கருவிரன் மந்திக்கு வருவிருந்து அயரும் |
| வான்தோய் வெற்ப சான்றோய் அல்லைஎம் |
| காமங் கனிவது ஆயினும் யாமத்து |
| இரும்புலி தொலைத்த பெருங்கை யானை |
10 | வெஞ்சின உருமின் உரறும |
் | அஞ்சுவரு சிறுநெறி வருத லானே. |
(சொ - ள்) ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த நுணங்கு நுண் பனுவல் போல - தேட்டத்திற்குரிய காதலன் இல்லாத தாபதமகளிர் தாம் தேடி உண்ணுமாறு முயன்று நூற்கின்ற நுணங்கிய நுண்ணிய பஞ்சுபோல; கணம் கொள ஆடும் மழை தவழும் கோடு உயர் நெடு வரை - கூட்டமாகக் காற்றால் அலையப்படும் மேகந் தவழ்கின்ற கொடுமுடிகள் உயர்ந்த நெடிய மலையிடத்து; முடம் முதிர் பலவின் குடம் மருள் பெரும்பழம் - முடப்பட்டு முதிர்ந்த பலாமரத்திலுள்ள குடம் போன்ற பெரிய பழத்தின் சுளையை; கல் உழு குறவர் காதல் மடம் மகள் - மலைச்சாரலில் உழுதுண்டு வாழுங் குறவர் தாம் அன்போடு பெற்று வளர்த்து வருகின்ற இளமகள்; கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும் - கரிய விரலையுடைய மந்தியை வருவிருந்தாக ஏற்றுக்கொண்டு கொடுத்து ஓம்பாநிற்கும்; வான் தோய் வெற்ப - விசும்பில் நீண்ட மலைநாடனே!; எம் காமம் கனிவது ஆயினும் - எம்பால் நீ காமம் மிகுதியாகக் கொண்டிருப்பினும்; யாமத்து இரும்புலி தொலைத்த பெருங்கை யானை வெஞ்சின உருமின் உரறும் - இரவு நடுயாமத்துக் கரிய புலியைக் கொன்ற பெரிய கையையுடைய யானை கொடிய சினத்தையுடைய இடிபோல முழங்கா நிற்கும்; அஞ்சு வரு சிறு நெறி வருதலான் - யாவரும் அஞ்சுகின்ற சிறிய கொடிய வழியின் வருதலானே; சான்றோய் அல்லை - நீ சால்புடையையல்லை; ஆதலின் இங்ஙனம் நீ வருதலை நீக்கி வேறு தக்கதொன்றனைச் செய்வாயாக! எ - று.
(வி - ம்) ஆளில் பெண்டிர் - பொருள் தேடிவந்து பாதுகாக்குங் கணவனை இழந்த கைம்மை மகளிர். பனுவல் - பறித்த பஞ்சு. "பருத்திப் பெண்டின் பனுவ லன்ன' என்றார் (125) புறத்தினும், முடமுதிர்பலா - இளமகள் கீழ்நின்றபடியே பறித்தற்குரியது.
உள்ளுறை :-குறவர் மடமகள் பலவின் பழத்துச் சுளையை மந்தியை விருந்தாகக் கொண்டு ஓம்புமென்றது, நீ மணஞ் செய்துகொள்ள வரின் எஞ்சுற்றத்தார் நின்னை மணமகனாக ஏற்று மகட்கொடை நேர்வரென்றதாம்.
பசித்துவந்த மந்தியையும் ஓம்பு மலையுடையையா யிருந்தும் நின்னை அடைக்கலம்புக்க இவள் அஞ்சாவாறு வரைந்தா யல்லையே யென்றிரங்கியதென்பது.
இத்தகைய கொடிய நெஞ்சினையாகிய மலையின் கண்ணே மஞ்சும் தவழாநின்றதே! இஃதென்ன வியப்போ எனப் பொருளின் புறத்தே இறைச்சி தோன்றுவதும் அறிக. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை தாளில் - தமது முயற்சியாலே. வருவிருந்து: வினைத்தொகை. எம் காமம் - எம்முடைய காமம் எனினுமாம்.
(353)