(து - ம்) என்பது, வெளிப்படை.
(இ - ம்) இதனை, "மறைந்தவள் அருக .. . . . . பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" (தொல். கள. 23) என்பதனாற் கொள்க.
| கண்டல் வேலிக் கழிசூழ் படப்பைத் |
| தெண்கடல் நன்னாட்டுச் செல்வன் யானென |
| வியங்கொண்டு ஏகினை யாயின் எனையதூஉம் |
| உறுவினைக் கசாவா உலைவில் கம்மியன் |
5 | பொறியறு பிணைக்கூட்டுந் துறைமணல் கொண்டு |
| வம்மோ தோழி மலிநீர்ச் சேர்ப்ப |
| பைந்தழை சிதையக் கோதை வாட |
| நன்னர் மாலை நெருநை நின்னொடு |
| சிலவிலங்கு எல்வளை ஞெகிழ |
10 | அலவன் ஆட்டுவோள் சிலம்புஞெமிர்ந் தெனவே. |
(சொ - ள்) மலி நீர்ச் சேர்ப்ப - நிரம்பிய கடல் நீர் பரவிய நெய்தனிலத் தலைவனே!; பைந் தழை சிதையக் கோதை வாட சில விலங்கு எல் வளை ஞெகிழ - உடுத்திருந்த பசிய தழையுடை சிதைய மலர்மாலை வாடச் சிலவாகிய விளங்கிய ஒளி பொருந்திய வளைகள் கழல; நன்னர் நெருநை மாலை நின்னொடு அலவன் ஆட்டுவோள் தோழி - நன்றாக நேற்று மாலைப்பொழுது நின்னொடு அலவனைப் பிடித்தாட்டிய என் தோழியினுடைய; சிலம்பு ஞெமிர்ந்தென - சிலம்பு உடைபட்டதனாலே; கண்டல் வேலிக் கழிசூழ் படப்பைத் தெள் கடல் நல் நாட்டுச் செல்வன் யான் என - கண்டல் மரங்களை வேலியாகவுடைய புறத்தே கழி சூழ்ந்த கொல்லைகளையுடைய தெளிந்த நல்ல கடல் நாட்டுத் தலைவன் யானென; வியம் கொண்டு ஏகினையாயின் - நெறிகொண்டு போயினையாயின்; எனையதூஉம் உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் - எத்துணையளவேனும் தான் செய்யும் மிக்க கம்மத் தொழிலில் வருத்தமுறாத கெடுதலில்லாத கம்மியன்; பொறி அறு பிணைக் கூட்டும் - கலன் பொறியற்றுப் போயின் இணைத்துச் சந்து ஊதிக் கூட்டுதற்கு மண் கட்டவேண்டியதன்றே; துறை மணல் கொண்டு வம் - அங்ஙனம் கட்டுதற்குத் துறையிலுள்ள மணலைக் கொண்டுவந்து தந்து செல்வாயாக! எ - று.
(வி - ம்) சிலம்பு உடைந்ததை அன்னையறியின் இல்வயிற் செறிக்கப்பட்டுக் களவு நிகழ்தற் கிடனின்றி இறைமகள் வருந்தா நிற்கும்; அப்பொழுது என்னால் ஆற்றுவித்தலரிதாமாதலின், அங்ஙனம் அன்னை அறியுமுன் நீயே துறைமணல் கொணர்ந்து சிலம்பைக்கூட்டி இவளையாற்றுவிப்பாய் என்பது. நீ வந்து ஆற்றுதியெனவே நின்னை யின்றி அமையாளென அறிவுறுத்தினாளாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - ஆற்றாமையுரைத்து வரைவுகடாதல்.
(2) உரை :- தோழீ! நீ தலைவனோ டாடியதனாலே சிலம்பு உடைபட்டதாதலின் நாம் தலைவனைநோக்கிச் "சேர்ப்பனே! நீ பிரிந்தேகினையாயின் அலவன் ஆட்டும் நின் காதலியின் சிலம்பு உடைந்ததனைக் கூட்ட மணல்கொண்டு வருவாயாக' என்போம்; எ-று. மெய்ப்பாடு - அது. பயன் - கையுறையேற்பித்தல்.
(பெரு - ரை) இரண்டாந்துறைக்கு "மலிநீர்ச்சேர்ப்ப! ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்தென மணல் கொண்டு வம்!" என்பேம் என ஒருசொல் வருவித்து முடித்திடுக. இனி "தெண்கடல் நாட்டுச் செல்வென் யான் என வியங்கொண்டு ஏகினையாயின்" என்றும் பாடம். இப் பாடஞ் சிறப்புடையது, இதற்குத், தென்கடல் நாட்டிற்குச் செல்வேன் என்று எம்பால் விடைகொண்டு செல்லுவா யாயின் துறை மணல்கொண்டு வா என இயைபு காண்க! வியம் - விடை
(363)