திணை : குறிஞ்சி.

    துறை : இது, வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தோழி சொல்லியது.

    (து - ம்.) என்பது வரைவிடைவைத்துப் பிரியுந் தலைமகன் யான் வருமளவும் தலைவியை ஆற்றியிருவென்றாற்கு நீ இவளையும் உடன் கொண்டு செல்வாயாக, அன்றிப் பிரிந்துசென்றால் கார்காலத்து மாலைப்பொழுதில் இவள் படுந் துன்பம் என்னா லாற்றுவிக்குந் தரத்ததன் றெனத், தோழி மறுத்துக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு அவன் “விலங்குறினும்” (தொல்-கள- 23) என்னும் விதி கொள்க.

    
பிணங்கரில் வாடிய பழவிறல் நனந்தலை 
    
உணங்கூ ணாயத் தோரான் தெண்மணி  
    
1 பைய விசைக்கும் அத்தம் வையெயிற்று  
    
இவளொடுஞ் செலினோ நன்றே குவளை 
5
நீர்சூழ் மாமல ரன்ன கண்ணழக் 
    
கலையொழி பிணையிற் கலங்கி மாறி 
    
அன்பிலிர் அகறி ராயி னென்பரம் 
    
ஆகுவ தன்றிவள் அவலம் நாகத்து 
    
அணங்குடை யருந்தலை உடலி வலனேர்பு 
10
ஆர்கலி நல்லேறு திரிதருங் 
    
2கார்செய் மாலை வரூஉம் போழ்தே. 

    (சொ - ள்.) பிணங்கு அரில் பழவிறல் வாடிய நனந்தலை - ஒன்றோடொன்று சிக்குண்ட சிறுதூறுகளும் பழைமையான நல்ல தோற்றமும் வாடிய அகன்ற இடத்தையுடைய; ஊண் உணங்கு ஆயத்து ஓர் ஆன் தெள் மணி பைய இசைக்கும் அத்தம் - உணவின்றி வாட்டமுற்ற நிரையிலுள்ள ஓராவினது தெளிந்த மணியோசை மெல்லென வந்து ஒலியாநிற்கும் அத்தத்தில்; வை எயிற்று இவளொடும் செலின் நன்று - நீயிர் பொருள் நசையாற் செல்லுகின்ற இப்பொழுது கூரிய பற்களையுடைய இவளோடுஞ் செல்வீராயின் அது மிக நல்லதொரு காரியமாகும்; கலை ஒழி பிணையின் கலங்கிக் குவளை நீர் மாமலர் அன்ன கண் அழ - அங்ஙனமின்றிக் கலைமானைப் பிரிந்த பெண் மான் போல இவள் கலக்க முற்றுக் குவளையின் நீர் நிரம்பிய கரிய மலர்போன்ற கண்களில் அழுகின்ற நீர்வடிய; மாறி அன்பு இலிர் அகறீர் ஆயின் - மாறுபட்டு அன்பில்லாதீராய் நீயிர் இவளைப் பிரிந்து செல்லுவீராயின்; நாகத்து அணங்கு உடை அருந்தலை உடலி - பாம்பினது வருத்துகின்ற அரிய தலை துணிந்து விழும்படி சினந்து; வலன் ஏர்பு ஆர்கலி நல் ஏறு திரிதரும் கார்செய் காலம் வரூஉம்பொழுது - வலமாக எழுந்து மிக்க முழக்கத்தையுடைய நல்ல இடியேறு குமுறித் திரியாநின்ற முகில் சூழ்ந்துலாவுங் கார்ப்பருவத்து மாலைக் காலம் வரும்பொழுது இவள் அவலம் என்பரம் ஆகுவது அன்று - இவள் படுகின்ற அவலம் என்னாலே தாங்கப்படுவ தொன்றன்று காண்மின்; எ - று.

    (வி - ம்.)பழவிறல் - பழைய தன்மை. திரிதரல் - மேகத்தில் யாண்டுமோடி முழங்குதல். நனந்தலை யத்தமென இயைக்க. வரை விடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல் ஒரு பருவகாலத்தளவேயாமாதலிற் கார்ப்பருவத்தாற்றாளெனவே ஆனித்திங்கள் முதலிற் செல்வானென்பது பெறப்பட்டது.

    அத்தத்து ஊணின்று வாடுங்காலத்தும் ஆவினைப் பெற்றம் அணையா நிற்குங்கண்டீர்; அங்ஙனம் அணையும்பொழுது எழுகின்ற மணியோசைக்கு நீயிர் வருந்துவீராதலின் இவளையும் உடன்கொண்டு சேறல் நன்றென்றாள். இடிமுழக்கத்துக்கு அஞ்சுழி அணைத்துக் கொளற்கின்மையான் இறந்துபடுமாதலின் இவள்வலம் என்னாலே தாங்கப்படுவதன்றென்றாள். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - செலவழுங்குவித்தல். "ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும் . . . . தோழி மேன" (தொ-பொ- 414) என்றதனால் வரைவிடைவைத்துப் பிரிகின்றான் ஆற்றிக்கொண் டிருவென்று கூறத் தோழி மறுத்துக் கூறினாளாயிற்றென்பது நச்சினார்க்கினியம்.

    (பெரு - ரை.) பரம் - பாரம். என்பரம் அன்று - யான் சுமக்கும் அளவுடைய பாரமன்று. பெரிதாம் என்றவாறு. எனவே இவள் இறந்துபடுவள் என்றாளாயிற்று. இவள்கண் துன்பக் கண்ணீராலே மறைக்கப்படும் என்பதுணர்த்துவாள் குவளை மாமலர் என்னாது குவளை நீர் சூழ் மாமலர் என்றாள், என்னை ?

  
"உவமப் பொருளின் உற்ற துணரும் 
  
 தெளிமருங் குளவே திறத்திய லான"     (தொல்-உவம- 20)  

என்பதோத்தாகலான் என்க. எனவே குவளையின் நீர் நிரம்பிய கரிய மலர் போன்ற கண் எனக் கண்ணுக்கு அடையாக்காமல் இவள்கண் நீர்சூழ் குவளை மலர் போன்று அழ என வினையுவமமாக்குக. இனி நீயிர் பிரியின் இவ்வூரும் பொலிவிழக்கும் 'ஆயத்தேமும் பெரிதும் வருந்துவேம்' இவளும் தேய்வள் என்பது இறைச்சியிற் றோன்ற, பிணங்கரில் வாடிய பழவிறல் நனந்தலை உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் மணி பைய இசைக்கும் என்றாள் என்க.

(37)
  
 (பாடம்) 1. 
பைபய.
 2. 
கார் செய் காலை.