(து - ம்) என்பது, தலைமகன் வரையாது நெடுங்காலம் பகல்வந் தொழுகுவது கண்ட தோழி, அவன் விரைய மணஞ்செய்துகொள்ளுமாறு நெருங்கி ஐயனே! உம்மோடு யாம் கிளிகடிந்து ஊசல்தூங்கி அருவியாடி வருவதினும் இனியதொன் றில்லையாயினும், அதனால் எமக்குண்டாகிய புதுமண முதலாயவற்றை அன்னை நோக்கிச் சுட்டி உயிர்த்துச் சீறாநின்றனள்; அதனையஞ்சி யாம் இல்வயிற்செறிப்புற்று இரங்கத்தக்கேம் ஆயினேம் என்று நொந்து கூறாநிற்பது.
| பெரும்புனங் கவருஞ் சிறுகிளி ஓப்பிக் |
| கருங்கால் வேங்கை ஊசல் தூங்கிக |
் | கோடேந்து அல்குல் தழையணிந்து உம்மோடு |
| ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ |
5 | நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த |
| வெறிகமழ் கொண்ட நாற்றமுஞ் சிறிய |
| பசலை பாய்தரு நுதலும் நோக்கி |
| வறிதுகு நெஞ்சினள் பிறிதொன்று சுட்டி |
| வெய்ய உயிர்த்தனள் யாயே |
10 | ஐய அஞ்சினம் அளியம் யாமே. |
(சொ - ள்) ஐய பெரும்புனம் கவருஞ் சிறுகிளி ஓப்பி - ஐயனே! பெரிய புனத்திலுள்ள தினைக்கதிர்களைக் கொய்து கொண்டு செல்லுகின்ற சிறிய கிளிகளை வெருட்டி; கருங் கால் வேங்கை ஊசல் தூங்கிக் கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து - கரிய அடியையுடைய வேங்கை மரத்திலே தொடுத்த கயிற்றூசலில் ஏறி ஆடிப் பக்கம் உயர்ந்த அல்குலுக்குத் தழையுடை அணிந்து; உம்மோடு ஆடினம் வருதலின் - நும்முடனே அருவியாடி விளையாட்டு அயர்ந்தேமாய் வருதலினுங்காட்டில்; இனியதும் உண்டோ - இனியதொரு காரியமுளதாகுமோ?; நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த வெறி கமழ் கொண்ட நாற்றமும் - நெறிப்பமைந்த கருமை முதிர்ந்திருந்த கூந்தலில் நறுமணங் கமழ்தலைக்கொண்ட நல்ல புது நாற்றத்தையும்; பசலை பாய்தரு சிறிய நுதலும் நோக்கி - பசலை பரவிய சிறிய நெற்றியையும் நோக்கி; வறிது உகு நெஞ்சினள் யாய் - பயனின்றிச் சிதைந்த உள்ளத்தையுடையளாய் எம் அன்னை; பிறிது ஒன்று சுட்டி வெய்ய உயிர்த்தனள் - பிறிதொன்றனைச் சுட்டி நின்றாள் போல வெய்யவாகப் பெருமூச்செறிந்து வெகுளா நின்றனள்; யாம் அளியம் அஞ்சினம் - அதனால் யாம் இல்வயிற் செறிக்கப்பட்டுப் பிறரால் இரங்கத்தக்க தன்மையேமாய் அஞ்சாநின்றேம்; எ - று.
(வி - ம்) இனியது மென்ற உம்மை பிரித்துக்கூட்டப்பட்டது. இருந்த கூழையென மாறுக.
அறிகரிகூறுவார் யாருமின்மையால் நேரே கடியாது அன்னை பிறிதொன்று சுட்டி யுயிர்த்தன ளென்றாள். அளியமென இற்செறிப்புணர்த்தினாள். அதற்கும் நீயே காரணமென்பதுதோன்ற நீ பிரிந்ததனாலுண்டாகிய பசலை பரவிய நுதலெனக் குறிப்பித்தாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை) நாற்றமும் தோற்றமும் வேறுபடுதலானே யாய் நங் களவினையறிந்து இற் செறித்தனள் என்பது கருத்து. ஆதலால் வரைந்து கொள்க என்பது குறிப்பெச்சம்.
(368)