(து - ம்.) என்பது, தலைமகன் இரவுக்குறிவந்து ஒரு மறைவிடத்தில் நிற்பதையறிந்த தோழி அவன் விரைவில் வரையவேண்டித் "தலைவன் சொல்லைத் தெளிந்த யாம் எம்முடைய நலத்தை யிழந்தே விட்டேம், அதனாற் கண் துயின்றிலேம்; அலரெடுத்த இவ்வூர் நம்மைப் போல எதனை யிழந்தது? இன்னுந் துயின்றிலதே" என அவன் வருந் தொழிற்கருமைகூறி வரைவு கடாவா நிற்பது.
(இ - ம்.) இதனை, "அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.
| 1குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை |
| பூநுத லிரும்படி புலம்பத் தாக்கித் |
| தாழ்நீர் நனந்தலைப் பெருங்களி றடூஉங் |
| கல்லக வெற்பன் சொல்லின் தேறி |
5 | யாமெந் நலனிழந் தனமே யாமத்து |
| அலர்வாய்ப் பெண்டிர் அம்பலோ டொன்றிப் |
| புரையில் தீமொழி பயிற்றிய வுரையெடுத்து |
| ஆனாக் கௌவைத் தாகத் |
| தானென் இழந்ததிவ் வழுங்க லூரே |
(சொ - ள்.) குறுங்கை இரும்புலிக் கோள் வல் ஏற்றை - குறிய முன்னங்காலையுடைய கொல்லவல்ல பெரிய ஆண்புலி; பூ நுதல் இரும் பிடி புலம்பத் தாக்கித் தாழ்நீர் நனம் தலைப் பெருங்களிறு அடூஉம் கல்அக வெற்பன் - பொலிவுபெற்ற நெற்றியையுடைய கரிய பிடியானை புலம்புமாறு நீரற்ற அகன்ற காட்டினிடத்துப் பெரிய களிற்று யானையைத் தாக்கி்க் கொல்லா நிற்கும் மலையிடத்தையுடைய சிலம்பன்; சொல்லில் தேறி - 'நின்னிற் பிரியேன்' என்று கூறிய பொய்ம்மொழியை மெய்யெனத் தெளிந்து; யாம் எம் நலன் இழந்தேம் - யாம் எம் நலத்தை இழந்தேவிட்டேம், ஆதலின் இந்நடுயாமத்துக் கண் துயிலாதொழிந்தனம்; அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி இ அழுங்கல் ஊர் - பழிதூற்றும் வாயையுடைய ஏதிலாட்டியராற் கூறப்படும் அம்பலொடு சேர ஒலிமிக்க இவ்வூர்; புரையில் தீமொழி பயிற்றிய உரை எடுத்து ஆனாக் கௌவைத்து ஆக என் இழந்தது யாமத்து - மேன்மையில்லாத தீய சொற்களைக் கூறுதற்கு வேண்டிய உரைகளை ஏறட் டெடுத்துக்கொண்டு அமையாத பழி மொழிமையுடையதாக எம்மைப்போல் எதனை இழந்தது? இந் நடுயாமத்திலும் துயின்றிலதே; எ - று.
(வி - ம்.)ஏற்றை - விலங்கி னாண்பாற்பெயர். புரை-மேன்மை. கௌவை - பழிச்சொல். அழுங்கல் - ஒலி.
தலைவன் ஒருசிறைப்புறத்தானென அறிந்த தோழி அவன் குறித்த பொழுது வாராமையாலே தலைவி நலனிழந்தமையும், ஏதிலாட்டியர் அலரெடுத்தமையும், ஊரார் பழிதூற்றுதலும், ஊர் கண்ணுறங்காமையால் இரவுக் குறியின் முட்டுப்பாடுங் கூறி வரைவுகடாய தறிக. ஊருறங்காமை கூறியது முட்டுவயிற்கழல். நலனிழந்தனமென்றது பசலைபாய்தலை.
உள்ளுறை :-பிடி புலம்புமாறு புலியானது களிற்றைத் தாக்கிக் கொல்லா நிற்கும் நாடனென்றதனால் இரவு இந் நெறியின்கண் வரின்யாம் புலம்புமாறு எமர் நின்னை ஏதஞ்செய்யா நிற்பர் என்றதாம்; இதனாலும் இரவுக்குறி மறுத்து வரைவுடம்படுத்தியதறிக, மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த அச்சம். பயன் -வரைவு கடாதல்.
(பெரு - ரை.) வெற்பன்சொல் தேறி யாம் எம் நலம் இழந்தனம் அதனால் யாமத்தும் துயில்கின்றிலேம். ஊர் என் இழந்தது இவ்வியாமத்தும் துயிலாதே கௌவைத்தாக என யாமத்து என்பதனை ஈரிடத்தும் இயைத்துக்கொள்க. துயில்கின்றிலேம், துயிலாதே என்பன சொல் லெச்சத்தாற் போந்தன.
(36)