திணை : குறிஞ்சி.

     துறை : இது, செறிப்பறி வுறீஇயது.

     (து - ம்) என்பது, களவின் வழிவந் தொழுகுந் தலைமகன் ஒருசிறை வந்திருந்தான் அஃது அறிந்து விரைய மணம்புரிந்து கொள்ளுமாறு தோழி தலைவியை நெருங்கி, 'நம்முடைய மெய்வேறுபா டெல்லாம் அன்னை கண்டு ஐயங்கொண்டு நம்மை இல்வயிற்செறித்து ஓம்புமாறு கருதினமையால், நம் காதலனொடு இன்றுகாறும் விளையாடி யிருந்தது போல நாளையும் விளையாட இயலுமோ வென நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்) இதற்கு, "களனும் பொழுதும் . . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்." (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    
முன்றில் பலவின் படுசுளை மரீஇப் 
    
புன்தலை மந்தி தூர்ப்பத் தந்தை 
    
மைபடு மால்வரை பாடினள் கொடிச்சி 
    
ஐவன வெண்நெல் குறூஉம் நாடனொடு 
5
சூருடைச் சிலம்பின் அருவி ஆடிக் 
    
காரரும்பு அவிழ்ந்த கணிவாய் வேங்கைப் 
    
பாவமை இதணம் ஏறிப் பாசினம் 
    
வணர்குரல் சிறுதினை கடியப் 
    
புணர்வது கொல்லோ நாளையும் நமக்கே. 

     (சொ - ள்) புன் தலை மந்தி முன்றில் பலவின் படு சுளை மரீஇ தூர்ப்ப - தோழீ! இன்று அன்னை நம்மை நோக்கி ஐயப்பாடெய்தி இல்வயிற் செறிப்பக் கருதியதனால் மெல்லிய தலையையுடைய மந்தி இல்லின்முன்புள்ள பலாமரத்திலிருந்து அதன் பழத்தைக் கீண்டு நிறைந்த சுளைகளை யுண்டு அவற்றின் வித்தினைக் கீழே யுதிர்ப்ப; கொடிச்சி தந்தை மைபடு மால்வரை பாடினள் வெள் ஐவன நெல் குறூஉம் நாடனொடு - அயலிலே நின்ற கொடிச்சி தன் தந்தையினது மேகந்தவழும் கரிய மலைவளம் பாடி வெளிய ஐவன நெல்லைக் குத்துகின்ற மலைநாடனாகிய நம் காதலனொடு; சூர் உடைச் சிலம்பின் அருவி ஆடிக் கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை - அச்சஞ் செய்யும் மலைப்பக்கத்திலுள்ள அருவியாடிக் கரிய நிறத்தையுடைய அரும்பு மலர்ந்த சோதிடம் வல்லார் போன்ற வேங்கை மரத்தின்மேலே கட்டிய; பா அமை இதணம் ஏறி - பரப்பமைந்த பரண்மீது ஏறி; வணர்குரல் சிறுதினைப் பாசினம் கடிய - வளைந்த கதிர்களையுடைய சிறிய தினைப்புனத்தின்கண்ணே வருகின்ற பசிய கிளியினத்தைக் கடிந்து போக்குமாறு; நாளையும் நமக்கும் புணர்வதுகொல்லோ - இன்றிருந்தது போல நாளையும் நமக்குப் பொருந்துவதாமோ? அங்ஙனம் பொருந்தாது போலும்; எ-று.

     (வி - ம்) வேங்கை அரும்புங் காலம் தினைமுற்றுமாதலின் அரும்பியது கண்ட கானவர் தினைகொய்ய ஈண்டுவர்; அதுபற்றிச் சோதிடம் வல்லார் போறலின் வேங்கை கணியெனப்பட்டது.

     உள்ளுறை :-மந்தி பழத்தின் சுளையைத் தின்று அதன் வித்தினைக் கீழ் உகுப்பக் கொடிச்சி வரைபாடி நெற்குறுவாள் என்றது, தலைமகன் தலைமகளது நலனைக் களவினுண்டு அதனாலாய பழிச்சொல்லைப் பரவவிட அன்னை வேலனை யழைத்து வெறியெடுத்து முருகனைப் பாடியாட்டைச் சிதைக்குமே என்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.

     (பெரு - ரை) கணித் தொழில் வாய்த்துள்ள வேங்கை எனினுமாம்.

(373)