(து - ம்) என்பது, தலைமகள் களவின்கண்ணே தன்னை இல்வயிற் செறிப்பரென்று அஞ்சி வருந்தலும் அதுகண்ட தோழி, நீ துறைவன் வந்து முயங்குமாறு விரும்பி வருந்தியதனை இவ்வூர் நோக்கிப் பிறிதொன்றாகக் கருதி அன்னை கொடுத்த கோடு உலைந்ததற்கு வருந்தாதேயென்று கூறாநிற்கும்; ஆதலால் நின்னை இல்வயிற்செறிப்பாரல்லர்; நீ வருந்துவது தகுதியுடையது அன்றென அவள் ஆற்றுமாறு கூறாநிற்பது.
(இ - ம்) இதற்கு, "என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்” (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.
| அழிதக் கன்றே தோழி கழிசேர்பு |
| கானல் பெண்ணைத் தேனுடை அழிபழம |
் | வள்ளிதழ் நெய்தல் வருந்த மூக்கிறுபு |
| அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டெனக் |
5 | கிளைக்குருகு இரியுந் துறைவன் வளைக்கோட்டு |
| அன்ன வெண்மணற்று அகவயின் வேட்ட |
| அண்ணல் உள்ளமொடு அமர்ந்தினிது நோக்கி |
| அன்னை தந்த அலங்கல் வான்கோடு |
| உலைந்தாங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு |
10 | இனையல் என்னும் என்ப மனையிருந்து |
| இருங்கழி துழவும் பனித்தலைப் பரதவர் |
| திண்திமில் விளக்கம் எண்ணுங் |
| கண்டல் வேலிக் கழிநல் லூரே. |
(சொ - ள்) தோழி கானல் பெண்ணைத் தேன் உடை அழிபழம் - தோழீ! கடற்கரைச் சோலையிலுள்ள பனையின் தேனையுடைய அழிந்த பழம்; மூக்கு இறுபு கழிசேர்பு வள் இதழ் நெய்தல் வருந்த அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென - மூக்கு இற்றுக் கழியை அடைந்து பெரிய இதழையுடைய நெய்தல் வருந்துமாறு அள்ளுதலமைந்த கரிய சேற்றிலே புதையும்படி விழுந்ததனால்; கிளைக் குருகு இரியுந் துறைவன் - அவ்வோசைக்கு அஞ்சி்ச் சுற்றத்தையுடைய நாரைகள் இனத்தோடு இரிந்தோடாநிற்கும் நீர்த்துறையையுடைய நின் காதலன்; வளைக்கோடு அன்ன வெள் மணற்று அகவயின் - வளையாகிய சங்கு போன்ற வெளிய மணலையுடையதாகிய இடத்தில்; வேட்ட அண்ணல் உள்ளமொடு அமர்ந்து - முயங்க விரும்பிய நினது பெருந்தகை கொண்ட உள்ளத்தொடு பொருந்துமாறு; மனை இருந்து - மகளிர் இல்லின்கண் இருந்து வருவிருந்தோம்பும் இயற்கையாலே; இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர் - கரிய கழியிடத்து மீனைத் தேடுகின்ற குளிரால் நடுங்கும் பரதவருடைய; திண்திமில் விளக்கம் எண்ணும் - திண்ணிய மீன் படகிலிருக்கும் விளக்குகளை எண்ணுகின்ற; கண்டல் வேலிக் கழி நல் ஊர் - கண்டல் மரத்தை வேலியாகவுடைய கழி சூழ்ந்த நம்முடைய நல்ல ஊரானது; இனிது நோக்கி அன்னை தந்த அலங்கல் வான் கோடு உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு இனையல் என்னும் - இனிதாக நோக்கி அன்னை நினக்குக் கொடுத்த அசைகின்ற குழையுடைய பெரிய கோடு குலைதலாலே நீ வருந்துவது போலக் கருதி அஞ்சி 'நிகழ்ந்ததற்கு நீ வருந்தாதே கொள்' என்று கூறாநிற்கும்; இங்ஙனம் கூறுவதனால் இல்வயிற் செறியார்; அழிதக்கன்று - ஆதலின் நீ மனம் அழிவது தகுதியுடையதன்று காண்! எ - று.
(வி - ம்) மணற்று - மணலையுடையது என்னும் முற்றெச்சம். கோடு - மீன் உணங்க லோம்புமாறு புள்ளோப்புதற்குக் கொடுத்த கோல். என்ப : அசைநிலை. விளக்கெண்ணுதல் - அவர் கரையேறியவுடன் அவரையோம்புமாறு இத்துணையோருள்ளாரென் றறிய வேண்டிப் போலும்.
உள்ளுறை :- பனம்பழம் நெய்தல் வருந்தச் சேற்றில் விழக்கண்டு குருகினம் இரியுமென்றது தலைமகன் களவொழுக்கங்கெட நின்னை மணப்பின் அலர்வாய்ப்பெண்டிர் இரிந்தொழிவ ரென்றதாம்.
இறைச்சி :- மகளிர் இல்லிலிருந்து பரதவர் தம் மீன் பிடிக்கும் படகின் விளக்கை எண்ணுமென்றது, நாம் மனையின் கணிருந்து காதலனது கைவிடலானாகிய பழியை எண்ணாநின்றோம் என்றதாம். சிறைப்புறமென்றலால் அவனறியுமாற்றானே கூறினளாதலின் இவ்வாறு உள்ளுறையும் இறைச்சி கொள்ளலாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.
(பெரு - ரை) தோழி ஊர் நீ துறைவனை வேட்டநெஞ்சமொடு வருந்தியிருத்தலை அறியாமல் அன்னை தந்த கோட்டால் நீ அங்ஙனம் உலைந்ததாகக் கருதி நினக்கிரங்கி 'அடைந்ததற்கு இனையல்' என்று தேற்றாநிற்கும். ஆதலால் நின் களவொழுக்கத்தை இவ்வூர் அறிந்திலாமை கண்டேம். எனவே நின்னை இற்செறியார் காண், நீ அழிதல் வேண்டா என்று ஆற்றுவித்தபடியாம்
(372)