(து - ம்) என்பது, வெளிப்படை.
(உரை குறிப்பெச்சமில்வழி ஒக்கும்.) (இ - ம்) இதுவுமது.
| வாராய் பாண நகுகம் நேரிழை |
| கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக்கு உதவி |
| நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள்காழ் |
| விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப் |
5 | புதல்வன் ஈன்றெனப் பெயர்பெயர்த்து அவ்வரித் |
| திதலை அல்குல் முதுபெண் டாகித் |
| துஞ்சுதி யோமெல் அஞ்சில் ஓதியெனப் |
| பன்மாண் அகட்டிற் குவளை ஒற்றி |
| உள்ளினென் உறையும் எற்கண்டு மெல்ல |
10 | முகைநாள் முறுவல் தோற்றித் |
| தகைமலர் உண்கண் புதைத்துவந் ததுவே. |
(சொ - ள்) பாண வாராய் - பாணனே! என்னருகு வருவாயாக!; நேர் இழை கடும்பு உடைக் கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி - நேர்மையான கலன்களையுடையாள் என் சுற்றத்தார் சூழ ஓம்புகின்ற சிறந்த சூல் உடையளாய் மகவு ஈன்று நங்குடிக்கு உதவிபுரிந்து; நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள்காழ் விளங்கு நகர் விளங்கக் கிடந்தோள் - நெய்யுடனே கலந்து ஒளிர்கின்ற சிறுவெண் கடுகாகிய திரண்ட விதைகளை விளங்கும் மாளிகையிடமெங்கும் விளங்கும்படி பூசிப் பாயலிலே படுத்திருந்தாளை; குறுகி மெல் அம் சில் ஓதி - நெருங்கி மெல்லிய அழகிய சிலவாகிய கூந்தலையுடையாய்!; புதல்வன் ஈன்று எனப் பெயர் பெயர்த்து அவ் வரித் திதலை அல்குல் முது பெண்டு ஆகித் துஞ்சுதியோ என - நீ புதல்வனை ஈன்றதனால் வேறு பெயரும் பெற்று அழகிய வரிகளும் தித்தியுமுடைய அல்குலையுடைய முது பெண்டாகித் துயிலாநின்றனையோ? என்று கூறி; பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி உள்ளினென் உறையும் என் மெல்லக் கண்டு - பலவாகிய மாட்சிமைப்பட்ட வயிற்றிடத்தில் என் கையிலுள்ள குவளை மலரால் ஒற்றிச் சில பொழுது கருதினேனாகி அங்கு நின்ற என்னை மெல்ல நோக்கி; நாள்முகை முறுவல் தோற்றி - முல்லையின் நாளரும்பு போன்ற நகையையுந் தோற்றுவித்து; தகை மலர் உண்கண் புதைத்து வந்தது - சிறந்த நீலமலர் போன்ற மையுண்ட கண்களைக் கையான் மூடி மகிழ்ச்சி மிகக் கொண்டிருந்தது எனக்கு நகையுடையதா யிராநின்றது; நகுகம் - அதனைக் கருதுந் தோறும் நாம் நகாநிற்போம்; அத்தகையாள் இப்பொழுது ஊடியிருப்பது காணாய்! எ - று.
(வி - ம்) பெயர் பெயர்த்தல் - புதல்வனை யீன்றதனாற் பருவப் பெயர் மாறுபடுதல். அவை மங்கை, மடந்தைப் பருவங்கள் கடந்து அரிவை, தெரிவைப் பருவமாதல் போல்வன. சூலெய்திய காலத்தும் பொறையுயிர்த்த சில நாளளவும் சிற்சில மகளிர்க்கு அல்குற்பக்கமெங்கும் சுட்டிசுட்டியாகத் தேமல்போல ஒளிர்வது தித்தியெனப்படும். மெய்ப்பாடு - வருத்தம் பற்றிய நகை, பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை) பெயர் பெயர்த்தல் - மனையோள் என்னும் பெயரினுங்காட்டில் மகப்பெற்றமையால் தாய் என்னும் பெயர் சிறந்து தோன்றுதல் எனினுமாம். கடுஞ்சூல் - முதற்சூல். மனைக்கு விளக்குப் போன்ற மகவீன்று கிடத்தலின் நகர் விளங்கக் கிடந்தோள் என்றான், 'கை புதைத்ததுவே' என்றும் பாடம்.
(370)