(து - ம்) என்பது, கொண்டுதலைக்கழிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண்ணே தலைவி அயாவுற்ற தறிந்து 'மடந்தையே! நீ சிறிது பொழுது இங்கு விளையாடிக் கொண்டிருப்பாயாக; யான் இவ்வேங்கை
மரத்தின் புறத்திலிருந்து மறவர்வரிற் போர்புரிந்து பெயர்க்குவேன்; நின் சுற்றத்தார் நின்னைத் தேடிவரின் மறைந்துகொள்கின்றே'னென அவளது அயாவொழியுமாறு தெளியக் கூறாநிற்பது.
(இ - ம்) இதற்கு, "இடைச்சுர மருங்கின் . . . . . அப்பாற்பட்ட ஒருதிறத் தானும்" (தொல். அகத். 41.) என்னும் விதிகொள்க.
| வினையமை பாவையின் இயலி நுந்தை |
| மனைவரை இறந்து வந்தனை யாயின் |
| தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி |
| அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த |
5 | கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும் |
| நீவிளை யாடுக சிறிதே யானே |
| மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை |
| மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி |
| அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென் |
10 | நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே. |
(சொ - ள்) மாஅயோளே - கரிய மாமைநிறமுடைய காதலியே!; வினை அமை பாவையின் இயலி - இயந்திரமமைந்த கொல்லிப் பாவைபோல இயங்கா நின்று; நுந்தை மனை வரை இறந்து வந்தனை - நின் தந்தையின் மனையெல்லையைக் கடந்து யான் கூறுகின்ற சொற்களை மேற்கொண்டு என்னொடு போந்தனை; ஆயின் - ஆதலால்; தலை நாட்கு எதிரிய தண் பெயல் எழிலி அணி மிகு கானத்து - முதற் பெயலைப் பெய்யத் தொடங்கிய குளிர்ச்சியான மழையையுடைய மேகம் பெய்தலாலே அழகு மிக்க காட்டில்; அகன் புறம் பரந்த கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும் சிறிது நீ விளையாடுக - அகன்ற மேலிடமெல்லாம் பரவிய விரைந்த செலவினையுடைய சிவந்த ஈயலின் மூதாயை நோக்கியும் அவற்றைப் பிடித்தும் சிறிது பொழுது நீ விளையாடுவாயாக!; யான் மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி - யானோவெனில், இளைய களிற்றியானை யுரிஞ்சிய பருத்த அடியை உடைய வேங்கை மரத்தின் மணற் பரப்பினையுடைய அதன் பெரிய பின்புறத்தில் மறைந்திருந்து; அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென் - ஆறலைகள்வர் முதலாயினோர் சூழ்ந்து போர் செய்ய வரின் அஞ்சாது போர் புரிந்து அவர் ஓடுமாறு பெயர்க்குவேன்; நுமர்வரின் மறைகுவென் - அவ்வண்ணம் நின் சுற்றத்தார் தேடி நின்பின்னே தொடர்ந்துவரின் மறைந்துகொள்ளா நிற்பேன்காண்! எ - று.
(வி - ம்) செம்மூதாய் - தம்பலப் பூச்சியுமாம்.
தான் அவரை அடும் ஆற்றலுடையனாயினும் தலைவி தன்னுள்ளத்து எம்பெருமானுக்கு ஏதேனும் ஏதம் நிகழுங் கொல்லோவென்றேங்கி இறந்துபடு மாதலின், அது கருதி நுமர்வரின் மறைகுவே னென்றான்.
இறைச்சி :- மழகளிறு உரிஞ்சிய வேங்கை அங்ஙனம் உரிஞ்சுதலானே கெடாதவாறு போல எத்தகைய பகைவர் வந்து மோதினும் அஞ்சே னென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தன்வலியுணர்த்தித் தலைவியை ஆற்றுவித்தல்.
(பெரு - ரை) வினை - பொறித்தொழில். அமர் - ஆறலை கள்வர் முதலாயினோர் வரின் நிகழ்வது. 'தண்பத வெழிலி' என்றும் பாடம்.
(362)