திணை : குறிஞ்சி.

     துறை : இது, வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

     (து - ம்) என்பது, தலைமகன் அந்தணர், சான்றோர் முதலாயினாரொடு வரைவு வேண்டி வருதலும் தலைமகளின் தமர் உடன்படாமை கண்டு அவன் தனது நெஞ்சை நெருங்கி, 'என் நெஞ்சமே! இதுகாறும் நீ வருந்தியதனை யான் அறிவேன் காண்; இங்ஙனம் வருந்தியதன் பயனாகவேனும் நம் காதலி நம் அருகிலே வைகுமாறு கிடைப்பளோ? ஒன்று கூறுவாயாக'வென்று நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதற்கு, "பரிவுற்று மெலியினும்" ('தொல். கற். 12) என்னும் விதிகொள்க.

    
நிலந்தாழ் மருங்கின் தெண்கடல் மேய்ந்த 
    
விலங்குமென் தூவிச் செங்கால் அன்னம் 
    
பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி 
    
வானர மகளிர்க்கு மேவல் ஆகும் 
5
வளராப் பார்ப்பிற்கு அல்கிரை ஒய்யும் 
    
அசைவில் நோன்பறை போலச் செல்வர 
    
வருந்தினை வாழியென் உள்ளம் ஒருநாள் 
    
காதலி உழையள் ஆகவும் 
    
குணக்குத்தோன்று வெள்ளியின் எமக்கும்ஆர் வருமே. 

     (சொ - ள்) என் உள்ளம் வாழி - என் உள்ளமே! நீ வாழ்வாயாக!; நிலம் தாழ் மருங்கின் தெள் கடல் மேய்ந்த - நிலத்தின் கண்ணே ஆழ்ந்த இடத்தினையுடைய தெளிந்த கடலருகு சென்று இரைதேடி அருந்திய; விலங்கு மெல் தூவிச் செங்கால் அன்னம் - ஒன்றற்கொன்று விலகிய மெல்லிய இறகினையும் சிவந்த காலினையுமுடைய அன்னப்பறவைகள்; பொன் படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி - பொன்பொருந்திய நெடிய கொடுமுடிகளையுடைய இமயமலையின் உச்சியிலிருக்கின்ற தேவருலகின்கண் வாழும்; வான் அர மகளிர்க்கு மேவல் ஆகும் - தெய்வமகளிர்க்கு விருப்பத்தோடு விளையாடுதற்கு ஆய; வளராப்பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் - சிறகு முளைத்து வளராத தம் இளம் பார்ப்புகளுக்கு இட்டுண்ணும் உணவைக் கொடுக்குமாறு செல்லுகின்றபொழுது; அசைவுஇல் நோன் பறை போல - அவற்றின் வருந்துதலில்லாத வலிய சிறகு வருந்தினாற்போல; செல் வர வருந்தினை - பலகாலும் என்பால் நின்றும் அவள்பால் ஏகுதலாலே நீ வருந்தாநின்றனை; ஒருநாள் குணக்குத் தோன்றும் வெள்ளியின் - அதனை யான் நன்கு அறிவேன் காண்! இங்ஙனம் வருந்தியதன் பயனாக இனி மற்றொரு பொழுதிலாயினும் கீழ்பாற்கண் விடியலிலே தோன்றுகின்ற வெள்ளிபோல; காதலி உழையள் ஆகவும் எமக்கு வருமோ - நங் காதலி நம் அருகில் வைகுமாறு நமக்குக் கிடைக்குமோ?; அதனையேனும் ஆராய்ந்து கூறுவாயாக! எ - று.

     (வி - ம்) ஒய்யும் - கொண்டு சென்று கொடுக்கும். ஆர் : அசைநிலை. ஏ : வினா.

     தமர் மறுத்ததனால் உழையளாகவும் வருமோவென்று இரங்கினான். அவர் மறுப்பினும் அவள் தன்பால் அன்புடையளாதலின் ஒருகால் வருமோ என்னுங் கருத்தால் காதலி யென்றான்.

     இறைச்சி :- அன்னப் பறவை இமயத்து உச்சியில் அரமகளிர் கைப்பட்ட தம் பார்ப்புகளுக்குக் கடலகத்துள்ள இரையைக் கொண்டு சிறகு துணையாகச் செல்லுமென்றது, யாமும் தமர் வயிற்பட்ட நம் காதலி நிமித்தமாக வேற்று நாட்டுச் சென்று பொருளீட்டி உள்ளமும், அந்தணரும் சான்றோரும் துணையாகக்கொண்டு ஈண்டெய்தி வருந்தா நின்றேம் என்றதாம். மெய்ப்பாடு - பிறன்கட் டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை) காதலி அரிய ஆதல் தோன்ற அவள்பால் சென்று கையறுகின்ற தன் நெஞ்சத்திற்கு, வானர மகளிர் பால் வளருகின்ற தம் பார்ப்பிற்கு இரை கொடுக்கச் சென்று மீளும் அன்னப்பறவையின் சிறகினை உவமையாக எடுத்தான்.

(356)