திணை : மருதம்.

     துறை : (1) இது, பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி தலைமகள் குறிப்பறிந்து வாயில் மறுத்தது.

     (து - ம்) என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனிடத்துத் தலைமகள் சினமுடையளாதலை யறிந்த தோழி, தலைவனை நெருங்கி வலம்வந்து 'எம்பெருமானே ! நீ வெள்கியுற்ற தன்மைக்கு யான் மகிழா நிற்பேன்; இம் மனையின் கண்ணே வந்து துயில்வது பிறிதொரு பொழுதினுங் கைகூடுமாதலால் நேற்று வந்த பரத்தையரின் நலனுண்டு துறந்துவந்த நீ இன்று வரும் பரத்தையரின் நலன் நுகருமாறு செல்வாயாக; நின் பரத்தை சிறப்பெய்துக' என மறுத்துக் கூறாநிற்பது.

     (இ - ம்) இதற்கு, "நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்" (தொல். கள. 9.) என்னும் விதிகொள்க.

     துறை : (2) தலைமகள் ஊடிச் சொல்லியதூஉமாம்.

     (து - ம்) என்பது, வெளிப்படை. (உரை இரண்டற்கு மொக்கும்.)

     (இ - ம்) இதற்கு, "புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்பு நனிகாட்டி, இயன்ற நெஞ்சுந் தலைப்பெயத்தருக்கி யெதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்" (தொல். கற். 6.) என்னும் விதிகொள்க.

    
முழவுமுகம் புலர்ந்து முறையின் ஆடிய 
    
விழவொழி களத்த பாவை போல 
    
நெருநைப் புணர்ந்தோர் புதுநலம் வௌவி 
    
இன்றுதரு மகளிர் மென்தோள் பெறீஇயர் 
5
சென்றீ பெரும சிறக்கநின் பரத்தை 
    
பல்லோர் பழித்தல் நாணி வல்லே 
    
காழிற் குத்திக் கசிந்தவர் அலைப்பக் 
    
கையிடை வைத்தது மெய்யிடைத்திமிரும் 
    
முனியுடைக் கவளம் போல நனிபெரிது 
10
உற்றநின் விழுமம் உவப்பேன் 
    
மற்றுங் கூடும் மனைமடி துயிலே.  

     (சொ - ள்) பெரும பல்லோர் பழித்தல் நாணி வல்லே - பெருமானே! பலரும் இகழ்ந்து கூறுதல் பொறாது வெள்கி விரைவாக; கசிந்தவர் காழில் குத்தி அலைப்ப - வருந்திய பாகர் இருப்பு முள்ளாலே குத்தி அலைத்தலாலே; கை இடை வைத்தது மெய்யிடைத் திமிரும் முனியுடைக் கவளம் போல - துன்புற்றுத் தன் துதிக்கையிடை வைத்ததனை மெய்யின்மேல் வாரி இறைத்துக் கொள்ளுகின்ற யானைக்கன்றுக்கு இட்ட கவளம்போல; நனி பெரிது உற்ற நின் விழுமம் உவப்பேன் - மிகப் பெரிதாக நீ யுற்ற நின் சீர்மையை யான் கண்டு மகிழா நிற்பேன்; மனை மடி துயில் மற்றும் கூடும் - நீ மனையின்கண் வந்து துயிலுகின்ற துயிலானது பிறிதொரு பொழுதினுங் கூடும்; முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய - ஆதலால் மத்தள முகத்து வைத்த மார்ச்சனை வறந்து போமாறு முறையே கூத்துக்களை ஆடிய; விழவு ஒழி களத்த பாவை போல - திருவிழா வொழிந்த களத்திலுள்ள கூத்தியைப்போல; நெருநைப் புணர்ந்தோர் புதுநலம் வௌவி -அழகுடைய நேற்றைப் பொழுதிலே வந்து நின்னை முயங்கிய பரத்தையருடைய புதிய நலனை யெல்லாங் கொள்ளை கொண்டு; இன்று தரும் மகளிர் மெல்தோள் பெறீஇயர் - இற்றை நாளால் பாணனாலே கொணர்ந்து தரப்படுகின்ற பரத்தையருடைய மெல்லிய தோளை அணையும் வண்ணம்; செல் - விரைந்து செல்வாயாக!; நின் பரத்தை சிறக்க - நின்னொடு நின் பரத்தை நீடு வாழ்வாளாக! எ - று.

     (வி - ம்) புலர்ந்து - புலரவெனத் திரிக்க. நாணி - உற்ற விழுமமென்க. காழ் - இருப்புமுள். முனி - யானைக்கன்று அது கவளத்தை மேலே வாரியிறைத்துக் கொள்ளுதல் போல வெட்கமின்றி நீ மேலே போகட்டுக் கொண்ட பழிச் சொல்லை யான் கண்டு மகிழ்வேனென்க. விழுமம் - இகழ்ச்சிக் குறிப்பு.

     நீ இங்ஙனம் இகப்பினும் மனையின் கண்ணிருந்தே மடிதுமாதலின், நீ விரும்பிய வண்ணம் வந்தொழுகற் பாலையென்பாள் மனைதுயில் மற்றுங் கூடும் என்றாள். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின் மறுத்தல்.

(360)