நல்வெள்ளையார்
     திணை : நெய்தல்.

     துறை : இது, பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து ஆற்றாளாகிய தலைமகள் வன்பொறை எதிரழிந்தது.

     (து - ம்) என்பது, அறத்தொடு நிற்றலின்பின் வரைந்துகொள்ளாது தலைமகன் நெட்டிடைக்கழிந்து வரைபொருள் காரணமாகப் பிரிதலும், ஆற்றாத தலைமகள் வலிதிற் பொறுத்திருவென்ற தோழியை நெருங்கித் தோழீ! நேற்றுவந்த மாலைப்பொழுது இன்றும் வருவதாயின் எனக்குண்டாகுங் காமவெள்ளம் நீந்து நெறியறியேனென்று அழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதற்கு, "வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்" (தொல். கள. 21) என்னும் விதி கொள்க.

    
சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேர 
    
நிறைபறைக் குருகினம் விசும்புகந்து ஒழுக 
    
எல்லை பைபயக் கழிப்பி முல்லை 
    
அரும்புவாய் அவிழும் பெரும்புன் மாலை 
5
இன்றும் வருவது ஆயின் நன்றும் 
    
அறியேன் வாழி தோழி அறியேன் 
    
ஞெமையோங்கு உயர்வரை இமயத்து உச்சி 
    
வாஅன் இழிதரும் வயங்குவெள் அருவிக் 
    
கங்கையம் பேர்யாற்றுக் கரையிறந் திழிதருஞ் 
10
சிறையடு கடும்புனல் அன்னவென் 
    
நிறையடு காமம் நீந்து மாறே. 

     (சொ - ள்) தோழி வாழி - தோழீ! வாழி; சுடர் சினம் தணிந்து குன்றம் சேர - ஆதித்த மண்டிலம் தான்கொண்ட சினம் தணியப்பெற்று அத்தமனக் குன்றைச் சென்றுபுக; நிறை பறைக் குருகு இனம் விசும்பு வந்து ஒழுக - நிறைந்த சிறையையுடைய நாரையின் கூட்டம் ஆகாயத்திலே நெருங்கிச் செல்லாநிற்ப; எல்லை பைபயக் கழிப்பி முல்லை அரும்பு வாய் அவிழும் பெரும்புல் மாலை - பகற் பொழுதை மெல்ல மெல்லப் போக்கி முல்லையரும்பு வாய்திறந்து மலராநிற்கும் பெரிய புல்லிய மாலைப் பொழுதானது; இன்றும் வருவது ஆயின் - நேற்று வந்து துன்புறுத்தியதுபோல இன்றும் வருவதாயினோ; ஞெமை ஓங்கு உயர்வரை இமயத்து உச்சி - பெரும்பாலும் ஞெமைகள் வளர்ந்த உயர்ந்த இமயமலை உச்சியின்கண்ணே; வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக் கங்கை அம் பேர் யாற்று - வானிடத்தினின்று இழிதரும் வயங்கிய வெளிய அருவியையுடைய பெரிய கங்கையாற்றினை; கரை இறந்து இழிதரும் சிறைஅடு கடும்புனல் அன்ன - கரை கடந்து இழியாநின்ற அணையை உடைத்துச் செல்லுங் கடிய செலவினையுடைய நீர் வெள்ளம் போன்ற; என் நிறை அடு காமம் நீந்தும் ஆறு நன்றும் அறியேன் அறியேன் - எனது நிறையை அழித்துப் பெருகுகின்ற காம வெள்ளத்தை நீந்துமாறு நன்றாகத் தெரிந்தேனு மில்லையே! எவ்வாறு உய்குவேன்? எ - று.

     (வி - ம்) அவலம் பற்றி அறியேனென இருகால் அடுக்கியது.

     வெப்பம் நீங்கித் தட்பமிக்குப் பறவைகள் பயிர்ந்துவிளையாட நறுமணம்வீசி முல்லை நகைசெய, முதல்நாள் மாலையம்பொழுது வருதலும் காமவெள்ளத்தின் முழுகி வருந்தி இனி இம் மாலைவரி னிறந்துபடுவது திண்ணமெனக் கொண்டவளாதலின் நீந்துமாறு அறியேனென்றாள். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை) காலையையும் பகற்பொழுதையும் ஒருவாறு கழித்துத் தொலைப்பேன் என்பாள் எல்லை பைபயக் கழிப்பி என்றாள்.

(369)