திணை : நெய்தல்.

     துறை : (1) இது, பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்துத் தோழி இவள் ஆற்றாளாயினள்; இவளை இழந்தேனெனக் கவன்றாள் வற்புறுத்தது.

     (து - ம்) என்பது, அறத்தொடு நிற்றலின்பின் மணஞ் செய்து கொள்ளாது தலைவன் பொருள்வயிற் பிரிந்த காலத்துத் தோழி இவள் ஆற்றாளாயினாள்; இவளை இழந்தேனெனக் கவலையுடையளாய் இறைமகளை நெருங்கி நமது கவின் கெடுமாறு பிரிந்துபோகிய தலைவர் முன்பு நின்னை அகன்று போகேன் என்று சூளுரைகூறி அதனை மறந்தனராதலால் 'அது காரணமாக நீ அணங்காதொழி' என்று கடல் தெய்வத்துக்குப் பரவுக்கடன் கொடுப்போம் வாவென அவள் ஆற்றும் வண்ணம் சூழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதற்கு, 'ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட' (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

     துறை : (2) அக்காலத்து ஆற்றாளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉமாம்.

     (து - ம்) என்பது, வெளிப்படை. (உரை இரண்டற்கு மொக்கும்.)

     (இ - ம்) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதிகொள்க.

    
பெருந்தோள் நெகிழ அவ்வரி வாடச்  
    
சிறுமெல் ஆகம் பெரும்பசப்பு ஊர 
    
இன்னேம் ஆக எற்கண்டு நாணி 
    
நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம் 
5
அணங்கல் ஓம்புமதி வாழிய நீயெனக் 
    
கணங்கெழு கடவுட்கு உயர்பலி தூஉய்ப் 
    
பரவினம் வருகஞ் சென்மோ தோழி 
    
பெருஞ்சேய் இறவின் துய்த்தலை முடங்கல் 
    
சிறுவெண் காக்கை நாளிரை பெறூஉம் 
10
பசும்பூண் வழுதி மருங்கை அன்னஎன் 
    
அரும்பெறல் ஆய்கவின் தொலையப் 
    
பிரிந்தாண்டு உறைதல் வல்லி யோரே.  

     (சொ - ள்) தோழி பெருஞ் சேய் துய்த்தலை இறவின் முடங்கல் - தோழீ! பெரிய செவ்விய பஞ்சுபோன்ற தலையையுடைய இறாவின் முடங்கலை; சிறு வெண் காக்கை நாள் இரைபெறூஉம் பசும்பூண் வழுதி மருங்கை அன்ன - சிறிய வெளிய காக்கை நாட்காலையில் இரையாகப் பெறுகின்ற பசிய பூணை அணிந்த பாண்டியனது மருங்கூர் போன்ற; என் அரும் பெறல் ஆய்கவின் தொலைய - எனது அரிதாகப் பெற்ற நுண்ணிய அழகெல்லாம் கெடும்படியாக; பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோர் - என்னைப்பிரிந்து அங்கே தங்குதற்கு வல்ல தலைவர்; பெருந்தோள் நெகிழ அவ் வரி வாடச் சிறு மெல்ஆகம் பெரும்பசப்பு ஊர - முன்னொருபொழுது நம்முடைய பெரிய தோள் தளர்வடைய அழகிய வரி (இரேகை)கள் வாட்டமுறச் சிறிய மெல்லிய கொங்கைகளிலே பெரிய பசலை பரவ; இன்னேம் ஆக என் கண்டு நாணி - நாம் இத் தன்மையேமாதலும் அவர் தம் காதலியைப் பிரிதலால் இவ்வண்ணம் ஆயினாள் என்று என்னைக் கண்டு வெட்கமுற்று; நின்னொடு தெளித்தனர் ஆயினும் - தெய்வத்தை முன்னிலைப் படுத்தி இனி ஒருபொழுதேனும் பிரியேனென்று நின்னுடனே சூளுற்றனராயினும் அங்ஙனம் கூறிய சூள் பொய்த்தலானே அதுகாரணமாக; என்னதூஉம் அணங்கல் ஓம்பு நீ வாழிய என - எவ்வளவேனும் அவரை வருத்தாதேகொள்! அவரைப் பாதுகாப்பாயாக! நீ வாழிய என்று; கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்ப் பரவினம் வருகஞ் சென்மோ - கணங்களையுடைய அக் கடவுளுக்கு உயர்ந்த பலியையிட்டு நீர்வளாவிச் சாந்தி செய்து பரவுக்கடன் கொடுத்து இறைஞ்சினமாகிப் பின்பு வருவோம், அதற்காக ஆண்டுச் செல்வோமோ? ஒன்று ஆய்ந்து கூறுவாய் காண்! எ-று.

     (வி - ம்) பெருந்தோள் நெகிழ்தல் முதலியன முன்பொரு காலத்து நிகழ்ந்தவை. தெளித்தல் - சூளுறுதல். ஆகம் - கொங்கை. கடவுட்குப் பலிக் கொடை நேர்ந்தால் அவர் ஊறின்றி வருவரென ஆற்றுவித்தது, "தாயத்தி னடையா" (தொல். பொ. 22) என்றதன்படி தலைவி நலனைத் தோழி எனது நலனென்றாள்.

     உள்ளுறை :-இறாவின் முடங்கலைச் சிறு வெண்காக்கை நாட்காலையின் இரையாகப் பெறுமென்றது, பெரிய பொருளை நம் தலைவர் ஆண்டுச் சென்றவுடன் பெற்று மீள்வரென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை) இது, 'தெய்வமஞ்சல்' என்னும் மெய்ப்பாடு.

(358)