திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, தோழி அருகடுத்தது.

     (து - ம்) என்பது, களவின் வழிவந்தொழுகுந் தலைமகன் ஒரோவொருகால் அருகி வருதலை யறிந்த தோழி அவனது அருகில் நெருங்கி, 'என் தோழியை நீ விரும்பி முயங்கி இன்புறா யாயினும், என்பால் நீ கொண்ட அன்பின் மிகுதியினாலேனும் கைசோர விடாது அவளை அணைந்து தலையளி செய்வாயாக; நீயே களைகணன்றி அவள் பிறிதுடையளல்ல'ளென்பதுபடக் கூறாநிற்பது.

     (இ - ம்) இதனை, "ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் பாங்கு என்றதனாற் கொள்க.

     துறை : (2) தோழி தலைமகளது ஆற்றாமைகண்டு வரைவுகடாயதூஉமாம்.

     (து - ம்) என்பது, வெளிப்படை. (உரை இரண்டற்கு மொக்கும்.)

     (இ - ம்) இதனை, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனால் கொள்க.

    
புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை 
    
முலைவாய் உறுக்குங் கைபோல் காந்தள் 
    
குலைவாய் தோயுங் கொழுமடல் வாழை 
    
அம்மடற் பட்ட அருவித் தீநீர் 
5
செம்முக மந்தி ஆரும் நாட 
    
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் 
    
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் 
    
அஞ்சில் ஓதியென் தோழி தோள்துயில் 
    
நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அதுநீ 
10
என்கண் ஓடி அளிமதி 
    
நின்கண் அல்லது பிறிதியாதும் இலளே. 

     (சொ - ள்) புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை முலைவாய் உறுக்கும் கைபோல் - புதல்வனைப் பெற்ற நீலமலர் போன்ற கண்ணையுடைய மடந்தை தன் கொங்கையைக் கையாலே பிடித்துத் தன் புதல்வன் வாயில் வைப்ப அக் குழந்தை அதன்கணுள்ள பாலைப் பருகுவதுபோல; காந்தள் குலைவாய் தோயும் கொழுமடல் வாழை - காந்தளின் பூக்கொத்தொடு பொருந்திய கொழுவிய மடலையுடைய வாழைப்பூவின்; அம் மடல் பட்ட அருவித் தீ நீர் செம்முக மந்தி ஆரும் நாட - அந்த மடலுட்பட்ட அருவி போலப் பெருகிவரும் இனிய நீரைச் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கு பற்றிப் பருகா நிற்கும் மலைநாடனே!; நட்டோர் முந்தை இருந்து கொடுப்பின் - நட்புடையாளர் கண்ணோட்டமுடையார்க்கு எதிரே சென்றிருந்து 'இதனை நீயிர் உண்பீராக!' என்று நஞ்சைக் கலந்து கொடுத்தாலும்; நனி நாகரிகர் நஞ்சும் உண்பர் - நட்பின் மிக்க அக் கண்ணோட்டமுடையார் அது நஞ்செனக் கண்டு வைத்தும் கண் மறுக்கமாட்டாமையின் அதனையுண்டு பின்னும் அவரோடு மேவுவார்; அது நீ அம் சில் ஓதி என் தோழி தோள் துயில் நெஞ்சின் இன்புறாய் - நீ அத்தகைய நட்புடையனா யிருந்தும் அழகிய சிலவாய கூந்தலையுடைய என் தோழியின் தோளிலே துயிலுவதை நின் உள்ளத்து இன்பமாகக் கொண்டாயல்லை; ஆயினும் - அங்ஙனம் கொள்ளாயேயாயினும்; என் கண் ஓடி அளி - என்பால் உள்ள கண்ணோட்டத்தினாலாவது இவளுடைய தோளிலே துயிலுவதனை இன்பமாகக் கொண்டு தலையளி செய்வாயாக!; நின் கண் அல்லது பிறிது யாதும் இலள் - இவள்தான் நின்பால் அடைக்கலமாக உடையள் அல்லது வேறொரு களைகணும் உடையள் அல்லள்காண்; எ - று.

     (வி - ம்) நாகரிகர் - கண்ணோட்ட முடையவர். இக் கருத்து "பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க, நாகரிகம் வேண்டுபவர்" (குறள் - 580) என்பதன்கண் எடுத்தாண்டமை யறிக.

     வாழை மடலிலுள்ள இனிய நீரை மந்தி பருகும் நாடனாயிருந்தும் அதுபோல இவளது நலனை நுகர நீ விரும்பினாயல்லையே, இஃதென்னையென வேறுமொருபொருள் தோன்றி நின்றது. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - ஆற்றாதுரைத்து வரைவுகடாதல். இதன், 'முந்தையிருந்து . . . . . . நனிநாகரிகர்' என்னும் இரண்டடிகளும் பெருங்கதையில் வந்துள்ளன.

     (பெரு - ரை) வாழைப் பூவிற்கு மடந்தை முலையும் காந்தட்பூவிற்கு அவள் கையும் மந்திக்குப் புதல்வனும் தீநீர்க்குப் பாலும் உவமைகள். 'தோள் துயில் இன்புறாய்' என்றது, நீ இவளை வரைந்து கொண்டு நின்மனைக்கண் இவள் தோளின்கண் இடையூறின்றித் துயில்வதனை இன்பமாகக் கொள்கின்றிலை என்றவாறு.

(355)