(து - ம்) என்பது, வந்தவிருந்தினரை ஓம்புவது இல்லறநெறியாயினும் அது தான் பொருளின்றி எவ்வாறியலுமாதலிற் பொருள்வயிற் பிரியவேண்டுமென்ற நெஞ்சினைத் தலைமகன் நெருங்கி நெஞ்சமே! அங்ஙனம் நீ பொருள் ஈட்டிவரினும் இல்லறம் நிகழ்த்தற்பாலள் மனைவியேயன்றோ? அவளிறந்துபடுமாறு விடுத்தகலுதல் தகுதியோ? அவள் வாடையால் வருந்தி மாய விடுத்தகலுவோர் மடமையுடையரெனக் கடிந்து கூறாநிற்பது.
(இ - ம்) இதற்கு, "வேற்று நாட்டு அகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதி கொள்க.
| அரவுக்கிளர்ந் தன்ன விரவுறு பல்காழ் |
| வீடுறு நுண்துகில் ஊடுவந்து இமைக்கும் |
| திருந்திழை அல்குல் பெருந்தோள் குறுமகள் |
| மணியேர் ஐம்பால் 1 மாசறக் கழீஇக் |
5 | கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி |
| மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த |
| இரும்பல் மெல்லணை ஒழியக் கரும்பின் |
| வேல்போல் வெண்முகை பிரியத் தீண்டி |
| முதுக்குறைக் குரீஇ முயன்றுசெய் குடம்பை |
10 | மூங்கில் அங்கழை தூங்க ஒற்றும் |
| வடபுல வாடைக்குப் பிரிவோர் |
| மடவர் வாழியிவ் வுலகத் தானே. |
(சொ - ள்) அரவுக் கிளர்ந்து அன்ன பல் விரவுறு காழ் வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்து இழை அல்குல் - நெஞ்சமே! பாம்பு படமெடுத் தெழுந்தாற் போன்ற பலவாகக் கலந்த எண்மணிக் கோவையாகிய மேகலையணிந்த, நடத்தலால் ஒதுங்குதல் அமைந்த நுண்ணிய துகிலினுள்ளால் வந்து தோன்றி விளங்குகின்ற திருந்திய இழையணிந்த அல்குலையும்; பெருந் தோள் குறுமகள் - பெரிய தோளையுமுடைய இளமடந்தையின்; மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ - நீலமணி போன்ற கூந்தலை மாசுநீங்கத் தூய்மை செய்து விளக்கி; கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி மாதர் வண்டொடு சுரும்புபட முடித்த - குளிர் காற்றால் மலருகின்ற முல்லையின் குறுகிய காம்பையுடைய மலர்களை இளைய பெண் வண்டுடனே ஆண் வண்டுஞ் சூழுமாறு முடித்திருக்கின்ற; இரும் பல் மெல் அணை ஒழிய - மிகப் பலவாகிய மெல்லிய அக் கூந்தலைணையிலே கிடந்து துயிலுவதனை யொழியவிட்டு; கரும்பின் வேல்போல் வெள்முகை பிரியத் தீண்டி - கரும்பின் வேல் போல்கின்ற வெளியமுகை பிரியும்படி தீண்டி; முதுக்குறை குரீஇ முயன்று செய்குடம்பை மூங்கில் அங்கழை தூங்க ஒற்றும் - அறிவுமிக்க தூக்கணங் குருவி தான் முயன்று செய்த கூட்டினை மூங்கில் தன் அடித்தண்டும் அசையுமாறு மோதுகின்ற; வடபுல வாடைக்குப் பிரிவோர் - வடதிசைக்குரிய வாடைக்காற்று வீசுங்கூதிர்ப் பருவத்திலே பிரிபவர்; இவ்வுலகத்தான் மடவர் - இவ்வுலகத்திலே அறியாமை மிக்குடையராவார், எ - று.
(வி - ம்) முதுக்குறைவு - பேரறிவு. அரவுசீறியெழுந்தாற் போன்ற அல்குல், நுண்ணிய வெளிய துகிலையுடுத்தவழி அத்துகில் அசையுந்தொறும் உள்ளிருந்து கண் இமைத்தல் போலுதலானே இமைக்குமல்குல் என்றானுமாம்.
இறைச்சிகள் :- (1) மணமில்லாத கரும்பின்மலரை வாடைதீண்டும் என்றது, நெஞ்சே! நிலையில்லாத பொருளை நீ விரும்பி யுலாவுறுகின்றனை யென்றதாம்.
இறைச்சிகள் :- (2) வாடை வீசுதலாலே குருவியின் குடம்பை அசைந்து வருமாறு மூங்கில் சென்று மோதுமென்றது, பொருள்நசை நின்னைத் தூண்டுதலானே யான் வருந்துமாறு நீ என்னைத் துன்புறுத்துகின்றதனை யென்றதாம். மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய பிணிபற்றிய இளிவரல். பயன் - இல்லத்தழுங்கல்.
(பெரு - ரை) இரும்பல் மெல்லணை - கரிய பலவாகிய மெல்லிய கூந்தலாகிய அணை என்க. "செயற்கரிய செய்வார் பெரியர்" என்பதுபற்றி அரிய கூடியற்றும் குருவியை முதுக்குறைக் குரீஇ என்றான்.
(366)
(பாடம்) 1. | மாசறக்கெழீஇக். |