திணை : முல்லை.

     துறை : இது, வரவுமலிந்தது.

     (து - ம்) என்பது, வினைவயிற் பிரிந்த தலைமகன் குறித்த பருவத்து வந்திலனென்று கவன்ற தலைமகளைத் தோழி நெருங்கி, மடந்தாய்! சென்று வினைமுடித்தமையால் உடன்சென்றிருந்த வீரர் பலரும் மலர்சூடி வந்தனர்காண்; நம் காதலரும் இப் பனிக்காலத்து ஆண்டுத் தங்கி வருந்தாது இன்னே வருவரென்று கூறுபவள் உள்ளுறையால் நீ துன்புறாது இல்லறம் நிகழ்த்துவாயாக வென்றும் ஆராய்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதனை, "பிறவும் வகைபட வந்த கிளவி" (தொல். கற். 9) என்பதனாற் கொள்க.

    
கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை 
    
நடுங்குசிறைப் பிள்ளை தழீஇக் கிளைபயிர்ந்து 
    
கருங்கண் கருனைச் செந்நெல்வெண் சோறு 
    
சூருடைப் பலியொடு கவரிய குறுங்கால் 
5
கூழுடை நன்மனைக் குழுவின இருக்கும் 
    
மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி 
    
மெல்லியல் அரிவைநின் பல்லிருங் கதுப்பிற் 
    
குவளையொடு தொடுத்த நறுவீ முல்லைத் 
    
தளையவிழ் அலரித் தண்நறுங் கோதை 
10
இளையருஞ் சூடி வந்தனர் நமரும் 
    
விரியுளை நன்மா கடைஇப் 
    
பரியாது வருவர்இப் பனிபடு நாளே. 

     (சொ - ள்) கொடுங் கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை - வட்டமாகிய கண்களையும் கூரிய வாயையும் உடைய காக்கைப் பேடை; நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ - நடுங்குகின்ற சிறகையுடைய தன் பிள்ளையைத் தழுவிக் கொண்டு; கிளை பயிர்ந்து - சுற்றத்தையும் விளித்து; கருங் கண் கருனைச் செந் நெல் வெள்சோறு சூர் உடைப் பலியொடு கவரிய - கரிய கண்ணையுடைய கருனைக் கிழங்கின் பொரிக் கறியோடு கூடிய செந்நெல் அரிசியாலாக்கிய வெளிய சோற்றுத் திரளையைத் தெய்வத்துக்கிடும் பலியுடனே கவர்ந்து கொள்ளுமாறு; குறுங் கால் கூழ் உடை நல் மனைக் குழுவின இருக்கும் - குறிய கால் நாட்டிக் கட்டிய மிக்க உணவையுடைய நல்ல மனையின்கண்ணே கூடினவாயிருக்கும்; மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி - பழைமையான வீடுகளையுடைய அருமன் என்பவனது பெரிய புகழ் பொருந்திய சிறுகுடி என்னும் ஊரிலிராநின்ற; மெல் இயல் அரிவை - மெத்தென்ற சாயலையுடைய அரிவையே!; நின் பல் இருங் கதுப்பின் குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத் தளை அவிழ் அலரி - நினது பலவாகிய கரிய கூந்தலிற் சூடிய மாலை போலக் குவளை மலரொடு இடையிட்டுத் தொடுத்த நறிய பூவையுடைய முல்லையின் மூட்டுவாய் அவிழ்ந்த மலராகிய; தண் நறுங் கோதை - தண்ணிய நன்மணமுடைய பூமாலையை; இளையரும் சூடி வந்தனர் - உடன் சென்றிருந்த வீரரெல்லாருஞ் சூடி வந்தனர்; இப் பனி படு நாள் நமரும் பரியாது - அதனால் இப் பனி மிக்க பருவத்திலேதானே நங்காதலரும் ஆண்டுத் தங்கி வருந்தாது; விரி உளை நல் மா கடைஇ வருவர் - விரிந்த பிடரிமயிரையுடைய நல்ல குதிரையைச் செலுத்திக் கொண்டு இன்னே வருகுவர்; ஆதலின் வருந்தாதே கொள்! எ - று.

     (வி - ம்) சிறுகுடிபோன்ற அரிவையெனினுமாம்.

    வினைமுடித்த மகிழ்ச்சிகூறக் கேட்டவளவே ஆற்றுமாதலின் அது தோன்ற வீரர் மலர்சூடிவந்தன ரென்றாள். அவ் வினை முடித்தலிற் சோர்விலரென்பது குறிப்பிப்பாள் பரியாது வருவரென்றாள்.

     உள்ளுறை :-காக்கையின் பெடை தன் பார்ப்பைத் தழுவிக் கொண்டு சோற்றுப்பலியைக் கவரவேண்டிக் கிளையையழைத்து மனையின்கண்ணே சூழ்ந்திருக்குமென்றது, நீயும் நின்மகவைத் தழுவினையாகிக் கேள்வன் கொணருகின்ற நிதியத்தை ஆர்த்துமாறு சுற்றத்தாரை யழைத்துச் சூழ இருத்தி மனையறம் நிகழ்த்துவாயாக என்றதாம். கைகோள் - கற்பு. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை) அருமன் - சிறுகுடி என்னும் ஊரிலுள்ள பெருங்குடித் தோன்றல்; இவனைக் 'கள்ளில் ஆத்திரேயனார் என்னும் நல்லிசைப் புலவரும்' "ஆதியருமன் மூதூ ரன்ன" எனப் பாராட்டியிருத்தலைக் குறுந்தொகை (2")க்கண் காண்க.

(367)