(து - ம்) என்பது, மணமனையின் மற்றைநாள் செவிலியொடு புகுந்த தோழியை 'நீ நன்றாக இறைமகளை ஆற்றியிருந்தா'யென்று தலைமகன் புகழ்தலும் 'நீ கொண்ட கேண்மை எங்குங் கௌவையாகியது; அதனை நின் காதலியே பொறையொடு நீ வாராமையாலுண்டாகிய தனது காம நோயையும் ஆற்றியிருந்ததன்றி யான் ஆற்றுவிக்குமாறு கிடந்ததென்னை' யென்று தோழி மறுத்துக் கூறாநிற்பது மாகும்.
(இ - ம்) இதற்கு, "பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணும்" (தொல். கற். 9) என்னும் விதிகொள்க.
| தானது பொறுத்தல் யாவது கானல் |
| ஆடரை ஒழித்த நீடிரும் பெண்ணை |
| வீழ்கா வோலைச் சூழ்சிறை யாத்த |
| கானல் நண்ணிய வார்மணல் முன்றில் |
5 | எல்லி அன்ன இருள்நிறப் புன்னை |
| நல்லரை முழுமுதல் அவ்வயின் தொடுத்த |
| தூங்கல் அம்பித் தூவலஞ் சேர்ப்பின் |
| கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு |
| நெடுநெறி ஒழுகை நிரைசெலப் பார்ப்போர் |
10 | அளம்போகு ஆகுலங் கடுப்பக் |
| கௌவையா கின்றது ஐயநின் நட்பே. |
(சொ - ள்) ஐய கானல் ஆடு அரை ஒழித்த நீடு இரும்பெண்ணை வீழ் கா ஓலைச் சூழ் சிறை யாத்த - ஐயனே! கழிச்சோலையிடத்துக் காற்றாலசைகின்ற அடியில் உள்ளவற்றை வெட்டி ஒழித்தலானே நெடிய கரிய பனையினின்று விழுகின்ற காவிக் கொணர்ந்த ஓலையைச் சூழ்கின்ற வேலியில் மறைபடக்கட்டிய; கானல் நண்ணிய வார்மணல் முன்றில் - கடற்கரைச் சோலையையடுத்த வெளிய மணலையுடைய முன்றிலின்கண்ணே; எல்லி அன்ன இருள் நிறப் புன்னை நல் அரை முழுமுதல் அவ்வயின் தொடுத்த - இரவு போன்ற இருண்ட நிறத்தையுடைய புன்னையின் நல்ல பெரிய அடிமரத்திலே பிணித்துக்கிடத்தலானே; தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின் - தங்குதல் கொண்ட தோணியையுடைய நீர்த்துவலை தெறித்துவிழும் கடற்கரையிடத்தே; கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு நெடுநெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர் - கடுகிய வெயிலினாற் கொதிக்கின்ற கல்லாக விளைந்த உப்புக்களை ஏற்றி நீண்ட நெறியிலே செலுத்தும் பண்டிகள் நிரையாகச் செறிந்து செல்லுமாறு உரப்பி யோட்டுகின்ற உப்புவாணிகர்; அளம் போகு ஆகுலம் கடுப்ப - அளத்து வெளியிலே போகும் பேரொலிபோல; நின் நட்பு கௌவை ஆகின்றது - நின்னால் செய்யப்பட்ட கேண்மையானது பழிச்சொல்லுக்கிடமாயிராநின்றது; அது பொறுத்தல் யாவது - அங்ஙனம் பரந்த அலரால் இற்செறிக்கப்பட்ட யாங்கள் அவ் வில்வயிற் செறிப்பை எவ்வாறு பொறுப்பது? ஆய்ந்து கூறுவாயாக! எ - று.
(வி - ம்) ஒழுகை - பண்டி. பெண்ணை அரையொழித்த வீழ்காவோலை யென்பது, பனையின் அடியிலிருந்து வெட்டாது விடப்பட்டிருந்து அப்பொழுது வெட்டி வீழ்த்திய ஓலையென்க.
இறைச்சி :- ஓலை சூழ்சிறையாத்த கானலென்றது, எமரும் அன்னையும் எமது இல்லகத்தைக் காவலோம்பலாயினா ராதலின், நீ இரவுக்குறி வருவதற்கு இயலாதெனவும், புன்னை அடிமரத்திலே தோணி இயக்கமறப் பிணித்ததென்றது தலைமகள் புறத்துவந்து இயங்காவாறு இல்வயின் செறிக்கப்பட்டாளெனவுங் கூறியதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
இரண்டாந் துறைக்கு அங்குக்கூறிய குறிப்பை விரித்துரைத்துக்கொள்க. அதற்கு மெய்ப்பாடு - உவகை. பயன் - மகிழ்தல்.
(பெரு - ரை) அது - அக் கௌவையை எனினுமாம். காவோலைப் பெயர் - பனையின் அடிதொட்டு நுனிகாறும் அடர்ந்திருந்து அப் பனைக்குப் பாதுகாவலாக அமைதலின் அவ்வோலைகள் காவோலை எனப்பட்டன என்க. ஆகுலம் - ஆரவாரம்.
(354)